தவெக மாநாடு: கட்சி பெயரில் ‘கழகம்’ ஏன்… விஜய் கொடுத்த விளக்கம்!
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு பிரம்மாண்டமாக நேற்று மாலை பிரமாண்டமாக நடைபெற்றது. சுமார் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட தொண்டர்கள் மாநாட்டில் கலந்துகொண்டதாக உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், தவெக முதல் மாநாட்டில் கட்சியின் பெயர், கொடி நிறம், அதில் உள்ள யானை சின்னம் ஆகியவை எதை குறிக்கிறது என்பதை விஜய் வீடியோவில் அளித்த விளக்கம் இங்கே…
வெற்றி
வெற்றி என்பது நினைத்ததை மிச்சம் மீதி இல்லாமல் செய்து முடிப்பது. மனதிற்குள் இருக்கும் நோக்கத்தை நிறைவேற்றுவது, வாகை சூடுவது என பல அர்த்தம் உள்ளது. அப்படிப்பட்ட ஒரு வார்த்தை தான் நமது கட்சியின் மையச் சொல் ஆகவும் மந்திரச் சொல்லாகவும் மாறி உள்ளது.
தமிழகம்
கட்சியின் முதல் சொல் தமிழகம். இது மக்களுக்கான அடையாளத்தையும் அங்கீகாரத்தையும் சொல்வது போன்று ஒரு வார்த்தை இருக்க வேண்டும் என முடிவு செய்து தேர்வு செய்தது தான் இந்த வார்த்தை. தமிழகம் என்றால், தமிழர்களின் அகம், தமிழர்கள் வாழும் இடம் என சொல்லலாம். புறநானூறு, சிலப்பதிகாரம், மணிமேகலை, பதிற்றுப்பத்து என நமது பல இலக்கியங்களில் இடம்பிடித்த ஒரு வார்த்தைதான் தமிழகம் என நமக்கு சொல்லி கொடுத்துள்ளனர்.
கழகம்
கட்சி பெயரின் மூன்றாவது வார்த்தை கழகம். கழகம் என்றால் படை பயிலும் இடம் என அர்த்தம் உள்ளது. அந்த வகையில் நமது இளம் சிங்கங்கள் பயிலும் இடம் தான் நமது கட்சி நமது கழகம். இதனால் கழகம் என்பது சரியாக பொருந்தி உள்ளது
கட்சி நிறம்
கட்சி கொடியின் மேலும், கீழும் இருப்பது அடர் ரத்த சிவப்பு நிறம். மெரூன் நிறம். சிவப்பு நிறம் புரட்சியின் குறியீடு. அந்த வகையில் மெரூன் நிறம் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும். கட்டுப்பாட்டை குறிக்கும். பொறுப்புணர்வு, சிந்தனை திறனை, செயல் தீவிரத்தை சொல்லும் நிறம்.
மஞ்சள் நிறம்
மையத்தில் உள்ள மஞ்சள் நிறம் மகிழ்ச்சி, நம்பிக்கை, லட்சியம், மனத்தெளிவு, உற்சாகம், ஆற்றல், நினைவாற்றால் ஆகியவற்றை தூண்டுவதுடன் இலக்கை நோக்கி உறுதியுடன் ஓட வைக்கும். இதனை மனதில் வைத்து தான் இந்த நிறத்தை கொண்டு வந்துள்ளோம்
வாகைப்பூ
வாகை என்றால் வெற்றி என ஒரு அர்த்தம் உள்ளது. அரச வாகை என்றால் அரசனுடயை வெற்றி என அர்த்தம். த.வெ.க., கொடியில் இருக்கும் வாகை மக்கள் வாகை. மக்களுக்கான வெற்றி. தமிழக மக்கள், உலகம் முழுதும் வாழும் தமிழர்கள் நேர்கோட்டு சித்தாந்தத்தில் பயணிக்க வைத்து வெற்றி வாகை சூட வைப்பதற்கான உறுதிப்பாட்டை குறிக்க தான் வாகை பூவை வைத்து உள்ளோம்.
யானை
மிகப்பெரிய பலத்தை சொல்வது என்றால் யானை பலம் எனக் கூறுவார்கள். நிறத்திலும், குணத்திலும் உயரத்திலும் உருவத்திலும் தனித்தன்மை கொண்டது. போர் யானை தன்னிகரற்றது. போர் தந்திரம் பழகிய யானை எதிரிகளின் தடைகளை படைகளை சுற்றி வளைத்து துவம்சம் செய்வதில் கில்லாடி.போர் முனையில் இருக்கும் இரட்டை யானைகள் தான் கொடியில் உள்ளது. இந்த இரட்டை போர் யானைகள் எவ்வளவு மதம் பிடித்த யானையையும் கட்டுப்படுத்தி வழிக்கு கொண்டு வரும் வல்லமை பெற்ற கும்கி யானை போன்றது. இந்த இரட்டை யானை எதை குறிக்கிறது என்பது புரிய வேண்டியவர்களுக்கு சரியாக புரியும்.