விஜய்-க்கு திடீர் ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு ஏன்..? பின்னணி தகவல்கள்!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய்க்கு மத்திய அரசு திடீரென ‘ஒய்’ ( Y) பிரிவு பாதுகாப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளது பரபரப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தி உள்ள நிலையில், இதற்கான பின்னணி தகவல்களும் தெரியவந்துள்ளன.
வரவிருக்கும் 2026 சட்டமன்ற தேர்தலை குறிவைத்து தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கி உள்ள விஜய், தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்தி வருகிறார்.
சமீபத்தில், தேர்தல் வியூக ஆலோசகர் பிரசாந்த் கிஷோருடன் தேர்தலை எதிர்கொள்வதற்கான வியூகங்கள் மற்றும் செயல்திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தியதும் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளானது.
இதனிடையே தமிழகத்தில் தற்போது தேர்தல் நடந்தால் தேர்தல் முடிவுகள் என்னவாக இருக்கும் என்பது குறித்து இந்தியா டுடே- சி வோட்டர் அண்மையில் நடத்திய கருத்துக் கணிப்பு வெளியானது. அதில், தமிழக அரசியல் களத்துக்குப் புதிய வரவாக இருக்கும் நடிகர் விஜய்யின் தவெக மாநில அரசியலில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும், சட்டமன்ற தேர்தல் அளவில் அவருக்கான ஆதரவு 10 முதல் 15 சதவீதம் வரை உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
மேலும், அதிமுக – தவெக ஆகிய கட்சிகளுடன் பாஜக கூட்டணி அமைத்துப் போட்டியிட்டால் அது தமிழக அரசியலில் ஒருவேளை மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும், இந்த கருத்துக் கணிப்பை நடத்திய இந்தியா டுடே- சி வோட்டர் குழுவில் இடம்பெற்ற அரசியல் நிபுணர்கள் தெரிவித்திருந்தனர்.
‘ஒய்’ பிரிவு பாதுகாப்பும் விமர்சனங்களும்
இந்த நிலையில் த.வெ.க. தலைவர் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 8 முதல் 11 பேர் கொண்ட துப்பாக்கி ஏந்திய மத்திய ரிசர்வ் படையைச் சேர்ந்த கமாண்டோக்கள் சுழற்சி முறையில் விஜய்யின் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள் எனக் கூறப்படுகிறது.

மத்திய அரசின் இது குறித்த அறிவிப்பு வெளியானதும், சமூக வலைதளங்களில் அதுபற்றி பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. மக்கள் வரிப்பணத்தில் எதற்கு விஜய்க்கு பாதுகாப்பு என்றும், விஜய்க்கு ஒரு இமேஜை உருவாக்குவதற்காகவே மத்திய பாஜக அரசு வேண்டுமென்றே இவ்வாறு பாதுகாப்பு அளிக்க முடிவு செய்துள்ளதாகவும், இதன் மூலம் விஜய் அரசியல் கட்சி தொடங்கியதன் பின்னணியில் பாஜக இருப்பது உறுதியாகிறது என்றும் கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
சமீபத்திய கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 15 சதவீதம் அளவுக்கு செல்வாக்கு இருப்பதாக தெரியவந்ததைத் தொடர்ந்தே தமிழக சட்டமன்ற தேர்தலின்போது அவரை வளைக்கும் நோக்கத்துடன் மத்திய அரசு தரப்பில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் பாஜக-வுக்கு எதிரானவர்கள் கருத்துகளைப் பதிவிட்டுள்ளனர்.
காரணம் என்ன?
அதே சமயம், நாட்டில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள், தொழிலதிபர்கள், நடிகர்கள், பிரபலங்களுக்கு உளவுத்துறையின் அறிக்கையின் அடிப்படையில் மத்திய அரசு ‘Y’, ‘Z’ ‘Z Plus’ எனப் பல்வேறு பிரிவுகளின் கீழ் பாதுகாப்பு வழங்குகிறது. அதே அடிப்படையிலேயே, தவெக தலைவர் விஜய்க்கும் ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு அளிக்க முடிவு செய்யப்பட்டதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், விஜய் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலை மனதில் கொண்டு கட்சியைத் தயார்படுத்துவதற்காக ஏப்ரல், மே மாதங்களில் விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்வார் என்றும் கூறப்படுகிறது. ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அங்கு ஆட்சியைப் பிடிப்பதற்கு முன்னதாக மாநிலம் முழுவதும் அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அதே பாணியிலேயே விஜய்யும் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ‘ரோடு ஷோ’ (roadshow) நடத்த திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், விஜய் அவ்வாறு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்போது ‘அவர் மீது முட்டையை வீசி தாக்க வேண்டும்’ என சிலர் பேசும் ஆடியோ உரையாடல் எக்ஸ் சமூக வலைதளத்தில் சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை கருத்தில்கொண்டும், விஜய் தரப்பு வேண்டுகோளை ஏற்று ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்க முடிவு செய்யப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.