உமா ரமணன்: இளையராஜா ரசிகர்களின் பிரியமான குரல்!
தமிழ் சினிமாவில் பூபாளமாக இசைத்த கு(யி)ரல் மவுனித்து போய்விட்டது. பிரபல பின்னணி பாடகி உமா ரமணனின் மறைவு திரையுலகுக்கு மட்டுமல்ல; இசை ரசிகர்களுக்கும் நிச்சயம் ஒரு சோகமான நிகழ்வுதான்.
35 வருடங்களாகப் பாடி வந்த உமா ரமணன், தனது கணவரும் பாடகருமான ஏ.வி.ரமணன் மற்றும் மகன் விக்னேஷ் ரமணனுடன் சென்னை அடையாறில் வசித்து வந்தார். கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில், உமா ரமணன் காலமானார்.
அடிப்படையில் கர்நாடக இசைப் பாடகியான இவர், பாரதிராஜாவின் இயக்கத்தில் 1980 ஆம் ஆண்டு வெளியான நிழல்கள் படத்துக்காக, தீபன்சக்கரவர்த்தியுடன் இணைந்து பாடிய ‘பூங்கதவே தாழ் திறவாய்’ பாடல் மூலம் பிரபலமானார்.
ராஜா ரசிகர்களின் பிரியமான குரல்
தொடர்ந்து பன்னீர் புஷ்பங்கள் படத்தில் ‘ஆனந்த ராகம்’, மெல்லபேசுங்கள் படத்தில், ‘செவ்வந்திப் பூக்களில் செய்த வீடு…’, தூறல் நின்னு போச்சு படத்தில் ‘ பூபாளம் இசைக்கும்… ‘ , ஒரு கைதியின் டைரி படத்தில் ‘பொன்…மானே… கோபம்… ’, கேளடி கண்மணி படத்தில் ’நீ பாதி… நான் பாதி..’, தென்றலே என்னைத் தொடு படத்தில் ‘கண்மணி நீ வர காத்திருந்தேன்…’ உட்பட பல சூப்பர் ஹிட் பாடல்களைப்பாடியுள்ளார்.
1983 ல் வெளியான ‘பகவதி புரம் ரயில்வே கேட்’ படத்தில் இடம்பெற்ற “செவ்வரளி தோட்டத்தில உன்ன நெனச்சு தேடிக்கிட்டு பாடுதய்யா இந்த மனசு…” என இசைஞானி இளையராஜாவுடன் இவர் பாடிய அந்த பாடல், 1980 -களின் இசை ரசிகர்களுக்கு அவ்வளவு பிரியமான குரலாக இருந்தது.
இவர் அதிகமாக பாடியது இளையராஜா இசையமைத்த படங்களில்தான். இளையராஜா இவருக்கு கொடுத்த பாடல்கள் அத்தனையுமே சூப்பர் ஹிட் ரகமாகவே இருந்தது. அவற்றையெல்லாம் ராஜா ரசிகர்கள், சமூக வலைதளங்களில் ஒவ்வொன்றாக பட்டியலிட்டு சிலாகித்து வருகின்றனர்.
இளையராஜாவின் இசையில் அதிக பாடல்கள் பாடி இருந்தாலும், எம்.எஸ்.விஸ்வநாதன், வித்யாசாகர், மணிசர்மா, தேவா உட்படபல்வேறு இசை அமைப்பாளர்களின் இசையிலும் அவர் பாடியுள்ளார். கடைசியாக , திருப்பாச்சி படத்தில் இடம்பெற்ற‘கண்ணும் கண்ணும்தான் கலந்தாச்சு’ என்ற பாடல்தான் கடைசி பாடல்.
இவரது கணவர் ஏ.வி.ரமணனும் பாடகர்தான்.