“இந்த தேர்தல் இந்தியாவை மீட்பதற்கான அறப்போராட்டம்!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் இந்தியாவை மீட்பதற்கான அறப்போராட்டம் என்றும், இந்தப் போரில் ஓயாது உழைத்தால் உறுதியான வெற்றி நிச்சயம் என்றும் திமுக-வினருக்கு எழுதியுள்ள கடிதத்தில் அக்கட்சித் தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் அறைகூவல் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் திமுக-வினருக்கு எழுதியுள்ள கடிதத்தில், தமிழ்நாடு இழந்த உரிமைகளை மீட்கவும், இந்தியாவில் உள்ள மாநிலங்கள் அனைத்தும் வளம் பெறவும், இந்திய அரசியலமைப்புச் சட்டம் வலியுறுத்துகிற கூட்டாட்சிக் கருத்தியலைக் காத்திடவும், பாசிச சக்திகளை வீழ்த்திடவும் நாடாளுமன்றத் தேர்தல் எனும் ஜனநாயகக் களத்தை எதிர்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.
‘ஸ்டாலின்தான் வேட்பாளர்’
மேலும், “தமிழ்நாடு மீண்டும் உரிமையுடன் திகழ்வதற்காக மட்டுமின்றி, இந்தியாவில் உண்மையான ஜனநாயகமும் கூட்டாட்சிக் கருத்தியலும் நிலைபெறவும் கழகத்தின் சார்பில் வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளன. ஏழை – நடுத்தர மக்களை அன்றாடம் பாடுபடுத்தும் சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயர்வைக் கட்டுப்படுத்தி, 500 ரூபாயாகக் குறைப்பது, பெட்ரோல் – டீசல் விலைக் குறைப்பு, தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடிகளை முற்றிலுமாக அகற்றுவது உள்ளிட்ட மக்கள் நலன் சார்ந்த வாக்குறுதிகளை வழங்கியிருக்கிறோம்.
கழகத்தின் சார்பில் போட்டியிடும் 21 வேட்பாளர்களில் அனுபவமிக்கவர்களும் உண்டு; அறிமுக வேட்பாளர்களும் உண்டு. அனைவருமே உதயசூரியன் சின்னத்தின் வேட்பாளர்கள் என்பது மட்டுமே உடன்பிறப்புகளாம் உங்கள் இதயச்சுவரில் பதிய வேண்டிய செய்தி. கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளும் நமது தொகுதிகள்தான். அவர்களின் வேட்பாளர்களும் நம்மவர்கள்தான். அவர்களின் சின்னங்களும் நம்முடையதுதான்.
நாற்பது தொகுதிகளில் தனித்தனி வேட்பாளர்கள் நின்றாலும், அனைத்துத் தொகுதிகளிலும் உங்களில் ஒருவனான இந்த ஸ்டாலின்தான் வேட்பாளராக நிற்கிறேன் என்கிற உணர்வுடனும் கொள்கை உறவுடனும் இந்தியா கூட்டணி வெற்றிபெற்று ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திட வேண்டும் என்ற உத்வேகத்துடனும் களப்பணியாற்றிட வேண்டும் என ஒவ்வொரு உடன்பிறப்பையும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
நாம் சந்திக்கும் எதிரிகள் இந்தியாவின் எதிரிகள்
2024 நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் நாம் சந்திக்கும் எதிரிகள் நமக்கான அரசியல் எதிரிகள் மட்டுமல்ல, இந்தியாவின் எதிரிகள். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எதிரிகள். இந்தியாவின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் எதிரிகள். இந்தியாவின் பன்முகத்தன்மைக்கும் மதச்சார்பின்மைக் கொள்கைக்கும் எதிரிகள். கூட்டாட்சிக் கருத்தியலுக்கு எதிரிகள். மொத்தமாகச் சொல்வதென்றால், மனித குலத்தின் எதிரிகள்.
பொய் சொல்ல அஞ்சாதது மட்டுமல்ல, பொய்களை மட்டுமே சொல்வது என்பதைக் குறிக்கோளாகவே கொண்டிருக்கிறார்கள் ஒன்றிய பா.ஜ.க ஆட்சியாளர்கள். பிரதமர் என்கிற மாண்புக்குரிய பொறுப்பை வகிப்பவர் தொடங்கி ஒன்றிய அமைச்சர்கள், இணை அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் என அத்தனை பேருமே பொய்யை மட்டுமே பரப்புரையாக மேற்கொண்டு வருவதை கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டின் வாக்காளர்கள் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
தமிழ்நாட்டிற்குக் கடந்த பத்தாண்டுகால ஆட்சியில் என்னென்ன திட்டங்களைக் கொண்டு வந்தோம் என்பதைச் சொல்வதற்கு எதுவுமில்லாமல் தி.மு.க.வை விமர்சிப்பதும், தி.மு.க. ஆட்சி மீது வீண்பழி போடுவதும், தி.மு.க. கூட்டணி பக்கம்தான் தமிழ்நாட்டு மக்கள் இருக்கிறார்கள் என்பது உறுதியாகத் தெரிவதால், தமிழர்களையே தீவிரவாதிகள் எனச் சித்தரிப்பதும் பா.ஜ.க.வின் பரப்புரை ஃபார்முலாவாக இருக்கிறது.
இதுவரை நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல்கள் அனைத்தும் யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதை முடிவு செய்வதற்கான தேர்தல்களாக இருந்தன. இந்த முறை யார் ஆட்சிக்கு வரவே கூடாது என்பதற்கான தேர்தல் களமாக அமைந்துள்ளது. இது வெறும் தேர்தல் களமல்ல.. ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டிய அறப்போர்க்களம். இந்தப் போரில் நாம் வென்றாக வேண்டும். ஓயாது உழைத்தால் உறுதியான வெற்றி நிச்சயம்” என அதில் உறுதிபட தெரிவித்துள்ளார்.