தூத்துக்குடி, நெல்லைக்கு ரூ. 6000 நிவாரண தொகை… முதல்வரின் துயர் தீர்க்கும் அறிவிப்பு!
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் வெள்ளப் பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்து நிவாரண தொகையை அறிவித்தார். அதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணிகள் மற்றும் நிவாரண நடவடிக்கைகள் மேலும் தீவிரமாக முடுக்கி விடப்பட்டுள்ளதால், வெள்ள பாதிப்பிலிருந்து தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்கள் விரைவிலேயே மீண்டெழும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
கடந்த வாரம் திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய தென்மாவட்டங்களில் பெய்த கனமழையால் அம்மாவட்டங்கள், குறிப்பாக தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்கள் கடும் வெள்ள பாதிப்பைச் சந்தித்தன. அதிலும் தூத்துக்குடி மாவட்டத்தின் பல பகுதிகள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டன. நெல்லை – தூத்துக்குடி மற்றும் நெல்லை – திருச்செந்தூர் சாலைகளையொட்டிய பல கிராமங்கள் வெள்ள நீர் சூழ்ந்து தீவு போல் காட்சியளித்தன. ஶ்ரீவைகுண்டம் அதற்கு மிக சிறந்த உதாரணம். அதேபோன்று தான் திருச்செந்தூர் – தூத்துக்குடி மார்க்கத்தில் உள்ள காயல்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளும் அதிக மழை வெள்ளத்தை எதிர்கொண்டன. மேலும் தூத்துக்குடி பேருந்து நிலையம், காய்கறி சந்தை உள்ளிட்ட நகரின் பல பகுதிகளிலும் வெள்ள நீரில் தத்தளித்தன.
அதே சமயம், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளிலுள்ள பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்கு அவசரகால உதவிகளை வழங்கிடவும் மாநில அரசு நிர்வாகம் முழு அளவில் களமிறங்கியது. அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமிழக அதிகாரிகள், ஊழியர்கள், களப்பணியாளர்கள், SDRF மற்றும் NDRF குழுவினர் முழு வீச்சில் இறங்கி உள்ளனர். 15,000-க்கும் அதிகமானோர் மீட்கப்பட்டு சுமார் 200 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கு உணவு, குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அளிக்கப்பட்டன.
இந்த கனமழையில் அதிக அளவு பாதிப்பைச் சந்தித்த மாவட்டம் தூத்துக்குடி மாவட்டம் என்பதாலும், மாவட்டத்தின் சில பகுதிகளில் இன்னமும் வெள்ள நீர் வடியாத நிலை இருப்பதாலும், அங்கு மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆங்காங்கே சிக்கியிருக்கும் மக்கள் முப்படை மூலம் பத்திரமாக மீட்கப்பட்டு வருகின்றனர். மேலும் தமிழ்நாடு அரசின் துரித நடவடிக்கையால் பெரும் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த மழையால் மக்கள் வாழ்வாதாரம் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது அவர்களுக்கு தேவையான உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் செய்யப்படுகிறது.
நிவாரணப் பணிகளில் கனிமொழி
இந்நிலையில் தூத்துக்குடியில் கடந்த 18 ஆம் தேதியில் இருந்தே திமுக எம்.பி கனிமொழி மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் இரவு பகலாக ஈடுபட்டு வருகிறார். கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு நேரடியாக சென்று அங்கு தேங்கி உள்ள மழைநீர் வெள்ளத்தில் இறங்கி மக்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து வருகிறார். காரில் செல்ல முடியாத பகுதிகளுக்கு இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து சென்றும் பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகளைக் கேட்டு, நிவாரண நடவடிக்கைகளுக்கு உதவி வருகிறார்.
தூத்துக்குடியில் முதலமைச்சர் ஆய்வு
இந்த நிலையில், கனமழையால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று முதலில் தூத்துக்குடி சென்றடைந்தார். தூத்துக்குடி, மறவன் மடம் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து, வெள்ள சேத விவரங்களையும், அவர்களது கோரிக்கைகளையும் கேட்டறிந்து, அவர்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டார். அப்போது, பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் உரிய நிவாரண உதவிகள் வழங்கப்படும் என்று தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, மறவன் மடம் பகுதியில் வெள்ளத்தால் சேதமடைந்த பாலத்தை சீரமைக்கும் பணிகளை பார்வையிட்டார்.
பின்னர் செயின்ட் மேரிஸ் பள்ளியில் உள்ள நிவாரண மையத்திற்கு சென்று, அங்கு தங்க வைக்கப்பட்டுள்ள மக்களிடம் அவர்களுக்கு செய்து தரப்பட்டுள்ள வசதிகள் குறித்து கேட்டறிந்து, முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு அரிசி, வேஷ்டி, சேலை, போர்வை, பாய், பிஸ்கட் மற்றும் ரொட்டி, பால் பவுடர், தண்ணீர் பாட்டில் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வழங்கினார். அதனைத் தொடர்ந்து, எட்டையபுரம் 3-வது கேட் மேம்பாலத்திலிருந்து வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை பார்வையிட்டு, வெள்ள நீரை அகற்றிட துரித நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
பின்னர், குறிஞ்சி நகர் போல்பேட்டையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியை பார்வையிட்டு, ஆய்வு செய்து, பொதுமக்களிடம் பாதிப்புகளின் விவரங்கள் குறித்து கேட்டறிந்து, அங்கு சூழ்ந்துள்ள வெள்ளநீரை அகற்றும் பணியினை விரைந்து மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். முதலமைச்சரின் இந்த வருகையைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணிகள் மற்றும் நிவாரண நடவடிக்கைகள் மேலும் தீவிரமாக முடுக்கி விடப்பட்டுள்ளன.
இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தைத் தொடர்ந்து, இன்று மாலை திருநெல்வேலி மாவட்டத்திலும் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து, அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
தூத்துக்குடி, நெல்லைக்கு ரூ. 6000 நிவாரண தொகை
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் துயர் துடைக்கும் வகையில் அமைந்த முதலமைச்சரின் இந்த வருகையினால், சீரமைப்பு பணிகள் மற்றும் நிவாரண நடவடிக்கைகள் மேலும் முடுக்கிவிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடவே மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண உதவியையும் முதலமைச்சர் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எதிர்பார்த்தபடியே அதனை அறிவித்தார்.
அதன்படி, நெல்லை, தூத்துக்குடியில் கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ. 6000 வழங்கப்படும். தென்காசி, கன்னியாகுமரியில் ரூ. 1000 நிவாரண தொகையாக வழங்கப்படும். பாதிக்கப்பட்ட விவசாய நிலம் ஹெக்டேருக்கு ரூ. 17,000 வழங்கப்படும் பாதிக்கப்பட்ட குடிசை வீடுகளுக்கு வழங்கப்படும் இழப்பீடு ரூ.10,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்தார்.