விஜயகாந்த் போல கவனம் ஈர்ப்பாரா நடிகர் விஜய்..? – அரசியல் கட்சிகள் போடும் கணக்குகளும் கள நிலவரமும்!

மிழக வெற்றிக் கழகத்தின் கொடியை நடிகரும் அக்கட்சியின் தலைவருமான விஜய் அறிமுகம் செய்து வைத்ததில் இருந்தே, தமிழகத்தில் அரசியல் கட்சிகளுக்கு இடையே தீவிர விவாதம் எழத் தொடங்கிவிட்டது.

‘விஜய் வருகையால் எந்தக் கட்சிக்கு பாதிப்பு?’ என்பது தான் பிரதான கேள்வியாக உள்ளது. நாடாளுமன்றத் தேர்தலின் போதே, ‘தன்னுடைய ஆதரவு யாருக்கும் இல்லை, 2026 சட்டமன்றத் தேர்தல் தான் தமிழக வெற்றிக் கழகத்தின் இலக்கு’ என நடிகர் விஜய் குறிப்பிட்டிருந்தார்.

தமிழக அரசியலில் விஜயகாந்துக்குப் பிறகு மக்கள் கூட்டம் தானாக கூடும் வாய்ப்புள்ள நடிகராக விஜய் இருப்பதாலும், இளம் தலைமுறை வாக்காளர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ள நடிகராகவும் இருப்பதாலும் அவரை தங்கள் பக்கம் சேர்த்துக் கொள்ளவே அரசியல் கட்சிகள் ஆர்வம் காட்டி வருகின்றன.

திமுக-வை எதிர்த்தே அரசியல்

பொதுவாக கடந்த 50 ஆண்டுக்காலத்துக்கும் மேலான தமிழக அரசியலில், எம்ஜிஆரின் அதிமுக தொடங்கி எந்த ஒரு புதிய கட்சி ஆரம்பிக்கப்பட்டாலும், அந்த கட்சிகள் பெரும்பாலும் திமுக-வை எதிர்த்தே அரசியல் செய்து வந்தன, வருகின்றன. ஆனால், இந்த கட்சிகள் பெரும்பாலும் கொள்கையை முன் வைக்காமல், தனிநபரை முன்னிறுத்தியே தொடங்கப்பட்டதால், அவர்கள் மறைந்தாலோ அல்லது உடல் நலக்குறைவு உள்ளிட்ட வேறு ஏதேனும் காரணத்தினாலோ, அல்லது கட்சியைத் தொடங்க பின்புலமாக இருந்தவர்கள் பொருளாதார உதவியை நிறுத்திவிட்டாலோ, அந்த கட்சிகள் செல்வாக்கு இழந்து போகின்றன. அல்லது காணாமல் போய்விடுகின்றன.

அந்த வகையில், எம்ஜிஆர் தொடங்கிய அதிமுக ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் ஆட்சியையும் இழந்து, தற்போது மூன்றாக பிளவுபட்டு நிற்கிறது. அதேபோன்று விஜயகாந்தின் தேமுதிக-வும் அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டதிலிருந்தே செல்வாக்கை இழக்கத் தொடங்கி, அவரது மறைவுக்குப் பின்னர் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. இதேபோன்று வேறு பல கட்சிகளையும் உதாரணமாக சொல்லலாம். அந்த வகையில், தற்போது தமிழகத்தில் ஆளும் கட்சியாகவும் திமுக இருப்பதால், அதனை எதிர்த்து அரசியல் செய்துவதுதான் தமிழக வெற்றிக் கழகத்தின் இலக்காக இருக்கும் எனப் பேசப்பட்டு வருகிறது.

விஜய் அரசியல் பயணமும் விஜயகாந்த் பாதையிலா..?

தேமுதிக தலைவர் விஜயகாந்த் தொடக்க காலத்தில் திமுக., மற்றும் அதிமுக ஆகிய கட்சிகளுக்கு சவாலாக இருந்தார். அவர் தனித்துப் போட்டியிட்டு 10 சதவீத ஓட்டுகளைப் பெற்றார். இதன் காரணமாக, 2011 சட்டமன்றத் தேர்தலில் அவருடன் கூட்டணி வைப்பதற்கு திமுக., அதிமுக., ஆகிய பிரதான கட்சிகள் ஆர்வம் காட்டின. ‘பழம் நழுவி பாலும் விழும்’ என தேமுதிக கூட்டணியை எதிர்பார்த்து கருணாநிதி இவ்வாறு கூறினார்.

ஆனால், அதிமுக உடன் கூட்டணி வைத்து 29 இடங்களில் வெற்றி பெற்று எதிர்க்கட்சித் தலைவராக உயர்ந்தார் விஜயகாந்த். 2005 ஆம் ஆண்டு கட்சி தொடங்கி ஆறே ஆண்டுகளில் இப்படியொரு சாதனையை விஜயகாந்த் பெற்றார். அந்த தேர்தலில் 23 இடங்களில் மட்டுமே திமுக வெற்றி பெற்றது.

ஆனால், அதன்பிறகு தேமுதிக எம்.எல்.ஏ-க்களில் பலர் அக்கட்சியை விட்டு வெளியேறி அதிமுக-வில் இணைந்தனர். சிலர் திமுக-வில் இணைந்தனர். அன்றைய முதல்வர் ஜெயலலிதாவுடன் விஜயகாந்த் கடுமையான மோதல் போக்கில் இருந்ததால், தேமுதிக உடையும் நிலை ஏற்பட்டதாக கூறப்பட்டது.

2011 சட்டமன்றத் தேர்தலில் விஜயகாந்த் ஏற்படுத்திய தாக்கம் இன்றளவும் பேசப்படுகிறது. ‘செந்தூரபாண்டி’ படம் உள்பட நடிகர் விஜய்யின் தொடக்ககால சினிமா பயணங்களுக்கு விஜயகாந்த் உதவி செய்தார். விஜய்யின் கடைசிப் படமான ‘கோட்’ படத்தில் விஜயகாந்தின் படத்தை செயற்கை தொழில்நுட்பம் மூலம் பயன்படுத்திக் கொள்வதற்கு படக்குழுவுக்கு அனுமதி அளித்ததாக பிரேமலதா குறிப்பிட்டுள்ளார்.

அந்த வகையில், விஜயகாந்த் மீது அபிமானம் உள்ள ரசிகர்களும் விஜய் பின்னால் அணிதிரள்வதற்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அரசியல் களத்துக்கு நடிகர் விஜய் வருவதால் ஏற்படப் போகும் சாதக, பாதகங்களைப் பற்றி திமுக, அதிமுக, நாம் தமிழர் உட்பட பல்வேறு கட்சிகளும் ஆலோசித்து வருகின்றன.

கூட்டணிக்கு விரும்பும் அதிமுக

குறிப்பாக, 2019 நாடாளுமன்றத் தேர்தலில் இருந்து தொடர் தோல்விகளை சந்தித்து வரும் அதிமுக-வுக்கு புதிய கூட்டணிகள் தேவைப்படுகின்றன. அதற்கேற்ப, நேற்று சேலத்தில் பேட்டியளித்த அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி, “விஜய் கட்சியின் பாடலின் மூன்றெழுத்து மந்திரம் என்று எம்ஜிஆர், அண்ணா ஆகியோரை குறிப்பிட்டுள்ளது, எங்கள் தலைவருக்கு கிடைத்த பெருமை என்று நினைக்கிறேன். முழுமையாக நடிகர் விஜய் அரசியலுக்கு வரவில்லை. அதிமுகவுடன் அவரது கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் தான் முடிவு செய்ய முடியும்” என்றார்.

2011 தேர்தலில் விஜயகாந்துடன் கூட்டணி சேர்ந்து அதிமுக பெருவாரியாக வெற்றி பெற்றதைப் போல, 2026 தேர்தலில் நடிகர் விஜய் உடன் கூட்டணி சேர்ந்தால் மீண்டும் அதிமுக ஆட்சி உருவாகும் என அதிமுக முன்னணி நிர்வாகிகள் கணக்கு போடுகின்றனர்.

திமுக எடுத்த சர்வே

திமுக தரப்பிலும் தமிழக வெற்றிக் கழகத்தின் தாக்கம் குறித்து ரகசிய சர்வே எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. விஜய் வருவதால் திமுக-வின் வாக்கு வங்கியில் பாதிப்பு ஏற்படுமா அல்லது திமுக எதிர்ப்பு வாக்குகள் என்னவாகும் என்ற ரீதியில் இந்த சர்வே எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சர்வேயில், ‘வாக்குகள் பிரிந்தாலும் திமுகவுக்கு பெரிதாக பாதிப்பை ஏற்படுத்தாது. விஜய் நேரடியாக களமிறங்கினால் 10 சதவீத ஓட்டுகள் வரையில் அவருக்குக் கிடைக்கலாம்’ எனக் கூறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தக் கணக்கு என்பது தேமுதிக தனித்துக் களறமிறங்கியபோது கிடைத்த வாக்குகள் என்பது குறிப்பிடத்தக்கது. நாம் தமிழர் கட்சியும் 7 சதவீத ஓட்டுகளுடன் பிரதான கட்சியாக களத்தில் உள்ளது. அவர்களும், ‘தங்களுடன் நடிகர் விஜய் கூட்டணி வைக்க வேண்டும்’ எனப் பேசி வருகின்றனர்.

“அதிமுக, நாம் தமிழர் ஆகிய கட்சிகள் தவெக உடன் கூட்டணி குறித்துப் பேசி வந்தாலும், தனித்துப் போட்டியிட்டு ஆட்சி அதிகாரத்தைப் பிடிக்க வேண்டும் என்பதே விஜய்யின் நோக்கமாக உள்ளது. லஞ்ச ஊழலற்ற அரசை அமைக்க வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார். அந்தவகையில், தனித்துப் போட்டி என்பது தான் த.வெ.க.,வின் பாதையாக இருக்கும்” என்கின்றனர், தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Bahas 2 agenda penting, pjs wali kota batam hadiri rapat paripurna dprd kota batam. Alex rodriguez, jennifer lopez confirm split. Let us know in the comments if this windows 11 wi fi bug affected you.