‘1967 ல் திமுக… 1977 ல் அதிமுக… 2026 ல் தவெக’ – விஜய்யின் நம்பிக்கை சாத்தியமா?

வரவிருக்கும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலை மனதில் வைத்து தான் விஜய், தனது தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கினார். அதன்படி கட்சியை தேர்தலுக்கு தயார்படுத்தும் நடவடிக்கைகளைத் தீவிரபடுத்தி உள்ளார்.
இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா மற்றும் பொதுக்கூட்டம் செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அருகே பூஞ்சேரி பகுதியில் உள்ள பிரபல தனியார் விடுதி ஒன்றில் நடைபெற்றது.
தமிழகத்தில் தற்போது மத்திய அரசு வலியுறுத்தும் மும்மொழி கொள்கை விவகாரம், தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் போன்றவை பெரும் பேசு பொருளாக உருவெடுத்துள்ளதால், இந்த கூட்டத்தில் விஜய்யின் பேச்சு என்னவாக இருக்கும் என்பது குறித்த எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் வெகுவாக காணப்பட்டது.
இந்த நிலையில், கூட்டத்தில் பேசிய விஜய், தனது தவெக கட்சி யாருக்கானது என்பது குறித்து விளக்கியதோடு, 1967 தேர்தலில் அண்ணா தலைமையிலான திமுகவுக்கும், 1977 ல் எம்ஜிஆர் தலைமையிலான அதிமுக-வுக்கும் கிடைத்த மகத்தான வெற்றியைப் போன்று தவெக-வும் வரவிருக்கும் 2026 சட்டமன்ற தேர்தலில் வரலாறு படைக்கும் என மிகுந்த நம்பிக்கையுடன் குறிப்பிட்டார்.
“மக்களுக்குப் பிடித்தவர்கள் அரசியலுக்கு வரும் போது ஒரு சிலருக்கு எரிச்சல் வரத் தான் செய்யும். இவனை என்ன செய்யலாம்?, எப்படி Close பண்ணலாம்? எனக் குழப்பத்தில் உள்ளனர். அந்த குழப்பத்தில், என்ன செய்வது எனத் தெரியாமல், வர்றவன் போகிறவன் எல்லாம் கட்சி ஆரம்பிக்கிறான் எனக் கூறத் தொடங்குவார்கள்.
இப்படிப்பட்ட ஒரு அரசியல் களத்தில் ஒரு பயம், பதற்றம் இல்லாமல், வரும் எதிர்ப்பை எல்லாவற்றையும் இடது கையாலேயே சமாளித்துக் கொண்டு, இரண்டாவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது தவெக.
அன்று திமுக, அதிமுக… 2026 ல் தவெக

இந்த நேரத்தில் ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. என்னவென்றால், நம்முடைய மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் இளைஞர்களாகவே உள்ளனராம். அப்படி இருந்தால் என்ன? கட்சி தொடங்கிய போது, அறிஞர் அண்ணா பின்னாலும், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் பின்னால் நின்றதும் இளைஞர்கள் தான். அவர்கள் இருவருக்கும் முறையே 1967 மற்றும் 1977 தேர்தல்களில் மிகப் பெரிய வெற்றி கிடைத்தது. அதுதான் வரலாறு.
மேலும், நமது கட்சி நிர்வாகிகள் அனைவரும் சாதாரண குடும்பத்திலிருந்து வந்தவர்கள் எனக் கூறுகின்றனர். சாதாரண குடும்பத்திலிருந்து வந்தவர்கள் தான் பெரிய அளவில் சாதனை படைத்துள்ளனர். அது மட்டுமின்றி, நமது கட்சி எளிய மக்களுக்கான கட்சி தானே?, அப்படியானால் கட்சி நிர்வாகிகளும் எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர்களாகத் தான் இருப்பார்கள். நமது கட்சி ஒன்றும் பண்ணையார்களுக்கான கட்சி கிடையாது.
முந்தைய காலத்தில் பண்ணையார்கள் தான் பதவியில் இருப்பார்கள். இப்போது அப்படியே தலைகீழாகப் பதவியில் இருப்பவர்கள் எல்லாம் பண்ணையார்களாக மாறி விடுகின்றனர். மக்களின் நலன், நாட்டின் நலன், வளர்ச்சி என எது குறித்தும் கவலை கொள்ளாமல், பணம்.. பணம் என உள்ள பண்ணையார்களை அரசியலை விட்டே அகற்றுவது தான் நமது முதல் வேலை. அதனை ஜனநாயக முறைப்படி செய்யவே 2026 தேர்தலைச் சந்திக்க உள்ளோம். அப்போது வரலாறு படைப்போம்” என்று விஜய் மேலும் கூறினார்.
விஜய் நம்பிக்கை சாத்தியமா?

இந்த நிலையில், விஜய்யின் இந்த பேச்சு குறித்து கருத்து தெரிவிக்கும் தமிழக அரசியல் நோக்கர்கள், ” விஜய்யின் நம்பிக்கை பாராட்டப்படக்கூடியது தான். ஆனால், எதார்த்தம் என்ற ஒன்று இருக்கிறது. அண்ணா பல ஆண்டு காலம் திராவிடர் கழகத்தில் பணியாற்றி, அதன் பின்னர் 1949 ல் திமுக-வை ஆரம்பித்து, தொடர்ந்து 18 ஆண்டு கால அரசியல் வாழ்க்கைக்குப் பின்னர் தான் 1967 தேர்தலில் ஆட்சியைப் பிடித்தார்.
எம்ஜிஆரும் அதேபோன்று தான். 1972 ல் அதிமுக-வை ஆரம்பித்து அவர் 1977 தேர்தலில் ஆட்சியைப் பிடித்தாலும், அதற்கு முன்னர் அவர் காங்கிரஸ், பின்னர் திமுக என பல பத்தாண்டுகள் பொதுவாழ்க்கையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். மேலும் எம்ஜிஆர் கட்சி தொடங்கி, ஆட்சியைப் பிடித்தபோது இருந்த சூழல் வேறு. இப்போதைய நிலைமை வேறு.
சினிமாவில் இருந்து அரசியலுக்கு வரும் நடிகர்கள் குறித்து தற்போது பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. பொதுமக்களிடையேயும் அது குறித்த பேச்சு காணப்படுகிறது. அதே சமயம் இளைஞர்களிடையே, குறிப்பாக கிராமப்புற மற்றும் இரண்டாம் நிலை நகர்ப்புற இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் மத்தியில் அவருக்கு கணிசமான ஆதரவு காணப்படுகிறது. இதற்கு அவரது சினிமா கவர்ச்சி ஒரு முக்கிய காரணம் என்பதை மறுக்க முடியாது.
இருப்பினும் இவற்றையெல்லாம் தாண்டி, 2026 தேர்தலுக்கு முன்னதாக, தனது கட்சி ஆட்சிக்கு வந்தால் என்னவெல்லாம் செய்ய முடியும் என்பதை பொதுமக்களிடம் அழுத்தம் திருத்தமாக அவர் பதிய வைக்க வேண்டும். அதற்கான ஆக்கபூர்வமான செயல்பாடுகளை அவர் வெளிப்படுத்தி, தமிழகத்தைப் பாதிக்கக்கூடிய முக்கிய பிரச்னைகளில் தனது நிலைப்பாட்டை தெளிவாக முன்வைக்க வேண்டும். மத்திய அரசையும் பாஜக-வையும் பகைத்துக்கொள்ளக்கூடாது என்பது போன்று மழுப்பலான தாக்குதல் கூடாது. அவரிடம் திமுக-வை தாக்கிப்பேசும் போது காணப்படும் காட்டம், பாஜக விஷயத்தில் காணப்படுவதில்லை. பாஜக-வைத் தாக்கிப் பேசுவதாக இருந்தால், கூடவே திமுக-வையும் சேர்த்துக்கொள்கிறார். தனியாக தாக்கிப் பேசும் துணிச்சல் காணப்படுவதில்லை. அதிமுக விஷயத்திலும் இதே நிலை தான் காணப்படுகிறது.
எனவே விஜய்யை தமிழக மக்கள் எந்த அளவுக்கு எடைபோட்டு வைத்துள்ளார்கள் என்பதை 2026 தேர்தல் முடிவுகள் தான் சொல்லும்” என்கிறார்கள்.
அவரது பாணியிலேயே சொல்வதானால், “What Bro? 2026 election will tell, Bro!” என்று தான் சொல்ல வேண்டும்!