வக்ஃப் மசோதா: போராட்டத்தைக் கையில் எடுத்த திமுக… சட்டசபையில் முழக்கமிட்ட ஸ்டாலின்!

வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் கடந்த மார்ச் 27 அன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பாஜக நீங்கலாக அனைத்துக் கட்சிகளாலும் ஒருமனதாக ஏற்றுக் கொண்டு நிறைவேற்றப்பட்டது.
மேலும், இம்மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று கடிதம் ஒன்றையும் எழுதி இருந்தார். இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் வக்ஃப் சட்டத் திருத்த மசோதா மீது நேற்று தீவிர விவாதம் நடந்ததைத் தொடர்ந்து நள்ளிரவில், 288 ஆதரவு வாக்குகளுடன் அம்மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. மசோதாவுக்கு எதிராக 232 உறுப்பினர்கள் வாக்களித்தனர்.
போராட்டத்தைக் கையில் எடுத்த திமுக
இந்த மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு எதிராக பல்வேறு கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில், இந்த பிரச்னையை தீவிரமாக கையிலெடுத்துப் போராட திமுக முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. அந்த வகையில், இன்று தமிழக சட்டப்பேரவை வளாகத்தில் திமுக எம்எல்ஏக்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து, மத்திய அரசை கண்டித்து போராட்டம் நடத்தினர்.
“இஸ்லாமியர்களை வஞ்சிக்காதே!”, “ஒன்றிய அரசே சிறுபான்மையினரை வஞ்சிக்காதே!”, “இஸ்லாமியர்களின் கோரிக்கைகளை நிராகரிக்காதே!” என்று கோஷங்கள் எழுப்பி, பதாகைகளை ஏந்தி தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
அதேபோன்று வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உறுப்பினர்கள் உறுதிமொழி ஏற்றனர். வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என்று முதல்வர் தலைமையில் உறுப்பினர்கள் முழக்கமிட்டனர். திமுக கூட்டணி கட்சிகளும் இப்போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

இதனிடையே கடுமையான எதிர்ப்புகளையும் மீறி வக்பு சட்ட மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது இந்திய அரசமைப்பின் மீதான ஒன்றிய அரசின் தாக்குதல் என்றும், இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடரும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் இன்று அறிவித்தார்.
இது தொடர்பாக பேசிய அவர், ” இந்தியாவில் இருக்கும் பெரும்பாலான அரசியல் கட்சிகளால் இந்த வக்பு சட்டத் திருத்தம் எதிர்க்கப்பட்டது. இவை அனைத்தையும் மீறி நாடாளுமன்ற மக்களவையில் வக்பு சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட்டிருப்பது மிகுந்த கண்டனத்துக்குரியது.
இந்தியாவில் இருக்கும் பெரும்பான்மைக் கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி ஒரு சில கூட்டணிக் கட்சிகளின் தயவால் அதிகாலை 2 மணியளவில் இத்தகைய சட்டத்தை நிறைவேற்றி இருப்பது இந்திய அரசியல் சட்டத்தின் கட்டமைப்பின் மீது செய்யப்பட்ட தாக்குதல்; மதநல்லிணக்கத்தைக் குலைக்கும் செயல். இதனை உணர்த்தும் வகையில் கருப்புச் சின்னத்தை அணிந்து இன்றைய பேரவை நடவடிக்கைகளில் நாங்கள் பங்கெடுக்கிறோம்.
வக்ஃப் வாரியத்தின் தன்னாட்சியை அழித்து, சிறுபான்மை இஸ்லாமிய மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் ஒன்றிய அரசின் சட்டத்துக்கு எதிராக தமிழ்நாடு போராடும்! போராடும்! போராடும்! அதில் வெற்றியும் பெறும்.
அரசியலமைப்புச் சட்டத்தின் மீதான தாக்குதலை சட்டபூர்வமாகவே தடுப்போம் என்று இந்த மாமன்றத்தில் உறுதி அளிக்கிறேன்” என்றார்.
அவையில் முழக்கம்… அதிமுகவும் ஆதரவு

இந்த நிலையில், இந்த விவகாரத்தில் தமிழக அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் அதிமுக ஆதரவு அளிக்கும் என அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார். இந்த மசோதா திரும்பப் பெறப்பட வேண்டும் என்றும் இன்று சட்டசபையில் பேசிய அவர் தெரிவித்தார்.
இதனிடையே இந்த விவகாரத்தில் திமுகவின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, வக்ஃபு வாரிய சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உறுப்பினர்கள் உறுதிமொழி ஏற்றனர். வக்ஃபு வாரிய சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என்று முதல்வர் தலைமையில் உறுப்பினர்கள் முழக்கமிட்டனர்.
பாஜக வெளிநடப்பு
இதற்கு கண்டனம் தெரிவித்து, தமிழக சட்டப்பேரவையில் இருந்து பாஜக. சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன், “பொதுவாக, எதிர்க்கட்சியினர்தான் கருப்பு பேட்ஜ் அணிந்து சபைக்கு வருவார்கள். ஆனால், இங்கு ஆளுங்கட்சியினரே கருப்பு பேட்ஜ் அணிந்து வந்துள்ளனர். இது தேவையற்றது. சட்டமன்றத்தில் முதலமைச்சர் கோஷம் எழுப்புவது இது தான் முதல் முறை. நீதி வழங்க வேண்டிய முதலமைச்சரே நீதிமன்றம் சென்றால் எப்படி?” என அவர் கேள்வி எழுப்பினார்.
மேலும், ” மத்திய அரசு எந்த திட்டம் கொண்டு வந்தாலும் சட்டமன்றத்தில் தீர்மானம் போடுகின்றனர். தற்போது மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ள வஃப் மசோதாவை, இஸ்லாமியர் களுக்கு எதிரான மசோதா என்பது போன்ற நிலையை உருவாக்க முயற்சிக்கின்றனர்” என்றும் அவர் குற்றம் சாட்டினார்.