கள்ளக்குறிச்சி விஷச் சாராய சம்பவம்: அரசின் அதிரடி நடவடிக்கைகள்!

ள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் காலனியில் மெத்தனால் கலந்த சாராயம் அருந்தியதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ள நிலையில், இந்த சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விஷச் சாராயம் அருந்தியதால் உடல்நலம் பாதிக்கப்பட்டு பலர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை முதலமைச்சர் மேற்கொண்டுள்ளார்.

சஸ்பெண்ட்… சிபிசிஐடி விசாரணை… கைது

முதற்கட்டமாக இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரை பணியிடை நீக்கம் செய்தும், மாவட்ட ஆட்சியரை பணியிட மாற்றம் செய்தும் அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவைச் சேர்ந்த, காவல் துணைக் கண்காணிப்பாளர் தமிழ்செல்வன், கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய ஆய்வாளர்,கவிதா. திருக்கோவிலார் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் பாண்டி செல்வி, திருக்கோவிலூர் உதவி காவல் ஆய்வாளர் பாரதி மற்றும் அப்பகுதி காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்தன், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மனோஜ் ஆகியோரும் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் இவ்வழக்கினை தீர விசாரிக்கவும், தக்க மேல்நடவடிக்கைக்காகவும் உடனடியாக சிபிசிஐடி போலீஸார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. விசாரணை அதிகாரியாக ஏ.டி.எஸ்.பி கோமதி நியமிக்கப்பட்டுள்ள நிலையில், சிபிசிஐடி போலீஸார் விசாரணையைத் தொடங்கி உள்ளனர்.

பாக்கெட் சாராயம் விற்ற கோவிந்தராஜ் என்கிற கண்ணுகுட்டி கனகு என்பவர் உட்பட இதுவரை 4 பேர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இதில் தீவிர விசாரணை மேற்கொண்டு, குறிப்பாக விஷச் சாராயம் தயாரிக்க மெத்தனாலை வழங்கியவர்களைக் கண்டறிந்து அவர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது.

நிவாரண நிதி

இதனிடையே உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் ரூபாயும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்குத் தலா 50,000 ரூபாயும் முதலமைச்சரின் பொதுநிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.

விசாரணை ஆணையம் அமைப்பு

இந்த நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணை மேற்கொண்டு, இது நிகழ்ந்ததற்கான அனைத்துக் காரணிகளைக் கண்டறியவும், எதிர்வரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் தமிழ்நாட்டில் மீண்டும் நடைபெறாமல் இருக்க, மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசுக்கு ஆலோசனைகளை வழங்கிடவும், ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் பி.கோகுல்தாஸ் தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைத்திட உத்தரவிட்டுள்ளதாகவும், இந்த ஆணையம், சம்பவம் குறித்து முழுமையாக விசாரித்து தனது பரிந்துரைகளை மூன்று மாதங்களுக்குள் வழங்கும் என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

நேரில் சென்ற அமைச்சர்கள்

மேலும் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து, ஆறுதல் தெரிவிக்க அமைச்சர்கள் எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன் ஆகியோர் நேற்று கள்ளக்குறிச்சி அனுப்பி வைக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து, இன்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் கள்ளக்குறிச்சிக்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்கிறார். அத்துடன் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை, பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனை, சேலம் மற்றும் விழுப்புரம் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ள நபர்களின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டுமென்றும், அங்கு அவர்களுக்குத் தேவையான சிறப்பு சிகிச்சை வழங்கப்படுவது உறுதி செய்யப்பட வேண்டுமென்றும் முதலமைச்சர் அறிவுறுத்தி உள்ளார்.

மூலகாரணம் என்ன..? இரண்டு நாளில் அறிக்கை

இந்த நிலையில், மெத்தனால் கலந்த விஷச்சாராய உற்பத்தியிலும், விற்பனையிலும் ஈடுபட்ட அனைவரும் உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டுமென்றும், சம்பவத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள மெத்தனால் இருப்பை முழுமையாகக் கண்டறிந்து, அவற்றைக் கைப்பற்றி அழித்திடவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்றும் தாம் அறிவுறுத்தி உள்ளதாக தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், விஷச்சாராய உற்பத்திக்குப் பயன்படுத்தப்பட்ட மெத்தனால் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது என்பதற்கான மூலகாரணத்தையும் காவல் துறையினர் கண்டுபிடிக்க அறிவுறுத்தியுள்ளதாகவும், உள்துறை முதன்மைச் செயலாளர் மற்றும் காவல் துறை இயக்குநர் ஆகியோர் கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு உடனடியாகச் சென்று, சம்பவம் குறித்து ஆய்வு மேற்கொண்டு அறிக்கை ஒன்றினை 2 தினங்களில் வழங்குவார்கள் என்றும் கூறியுள்ளார்.

முதலமைச்சரின் இந்த துரித நடவடிக்கைகள் மக்களிடையே ஆறுதலை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

台中健身房推薦 world gym費用、健身工廠費用 | [your brand]. vanderpump rules reunion snark and highlights for 5/24/2023. : 작은 프로젝트부터 시작할 수 있는 플랫폼.