இனி, உங்கள் வீட்டிலிருந்தே புறநகர் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்!
காகிதப் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும் என்ற நோக்கத்திலும், பயணிகள் டிக்கெட் வாங்குமிடத்தில் வரிசையில் நிற்பதை தவிர்க்கும் நோக்கத்திலும் யுடிஎஸ் (UTS) என்ற மொபைல் செயலியை ரயில்வே நிர்வாகம் அறிமுகப்படுத்தி, அது செயல்பாட்டிலும் உள்ளது.
இந்த செயலி மூலம் தொலை தூரங்களுக்குச் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் பயணிக்க முன் பதிவு இல்லாத டிக்கெட்டுகள், புறநகர் ரயில்களுக்கான டிக்கெட்டுகள், பிளாட்பாரம் டிக்கெட், சீசன் டிக்கெட்டுகள் ஆகியவற்றை புக் செய்ய முடியும். இதனால், பயணிகள் டிக்கெட் கவுன்ட்டர்கள் முன்பு நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. இதன் மூலம் பயணிகளின் நேரம் வெகுவாக மிச்சமாகிறது.
அதே சமயம், புறநகர் ரயில்களுக்கான டிக்கெட்டுகளை, புறநகர் பகுதிகளில் 5 கி.மீ தூரத்தில் இருந்து கொண்டும் ( முதலில் புற நகர் ரயில் நிலையத்தில் இருந்து 2 கி.மீ சுற்று வட்டார தூரமாக இருந்தது) புறநகர் அல்லாத பகுதிகளில் 20 கி.மீ தூரத்தில் இருந்து கொண்டும் ( முதலில் இது 5 கி.மீ தூரமாக இருந்தது ) பயணிகள், யுடிஎஸ் செயலி மூலம் புக் செய்துகொள்ளலாம் என்ற நிலையே தற்போது இருந்து வந்தது.
இனி வீட்டிலிருந்தே…
இந்த நிலையில், இனிமேல் சென்னை புறநகர் மற்றும் எம்ஆர்டிஎஸ் ரயில் பயணிகள், டிக்கெட் அல்லது பிளாட்பாரம் டிக்கெட்டுக்காக வரிசையில் நிற்க வேண்டியதில்லை. அவர்களது வீட்டிலிருந்தோ அல்லது ரயில் நிலையங்களுக்கு அருகில் இருந்தோ UTS செயலி மூலம் ஆன்லைனிலேயே இந்த டிக்கெட்டுகளை முன் பதிவு செய்து கொள்ளலாம் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
டிக்கெட் முன்பதிவு செய்த இரண்டு மணி நேரத்திற்குள் ரயில் நிலையத்தை சென்றடையும் முடியும் என்றால், பயணிகள் பிளாட்பாரம் டிக்கெட், புறநகர் டிக்கெட் மற்றும் முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகளை வீட்டிலிருந்தே முன்பதிவு செய்ய முடியும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
ரயில் நிலையத்திற்குள் கட்டுப்பாடு தொடரும்
அதாவது, முன்னர் ரயில் நிலையத்திற்கு வெளியே முன் பதிவு செய்வதற்கான தூரத்திற்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த வரம்பு தற்போது நீக்கப்பட்டுள்ளது. UTS செயலியை அதிகமானோர் பயன்படுத்துவதை ஊக்குவிக்கவும் கவுன்ட்டர்களில் வரிசைகளைக் குறைக்கவும் இந்த தூர கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தரப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம், பயணிகள் ரயில் நிலையத்திற்கு உள்ளே இருந்துகொண்டு இந்த செயலி மூலம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியாது. ஏனெனில் சிலர் டிக்கெட் எடுக்காமல் பயணித்துவிட்டு, ரயில் நிலையத்திற்குள் டிக்கெட் பரிசோதகரை பார்த்த பின்னர் டிக்கெட் எடுக்கக்கூடும் என்பதால், ரயில் நிலையத்துக்குள்ளேயே இருந்துகொண்டு UTS செயலி மூலம் டிக்கெட் முன்பதிவு செய்வதை தடுக்க, இந்த கட்டுப்பாடு தொடரும் என தெற்கு ரயில்வே மேலும் தெரிவித்துள்ளது.