“அதிமுக கூட்டணி எதற்கு..? தவெக-வே தனிப்பெரும்பான்மை பெறும்!”
விக்கிரவாண்டியில், கடந்த அக்டோபர் 27 ஆம் தேதியன்று நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் பேசிய அக்கட்சித் தலைவர் நடிகர் விஜய், திமுக-வை விமர்சிக்கும் விதமான கருத்துகளை வெளியிட்டிருந்தார். அதே சமயம், பாஜக குறித்து பெரிய அளவில் விமர்சனங்கள் ஏதும் தெரிவிக்காத நிலையில், அதிமுக-வைப் பற்றி எதுவுமே குறிப்பிடவில்லை.
இது குறித்து அப்போது திமுக தரப்பில் பேசியவர்கள், ‘ ஊழல் என்று திமுக-வை விமர்சிக்கும் விஜய், 2011 முதல் 2021 ஆம் ஆண்டுக் கால அதிமுக ஆட்சியின் ஊழல் குறித்தோ, ஊழல் குற்றச்சாட்டுக்காக கைதாகி சிறை சென்ற அக்கட்சித் தலைவர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா குறித்தோ எதுவும் பேசாதது ஏன்?’ என்றும் கேள்வி எழுப்பி இருந்தனர்.
இந்த நிலையில், அடுத்த தேர்தலில் வலிமையான கூட்டணி அவசியம் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் வலியுறுத்தி வந்தனர். அதன் ஒரு அம்சமாக திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியை தங்கள் பக்கம் இழுக்க அதிமுக தரப்பில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பலன் அளிக்கவில்லை. இதனைத் தொடர்ந்து தான், அதிமுக-வின் பார்வை தவெக பக்கம் தாவியதாக சொல்லப்பட்டது. மேலும், விஜய் தரப்பிலும் தனது கட்சியின் செல்வாக்கு என்ன என்பது இதுவரை நிரூபிக்கப்படாத நிலையில், அக்கட்சியும் கூட்டணி அவசியம் என கருதுவதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த நிலையில் தான், அதிமுக – தவெக கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், விஜய்க்கு துணை முதல்வர் பதவி மற்றும் 80 சீட்டுகள் என தவெக தரப்பில் பேசப்பட்டதாக நேற்று செய்திகள் வெளியானது. இதனால், அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், விஜய் கட்சியினர் கட்சி மேலிடத்தைத் தொடர்புகொண்டு, ‘இந்த தகவல் உண்மையா?’ எனத் தொடர்ச்சியாக விசாரித்ததாக கூறப்படுகிறது.
‘தவெக பெரும்பான்மை பலத்தோடு வெற்றி பெறும்’
ஆனால், அப்படி கூட்டணி குறித்து அதிமுக உடன் எதுவும் பேசவில்லை என்றும், 2026 தேர்தலில் தவெக பெரும்பான்மை பலத்தோடு வெற்றி பெறும் என்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் என். ஆனந்த் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக வெற்றிக் கழகத்தை அதிமுக கூட்டணி என்று தொடர்புப்படுத்தி, பிரதான தமிழ் நாளிதழ் ஒன்று உண்மைக்கு முற்றிலும் புறம்பான தகவல்களை நேற்றுத் தலைப்புச் செய்தி்யாக வெளியிட்டுள்ளது.
இந்த செய்தி ஆதாரமோ, அடிப்படையோ அல்லாத, முற்றிலும் தவறான தகவல். ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாக அரசியல் விமர்சகர்கள் என்கிற போர்வையில் உள்நோக்கத்தோடு, தான் தோன்றித்தனமாகச் சிலர் தெரிவிக்கும் பொய்யான கருத்துகளை பரப்புகின்றனர். இது போன்ற உண்மைக்கு மாறான பொய்ச்செய்திகளைத் தமிழக மக்கள் புறக்கணித்து விடுவார்கள் என இந்த ஊடங்களுக்கு நினைவூட்டுகிறேன்.
தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் பாதை, முழுக்க முழுக்கத் தமிழக மக்களின் நலனுக்கானது. வெற்றிக் கொள்கைத் திருவிழாவில் கழகத் தலைவர் ஆற்றிய உரையில் தெரிவித்த நிலைப்பாட்டின் அடிப்படையில் பெரும்பான்மை பலத்தோடு தவெக 2026 தேர்தலில் வெற்றி பெறும்.
மக்களின் நலனுக்கான நல்லரசை அமைப்பதே தவெகவின் குறிக்கோள். எனவே மக்களைக் குழப்பும் நோக்கில் தமிழக வெற்றிக் கழகம் தொடர்பாக உண்மைக்குப் புறம்பான கருத்துகளைச் செய்திகளாக வெளியிடுவதை ஊடகங்கள் தவிர்க்க வேண்டும். இந்த செய்தி குறிப்பு கழகத் தலைவர் விஜய்யின் ஒப்புதல் பெற்று தான் வெளியிடப்படுகிறது” எனக் கூறி உள்ளார்.
அதிமுக உடன் கூட்டணி வைத்தால், தவெக -வின் ஊழல் எதிர்ப்பு கொள்கை அடிபட்டுப்போகும் என்றும், இதனால், விஜய் சிறிய கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி வைக்க வாய்ப்பு உள்ளதாகவும் அரசியல் நோக்கர்களின் கருத்தாக உள்ளது.