தவெக கொடி பிரச்னை: விஜய்க்கு சிக்கல் தீர்ந்ததா?
நடிகர் விஜய்யின் அரசியல் பயணத்தின் முக்கியமான நடவடிக்கையாக, தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுக விழா, சென்னை பனையூர் அலுவலகத்தில் கடந்த ஆகஸ்ட் 22 ஆம் தேதி நடைபெற்றது. கொடியை அறிமுகப்படுத்தி கொடிப்பாடலையும் நடிகர் விஜய் வெளியிட்டு உரையாற்றினார்.
சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்திலான தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியில் இரண்டு யானைகளும், வெற்றியைக் குறிக்கும் வகையில் வாகை மலரும் இடம்பெற்றிருந்தன. இதனைத்தொடர்ந்து த.வெ.க பாடல் அறிமுகப்படுத்தப்பட்டது. “தமிழர் கொடி பறக்குது, தலைவன் யுகம் பிறக்குது” என்று தொடங்கும் பாடல், தமிழர்கள் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் கவிஞர் விவேக் எழுதி இருந்த இந்த பாடல், விஜய் ரசிகர்கள் மற்றும் அவரது கட்சியினரிடையே அமோக வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில், விஜய் அறிமுகப்படுத்திய கட்சி கொடியில் திடீர் சிக்கல் எழுந்தது. தேசிய கட்சியான பகுஜன் சமாஜ் கட்சியின் சின்னமான யானை படத்தை தமிழக வெற்றிக் கழக கொடியில் பயன்படுத்தி இருப்பதாக சர்ச்சை எழுந்தது.
மேலும், தவெக கொடியில் உள்ள யானை சின்னத்தை அகற்ற வேண்டும் என்று பகுஜன் சமாஜ் தரப்பில் தேர்தல் ஆணையத்திடம் மனு அளிக்கப்பட்டது.
அந்த மனுவில், “பகுஜன் சமாஜ் கட்சியானது யானை சின்னத்தை இந்தியா முழுவதும் கொடியிலும், தேர்தல் சின்னமாகவும் பயன்படுத்தி வருகிறது.நீலக் கொடியும், யானை சின்னமும் பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய அடையாளம் ஆகும். இதில், யானை சின்னத்தை அம்பேத்கர் தேர்ந்தெடுத்து போட்டியிட்டார். இதனால் யானை சின்னத்திற்கும் பகுஜன் சமாஜ் கட்சிக்கும் உணர்வுபூர்வமாக வரலாற்று உறவு உள்ளது.
நடிகர் விஜய் அறிமுகம் செய்த தமிழக வெற்றி கழக கட்சி கொடியில் யானை சின்னம் உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் விஜய் எடுக்காமல் இருக்கிறார். ஒரு அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சியின் சின்னத்தை சட்டவிரோதமாக பயன்படுத்திய விஜய் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், அவரது கட்சி கொடியில் உள்ள யானை சின்னத்தை அகற்ற வழிவகை செய்ய வேண்டும்” எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த நிலையில், பகுஜன் சமாஜ் கட்சியின் இந்த புகாருக்கு தற்போது பதிலளித்துள்ள தேர்தல் ஆணையம், “அரசியல் கட்சிக் கொடியில் இடம்பெறும் சின்னங்களுக்கு ஆணையம் ஒப்புதலோ, அங்கீகாரமோ வழங்காது. எனவே, தமிழக வெற்றிக் கழக கொடியில் யானை இடம்பெற்ற விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தலையிடாது” என்று தெரிவித்துள்ளது.
மேலும் தேர்தல் நேரத்தில் தமிழக வெற்றிக் கழகம் யானையை சின்னமாக பயன்படுத்த முடியாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதன் மூலம், விஜய்யின் கட்சிக் கொடிக்கு எழுந்த சிக்கல் தீர்ந்து விட்டதாகவே கருதப்படுகிறது.