தமிழக ஆளுநரைச் சந்தித்த விஜய் … ‘எதிர்க்கட்சி’ ஆட்டத்தின் தொடக்கமா?
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தைக் கண்டித்து தவெக தலைவர் விஜய்யும் தனது கண்டனத்தைப் பதிவு செய்திருந்தார். இந்த நிலையில், விஜய் இன்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை பகல் 12.45 மணி அளவில் நேரில் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு சுமார் 10 நிமிடங்கள் மட்டுமே நீடித்தது.
அப்போது, “தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும், அனைத்து இடங்களிலும் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், புயல் பாதிப்புக்கு மாநில அரசு கேட்கும் நிவாரணத் தொகையை மத்திய அரசு முழுமையாக வழங்க வேண்டும்” ஆகிய 3 கோரிக்கைகள் கொண்ட மனுவை ஆளுநரிடம் வழங்கினார்.
விஜய்க்கு எதிரான விமர்சனங்கள்
விஜய் தனது கட்சியின் முதல் மாநில மாநாட்டை, கடந்த அக்டோபர் 27 ஆம் தேதி, விழுப்புரத்தில் உள்ள விக்கிரவாண்டியில் நடத்தினார். மாநாட்டில் திமுக அரசை அவர் கடுமையாக விமர்சித்துப் பேசியது குறித்து தமிழக அரசியல் அரங்கில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டது. அதே சமயம் மத்தியில் ஆளும் பாஜகவையோ அல்லது பிரதமர் மோடி தலைமையிலான அரசையோ அவர் பெரிய அளவில் விமர்சிக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டது.
இந்த நிலையில், விக்கிரவாண்டி மாநாட்டுக்குப் பின்னர், வெறும் அறிக்கைகள் மற்றும் ட்விட்டர் பதிவுகளுடன் மட்டுமே தனது அரசியல் செயல்பாடுகளை வைத்துக்கொண்டு, விஜய் சைலன்ட் மோடுக்குப் போய்விட்டதாக விமர்சனங்கள் எழுந்தன. “மறைந்த முக்கிய தலைவர்களின் பிறந்த நாள்/ நினைவு நாள்களில் கூட தனது பனையூர் கட்சி அலுவலகத்திலேயே தலைவர்களின் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்வதோடு நிறுத்திக்கொள்கிறார்.
மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணத்தைக் கூட, சம்பந்தப்பட்டவர்களை பனையூருக்கு நேரில் வரவழைத்து வழங்குகிறார். இப்படி பொது இடங்களுக்கு வெளியில் வர தயங்குபவர் எப்படி அரசியலில் தீவிரமாக களமாட முடியும்?” என சில கட்சிகள் குற்றம் சாட்டின.
‘எதிர்க்கட்சி’ ஆட்டம்
இந்தச் சூழ்நிலையில் தான், ஒரு எதிர்க்கட்சியாக தவெக-வின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் விதமாக விஜய் இன்று தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை நேரில் சந்தித்துப் பேசியதோடு, மேற்கூறிய மனுவை அளித்ததாக தெரிகிறது.
வழக்கமாக எதிர்க்கட்சிகள், ஆளும் கட்சிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் மற்றும் அதன் மீதான தங்களது புகார்களை ஆளுநரிடம் அளிப்பது மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் காலத்திலிருந்தே தொடர்கிறது. எம்ஜிஆர் அதிமுகவைத் தொடங்கிய பின்னர், அப்போதைய முதலமைச்சர் கருணாநிதிக்கு எதிராக ஆளுநரைச் சந்தித்து ஊழல் புகார் மனுவை அளித்தார். அப்போது அது தமிழக அரசியல் அரங்கில் பரபரப்பாக பேசப்பட்டது.
அதன் பின்னர் ஜெயலலிதா தொடங்கி தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வரை அரசுக்கு எதிராக ஆளுநரிடம் மனு அளிப்பது வாடிக்கையாக இருந்து வருகிறது. இதில் தமிழக பாஜக தரப்பிலிருந்து தான் அதிகமுறை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசுக்கு எதிராக மனு அளிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய பின்னணியில் தான் விஜய்யும் தற்போது அரசுக்கு எதிராக மனு அளித்துள்ளார். இருப்பினும், அவரது மனுவில்,” மாநில அரசு கேட்கும் நிவாரணத் தொகையை மத்திய அரசு முழுமையாக வழங்க வேண்டும்” என்ற ஒரு கோரிக்கை மட்டுமே மத்திய அரசை நேரடி நடவடிக்கைக்கானதாக உள்ளது.
அதே சமயம், விஜய் இன்று தமிழக ஆளுநரை நேரில் சந்தித்து மனு அளித்தது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் அவரது மனு மீதான கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுமா அல்லது கடந்த காலங்களைப் போன்று பத்தோடு பதினொன்றாக கிடப்பில் போடப்படுமா என்பது வரும் நாட்களில் தெரிந்துவிடும்.