“மோடியின் வாஷிங் மெஷினும் மிரட்டப்பட்ட தினகரனும் ஓ.பி.எஸ்-ஸும்!” – தேனி பிரசார கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் விளாசல்

நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ள முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின், தேனி மாவட்டம், லட்சுமிபுரத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில், தேனி தொகுதி வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன், திண்டுக்கல் வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோரை அறிமுகப்படுத்தி, இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டு உரையாற்றினார்.

அவர் பேசுகையில், “அமைதியான இந்தியாதான் – வளர்ச்சியான இந்தியாவாக வளர முடியும். நம்முடைய எதிர்காலத் தலைமுறைக்கு, அமைதியான இந்தியாவை உருவாக்கி வழங்கும் கடமை வாக்காளர்களான உங்கள் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. அதை மனதில் வைத்து, இந்தியா கூட்டணிக்கு நீங்கள் வாக்களிக்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து பேசிய அவர், பாஜக கூட்டணியில் ஓ.பி.எஸ் மற்றும் தினகரனை சேர்த்துக்கொண்டிருப்பது குறித்து பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்தார். இது குறித்து அவர் பேசுகையில், “தேனி தொகுதியில் பாஜக. ஆதரவு பெற்ற வேட்பாளராக ஒருவர் நிற்கிறார். யார்? தினகரன்! இதே பாஜக-வைப் பற்றி அவர் என்ன சொல்லி இருந்தார்? ‘பாஜக. கூட்டணியில் சேர்வது தற்கொலை செய்வதற்குச் சமம். யாராவது தெரிந்தே கிணற்றில் விழுவார்களா?’ என்று கேட்டவர். ‘இப்போது என்ன தெரிந்தே கிணற்றில் விழ வந்திருக்கிறாரா?’ என்பதுதான் தேனிக்காரர்கள் கேட்க வேண்டிய கேள்வி.

அதுமட்டுமல்ல, இன்னும் பேசியிருக்கிறார். ‘டெல்லியில் வேண்டும் என்றால் பெரிய கட்சியாக – ஆளும் கட்சியாக பாஜக இருக்கலாம். ஆனால், தமிழ்நாட்டில் அதற்கு என்ன இருக்கிறது? நோட்டாவுடன் போட்டி போடக் கூடிய கட்சிதான் பாஜக” என்று சொன்னவர்தான் இந்த தினகரன். அவரைப் பார்த்து நீங்கள் கேட்க வேண்டும். இன்று நோட்டாவுடன் போட்டி போடத் தேனிக்கு வந்திருக்கிறீர்களா? இல்லை உங்களை வழக்குகளில் இருந்து காப்பாற்றிக் கொள்ள வந்திருக்கிறீர்களா?

நான் சென்ற கூட்டங்களில் சொன்னது போன்று, மோடி வாரண்டியுடன் ஒரு வாஷிங் மெஷின் வைத்திருக்கிறார். அதில் ஊழல்வாதிகளை உள்ளே அனுப்பினால், அவர்கள் சுத்தமாகி வெளியே வந்துவிடுவார்கள். ‘மேட் இன் பி.ஜே.பி’ வாஷிங் மெஷின் அது! மேட் இன் ஜப்பான், மேட் இன் அமரிக்கா, மேட் இன் இங்கிலாந்து வாஷிங் மெஷின் இது. அந்தக் கட்சியின் கூட்டணி வைத்துக் கொண்டால், அந்த வாஷிங் மெஷின் வெளுத்துவிடும். அப்படி வெளுக்கப்பட்டு பாஜக கூட்டணி சார்பில் நிற்கின்றவர்தான் தினகரன்.

தினகரன்

1995-96-ஆம் ஆண்டுகளில் வெளிநாட்டில் இருந்து 62 லட்சத்து 61 ஆயிரம் அமெரிக்க டாலர்களை அங்கீகாரம் அற்ற முகவர் மூலமாகப் பெற்று, இங்கிலாந்தில் இருக்கும் நிறுவனங்களுக்கு சட்டவிரோதமாகக் கொடுத்ததாக, அந்நியச் செலாவணி மோசடியில் சிக்கியவர்தான் இந்த தினகரன். ‘ஃபெரா’ போன்ற சொற்களைத், தமிழ்நாட்டில் முதலில் அறிமுகப்படுத்திய பெருமை தினகரனுக்குத்தான் உண்டு. இந்த வழக்கை 30 ஆண்டுகளாக இழுத்துக் கொண்டு இருக்கிறார். இந்த வழக்கில் அவருக்கு 28 கோடி ரூபாயை அமலாக்கத்துறை அபராதமாக விதித்தது. இப்போது புரிகிறதா! ஏன் இவர் பாஜக-வுக்குச் சென்றார் என்று!

அதுமட்டுமல்ல, அம்மையார் மறையும்வரை, போயஸ் கார்டனுக்குள் நுழைய முடியாமல் தடை செய்யப்பட்டோர் பட்டியலில் இருந்தவர் தினகரன். காரணம் என்ன? அம்மையார் சொத்துக் குவிப்பு வழக்கோடு தன்னுடைய வழக்கைச் சேர்த்தால், தனக்கும் தண்டனை கிடைத்துவிடும். அதனால் இரண்டு வழக்கையும் தனியாக நடத்த வேண்டும் என்று அம்மையார் ஜெயலலிதாவின் வக்கீலையே மிரட்டியதால் விரட்டப்பட்டவர். கடைசியாக, ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு, சசிகலாவால் கட்சிக்குள் சேர்க்கப்பட்ட தினகரன்தான், இப்போது வழக்குகளுக்கு பயந்து, சந்தர்ப்பவாதக் கூட்டணி அமைத்து, மோடி வாஷிங் மெஷின் மூலமாகத் தேனிக்குள் நுழைந்து இருக்கிறார்.

இப்படிப்பட்ட சந்தர்ப்பவாதிகளைத் தோற்கடிக்க வேண்டும்! தேனி மக்களே ஏமாந்துவிடாதீர்கள்! கடந்த முறை பன்னீர்செல்வம் மகனிடம் ஏமாந்துவிட்டீர்கள்! இந்த முறை, சசிகலா குடும்பத்திடம் ஏமாந்துவிடாதீர்கள். ஓ.பி.எஸ் நிலைமை என்ன? இரண்டு முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தவரை – இப்போது சட்டமன்ற உறுப்பினராக இருப்பவரை அவமானப்படுத்த – அவரை மிரட்டி ராமநாதபுரத்தில் நிற்க வைத்திருக்கிறது பாஜக தலைமை. தினகரனை மிரட்டித் தேனியில் நிற்க வைத்திருக்கிறார்கள்.

தமிழுக்கும் – தமிழினத்திற்கும் – தமிழ்நாட்டிற்கும் வஞ்சகம் செய்யும் பா.ஜ.க. கூட்டத்திற்கும் – துரோகம் இழைக்கும் பழனிசாமி – பன்னீர்செல்வம் – தினகரன் – பா.ம.க. ஆகிய அடிமைக் கூட்டத்திற்கும், திண்டுக்கல், தேனி மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும்.

அதற்கு, தேனி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் தங்க தமிழ்ச்செல்வனுக்கு உதயசூரியன் சின்னத்திலும், திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராகப் போட்டியிடும் சச்சிதானந்தத்துக்கு அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திலும் வாக்களிக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Er min hest syg ? hesteinternatet. Taxi driver charged with attempted murder on policeman !. Sunworld 8 gulet – simay yacht charters – private yacht charter turkey & greece.