வக்ஃபு வழக்கில் அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்… இடைக்கால தடை விதிக்கப்படுமா?

வக்ஃபு திருத்த சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் ஏப்ரல் 3 ஆம் தேதி மக்களவையிலும், ஏப்ரல் 4 ஆம் தேதி மாநிலங்களவையிலும் பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டது. இருப்பினும், இதற்கு எதிராக காங்கிரஸ், திமுக, தவெக தலைவர் விஜய், ஆம் ஆத்மி, சமாஜ்வாதி, ராஷ்டிரிய ஜனதா தளம், AIMIM தலைவர் அசாதுதீன் ஓவைசி, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மற்றும் முஸ்லிம் அமைப்புகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
மத்திய அரசு சார்பில் கடந்த 8 ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், வக்ஃபு திருத்த சட்டத்துக்கு எதிரான வழக்கில் தங்களை கலந்தாலோசிக்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என்று மத்திய அரசு கோரியிருந்தது.
உச்சநீதிமன்றத்தின் கடும் விமர்சனம்
இந்த நிலையில், இந்த மனுக்களை இன்று புதன்கிழமை விசாரித்த உச்சநீதிமன்றம், மத்திய அரசுக்கு எதிராக கடும் கண்டனங்களை வெளியிட்டது.
தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா, நீதிபதிகள் சஞ்சய் குமார் மற்றும் கே.வி. விஸ்வநாதன் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. விசாரணையின் போது, வக்ஃபு வாரியங்களில் முஸ்லிமல்லாதவர்களை உறுப்பினர்களாக நியமிக்கும் புதிய சட்டப்பிரிவு, முஸ்லிம் சமூகத்தின் மத சுதந்திரத்தை பறிக்கும் செயல் என மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதிட்டார். இது இந்திய அரசியலமைப்பின் 26-வது பிரிவை மீறுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இதற்குப் பதிலளித்த மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, இந்த சட்டம் நாடாளுமன்றக் கூட்டுக் குழுவால் ஆய்வு செய்யப்பட்டு, இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது என வாதிட்டார்.
ஆனால், உச்சநீதிமன்றம் மத்திய அரசின் நிலைப்பாட்டை கடுமையாக விமர்சித்தது. “வக்ஃபு அமைப்புகளில் முஸ்லிமல்லாதவர்களை உறுப்பினர்களாக அனுமதிக்கிறீர்கள். அதேபோல், இந்து அறநிலைய துறைகளில் முஸ்லிம்களை உறுப்பினர்களாக அனுமதிக்கத் தயாரா? அதை வெளிப்படையாக சொல்லுங்கள்!” என தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா, சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவை நோக்கி கேள்வி எழுப்பினார்.

மேலும், ‘வக்ஃபு பயன்பாடு’ (Waqf by User) என்ற கருத்தை நீக்குவது, நூற்றாண்டுகளாக வக்ஃபு சொத்துகளாக அறிவிக்கப்பட்ட புனித இடங்களை அழிக்கும் செயல் எனவும், “கடந்த காலத்தை மறுபடி எழுத முடியாது” எனவும் நீதிபதி கண்ணா கடுமையாக விமர்சித்தார்.
“பயன்பாட்டின் அடிப்படையில் வக்ஃபுகளை எவ்வாறு பதிவு செய்வீர்கள்? அதற்கு என்ன ஆவணங்கள் இருக்கும்? இது ஏற்கனவே இருக்கும் ஒன்றை அழிக்க வழிவகுக்கும். சில தவறான பயன்பாடுகள் உள்ளன. ஆனால், உண்மையான வக்அபுகளும் உள்ளன. நாங்கள் முந்தைய கவுன்சில் தீர்ப்புகளையும் படித்துள்ளோம். ‘வக்ஃபு பயன்பாடு’ என்பது அங்கீகரிக்கப்பட்ட ஒன்று. அதை நீங்கள் அழித்தால், அது பிரச்னையை உருவாக்கும். சட்டமன்றமோ நாடாளுமன்றமோ ஒரு தீர்ப்பு, உத்தரவு அல்லது முடிவை செல்லாதது என அறிவிக்க முடியாது. நீங்கள் அதன் அடிப்படையை மட்டுமே எடுத்துக்கொள்ள முடியும்” என அவர் மேலும் தெரிவித்தார்.
பின்னர், நீதிபதிகள் இது தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டதோடு, நாளை வியாழக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு விசாரணையைத் தொடர்வதாகவும் தெரிவித்தனர்.
இடைக்கால தடை விதிக்கப்படுமா?
இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தின் இந்த விமர்சனம் கருத்து தெரிவித்துள்ள சட்ட நிபுணர்கள், “வக்பு சட்டத் திருத்தம், முஸ்லிம் சமூகத்தின் மத உரிமைகளை மட்டுமல்ல, அரசியலமைப்பின் சமத்துவக் கொள்கையையும் (பிரிவு 14) மீறுகிறது. மேலும், , ‘வக்ஃபு பயன்பாடு’ என்ற கருத்தை நீக்குவது, நீதிமன்றங்களால் அங்கீகரிக்கப்பட்ட பல வக்ஃபு சொத்துகளை சட்டவிரோதமாக பறிக்கும் முயற்சியாக இருக்கலாம். மத்திய அரசு, இந்து அறநிலைய துறைகளில் முஸ்லிம்களை உறுப்பினர்களாக அனுமதிக்காதபோது, வக்ஃபு வாரியங்களில் முஸ்லிமல்லாதவர்களை நியமிப்பது பாகுபாடானது என்பதை உச்சநீதிமன்றம் சரியாக சுட்டிக்காட்டியுள்ளது. இது, மத சுதந்திரம் மற்றும் சமூக நல்லிணக்கத்தை பாதிக்கும் ஒரு சட்டமாக உள்ளது.

வியாழக்கிழமை இவ்வழக்கு விசாரணை தொடர உள்ள நிலையில், உச்சநீதிமன்றம் இந்த சட்டத்தின் சில பிரிவுகளுக்கு இடைக்கால தடை விதிக்கக்கூடும்” என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மத உரிமைகளையும், அரசியலமைப்பு மதிப்புகளையும் பாதுகாக்கும் வகையில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு.