வாக்காளர் பட்டியல்: பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய சிறப்பு முகாம்!
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்படி, ஆண்டுதோறும் செப்டம்பர் முதல் டிசம்பர் வரையில் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யப்படுகிறது. அதன்பின் ஜனவரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.
வழக்கமாக வாக்காளர்பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே முன்பு வசதி இருந்தது. தற்போது, 17 வயது முடிந்தவுடன் ஜனவரி 1, ஏப்ரல் 1, ஜூலை 1, அக்டோபர் 1 என ஆண்டுக்கு 4 முறை 17 வயது முடிந்தவுடன் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரை பதிவு செய்யலாம். அவர்களுக்கு 18 வயது முடிந்தவுடன் வாக்காளர் பட்டியலில் பெயர்கள் உடனடியாக சேர்க்கப்படும்.
இதேபோன்று 18 வயது முடிந்து இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காதவர்கள் பெயர் சேர்க்கலாம். www.voters.eci.gov.in ஆகிய இணையதள முகவரி மற்றும் ‘வாக்காளர் உதவி’ கைபேசி செயலி (Voter Helpline Mobile App) மூலம் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி கூறி இருந்தார்.
அதன்படி, தமிழகத்தில் நவம்பர் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளிலும் ((நாளை மற்றும் நாளை மறுதினம்), நவம்பர் 23 மற்றும் நவம்பர் 24 ஆகிய தேதிகளிலும் என 4 நாட்கள் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. தமிழகம் முழுவதும் சுமார் 68,154 வாக்குச்சாவடி மையங்களில் காலை முதல் மாலை வரை வாக்காளர் பட்டிலில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல், முகவரி மாற்றம் திருத்தம் செய்தல் உள்ளிட்டவற்றுக்கு விண்ணப்பிக்கலாம்.
படிவங்கள் விவரம்
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது அல்லது வாக்காளர் பட்டியலில் ஏற்கனவே இடம்பெற்றுள்ள பதிவுகளில் நீக்கம், திருத்தங்கள், இடமாற்றம் செய்யவோ அல்லது ஆதார் எண்ணை இணைக்க விரும்பும் வாக்காளர், தகுதியுள்ள குடிமக்கள், படிவங்கள் 6, 6பி, 7 அல்லது 8 ஆகியவற்றை பூர்த்தி செய்து அளிக்கலாம்.
விண்ணப்பங்களை அலுவலக நாட்களில் வாக்குச்சாவடி நிலைய அலுவலர், வாக்காளர் பதிவு அலுவலர்கள் உள்ளிட்டோரிடம் அளிக்கலாம். பெயர் சேர்த்தலுக்கான விண்ணப்பத்துடன் வசிப்பிட முகவரி மற்றும் வயது ஆகியவற்றுக்கான சான்றுகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். அதேபோல 25 வயதுக்கு கீழுள்ள மனுதாரர்கள் வயது சான்றிதழை அளிக்க வேண்டியது கட்டாயமாகும் எனத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.