அதிமுக கூட்டணிக்கு தயங்கும் விஜய்… பிரசாந்த் கிஷோர் சந்திப்பின் பின்னணி என்ன?

தமிழக வெற்றிக்கழக தலைவரான நடிகர் விஜய் உடன் பிரபல தேர்தல் வெற்றி வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர் நடத்தி உள்ள சந்திப்பில் அதிமுக கூட்டணி தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
பிரபல தேர்தல் வெற்றி வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர், கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் அலுவலகத்தில் நேற்று விஜய்யைச் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்புக்கு அண்மையில் தவெக-வில் இணைந்த ஆதவ் அர்ஜூனா ஏற்பாடு செய்ததாக கூறப்படுகிறது. இவர் ஏற்கெனவே பிரசாந்த் கிஷோருடன் பணியாற்றியவர். இந்த நிலையில், விஜய் – ஆதவ் அர்ஜூனா சந்திப்பின் போது இருவரும் மூன்று மணி நேரம் ஆலோசனை நடத்தி உள்ளனர்.
இதனை தொடர்ந்து, இன்று இரண்டாவது நாளாக தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் மற்றும் பிரசாந்த் கிஷோருடன் விஜய் ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த ஆலோசனையில் த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதிமுக கூட்டணிக்கு தயங்கும் விஜய்
2014 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக-வுக்கு தேர்தல் வியூகங்களை வகுத்துக் கொடுத்ததில் இருந்து பிரலமாக அறியப்பட்ட பிரசாந்த் கிஷோர், அதன் பின்னர் திமுக உட்பட பல்வேறு மாநில கட்சிகளுக்கும் தேர்தல் வியூக வகுப்பாளராக பணியாற்றி உள்ளார். இந்த நிலையில், வரவிருக்கும் 2026 தேர்தலை எதிர்கொள்ள யாரை தேர்தல் வியூக வகுப்பாளராக நியமிக்கலாம் என அதிமுக தரப்பில் தீவிரமாக ஆலோசனை நடத்தப்பட்டது. இதனையடுத்து, அக்கட்சி பிரசாந்த் கிஷோரை அணுகியதாகவும், அவர் முதல் கட்டமாக சில ஆலோசனைகளை வழங்கியதாகவும் அண்மையில் தகவல் வெளியாகி இருந்தது.
இதனிடையே அதிமுக உடன் மீண்டும் கூட்டணி அமைக்க பாஜக ஒருபுறம் முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியோ விஜய் உடன் கூட்டணி அமைக்க விரும்புகிறார். ஆனால், “அதிமுக உடன் கூட்டணி அமைத்தால், விஜய் மீதான இமேஜுக்குப் பாதிப்பு ஏற்படும். அத்துடன் யார் முதலமைச்சர் என்பதில் கருத்துவேறுபாடு ஏற்படும்” என்று விஜய்க்கு நெருக்கமானவர்கள் எச்சரித்ததால் அவர் அதிமுக உடன் கூட்டணி அமைக்க தயங்குகிறார்.

இந்த நிலையில் தான், 2026 சட்டமன்றத் தேர்தலில் விஜய் தலைமையை ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி அமைக்கப்படும் என்றும், எந்தக் கட்சியுடனும் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை என்றும் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் தவெக பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் அறிவித்தார். தவெக தரப்பில் வெளியான இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, இது குறித்து பிரசாந்த் கிஷோருடன் எடப்பாடி பழனிசாமி விவாதித்ததாக கூறப்படுகிறது.
பிரசாந்த் கிஷோர் சொன்ன புள்ளி விவரங்கள்
இந்த நிலையில் தான், ஆதவ் அர்ஜூனா ஏற்பாட்டின் பேரில் பிரசாந்த் கிஷோர் – விஜய் இடையேயான சந்திப்பு நடைபெற்றுள்ளது. இந்த சந்திப்பின்போது அதிமுக உடன் கூட்டணி அமைத்தால் ஏற்படும் சாதகமான நிலை குறித்து பிரசாந்த் கிஷோர், கடந்த தேர்தலில் கிடைத்த வாக்கு சதவீதம் அடிப்படையில் சில புள்ளி விவரங்களை எடுத்துக்கூறி விளக்கியதாக கூறப்படுகிறது.
அதே சமயம், பிரசாந்த் கிஷோர் இன்னும் அதிமுக-வுக்கு தேர்தல் வியூக பணிகளை மேற்கொள்ள அதிகாரபூர்வமாக ஒப்பந்தம் எதுவும் மேற்கொள்ளவில்லை. முதல்கட்டமாக சில ஆலோசனைகளை மட்டுமே வழங்கி இருப்பதாக கூறப்படுகிறது.

எனவே, விஜய் உடனான பிரசாந்த் கிஷோரின் சந்திப்பில் தவெக-வின் தேர்தல் வெற்றிக்கான வியூகங்களை வகுத்துக்கொடுத்து, தேர்தல் பணியாற்றுவது தொடர்பாகவே அதிகம் விவாதிக்கப்பட்டதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பிரசாந்த் கிஷோரைப் பொறுத்தவரை அவர் ஒரு தேர்தல் வியூக வகுப்பாளர். அவருக்கு வாக்கு சதவீதமும் அது தொடர்பான புள்ளிவிவரங்களுமே வெற்றிக்கான வியூகம். அது சரியானதாகவும் இருக்கலாம். ஒருவேளை அதிமுக உடன் கூட்டணி அமைத்து தேர்தலில் வெற்றி பெறாமல் போனால், அது விஜய்க்கும் அவரது கட்சிக்கும் பெரும் பின்னடைவாக போய்விடும்.

இதனை கருத்தில்கொண்டே அதிமுக உடனான கூட்டணி விஷயத்தில் விஜய் தயங்குவதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், பிரசாந்த் கிஷோருடனான சந்திப்பு, இதில் எதுவும் மாற்றத்தை ஏற்படுத்துமா என்பது வரும் நாட்களில் தெரிந்துவிடும்.