‘விஜய் உடன் கூட்டணி இல்லை’: சீமான் அறிவிப்பின் பின்னணி என்ன?
தமிழக அரசியலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது வரவிருக்கும் 2026 சட்டமன்ற தேர்தலில் தான் தெரியவரும். என்றாலும் அவரது கட்சியுடன் கூட்டணி அமைக்கலாம் என சில கட்சிகள் திட்டமிட்டுள்ளன. அந்த வகையில், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், ஆரம்பம் முதலே விருப்பம் தெரிவித்து வந்தார்.
ஆனால் இன்று மீண்டும் விஜய் கட்சியுடன் கூட்டணி இல்லை என்று அவர் திட்டவட்டமாக அறிவித்துவிட்டார். அவரது இந்த அறிவிப்பின் பின்னணி என்ன?
கடந்த பல மாதங்களாகவே செய்தியாளர்களின் சந்திப்பின் மூலம் விஜய் உடன் கூட்டணி அமைக்கும் விருப்பத்தை வெளிப்படுத்தி வந்த சீமான், விஜய்யைக் கடந்த மே மாதம் நேரில் சந்தித்து அரசியல் நகர்வுகள் மற்றும் கூட்டணி தொடர்பாகவும் பேசியதாக கூறப்பட்டது. ஆனால் பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. திமுக, பாஜக எதிர்ப்பு மற்றும் தமிழ்தேசிய கொள்கைகள் என இரு தரப்புக்கும் ஒத்துப்போகும் பல அம்சங்கள் இருப்பதாக இருகட்சியினரும் பேசிவந்ததால், கூட்டணி உறுதியாக அமைந்துவிடும் என எதிர்பார்க்கப்பட்டது.
இருப்பினும் சீமானுடன் கூட்டணி அமைக்கும் விஷயத்தில் விஜய் மிகுந்த தயக்கம் காட்டியதாக தெரிகிறது. காரணம், விக்கிரவாண்டி இடைத் தேர்தல் பிரசாரத்தின்போது, “8 ஆண்டுகளுக்கு முன்பே தேர்தல் அரசியலுக்கு வந்த நான் தான் பெரியவன்” என சீமான் பேசி இருந்தார். இப்படியான நிலையில், 2026 சட்டமன்ற தேர்தலில் விஜய்யை முதன்மை சக்தியாகவும், முதலமைச்சர் வேட்பாளராகவும் முன்னிறுத்தும் போது, கூட்டணி கட்சிகளுக்கு குறைந்தது 200 தொகுதிகளிலாவது தவெக போட்டியிட வேண்டும் என அக்கட்சி கருதுகிறது.
இப்படியான நிலையில், சீமான் குறைந்த தொகுதிகளுக்கு ஒத்துக்கொள்வாரா என்ற சந்தேகம் ஏற்பட்டதாலும், ‘விஜய் – சீமான் கூட்டணி அமைந்தால் `யார் தலைமை’ என்ற குழப்பம் ஏற்படலாம் என்பதாலும் விஜய் தரப்பில் மேற்கொண்டு கூட்டணி தொடர்பாக ஆர்வம் காட்டவில்லை எனக் கூறப்படுகிறது.
அதேபோன்று நாம் தமிழர் தரப்பிலும், விஜய் தலைமையை ஏற்று கூட்டணிக்கு போனால் கட்சி தனித்த அடையாளத்தை இழந்துவிடும். மேலும் தலைவர் பிம்பத்தையும் நீங்கள் இழந்துவிடுவீர்கள் என சீமானின் நலம் விரும்பிகள் அவரை எச்சரித்ததாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்தே விஜய் – சீமான் கூட்டணி பேச்சு முடிவுக்கு வந்ததாக தெரிகிறது.
இந்த பின்னணியில் தான், காரைக்குடியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த சீமானிடம், 2026 தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி இருக்கிறதா, இல்லையா எனக் கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த சீமான், “நான் தனித்து போட்டியிடுகிறேன். என்னுடன் சேர வேண்டுமா என்பதை மற்றவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும். நானாக இவருடன் செல்கிறேன், அவருடன் செல்கிறேன் என்று கூறிக் கொண்டு இருக்க முடியாது. என்னை சின்னமனூரில் கேட்டாக, மதுரையில் கூப்டாக என்று நடிகை கோவை சரளா போல பேசிக்கொண்டு இருக்க நான் தயாராக இல்லை.
நான் பிரபாகரன் மகன், என் பாதை தனி, என் பயணமும் தனி, என் இலக்கு தனி. எனக்கு ஒரு கனவு இருக்கிறது. என் நாட்டை எப்படி படைக்க வேண்டும் என்று என் முன்னோர்கள் தூக்கி சுமந்த கனவு அது. பூமியின் சொர்க்கமாக என் நாட்டை படைக்க நான் ஆசைப்படுகிறேன். அதற்கு இவரோடு சேரலாம், அவரோடு சேரலாம் என்றில்லை.” “என்னுடன் சேர்ந்தால் நாடும் மக்களும் நன்றாக இருக்கும் என்று நினைத்தால் வாருங்கள். இல்லையெனில் விடுங்கள். ஒரு தலைவனுக்கு முதல் தகுதி, தன் மண்ணையும், மக்களையும் முழுமையாக நேசிக்க வேண்டும். நான் என் மக்களை முழுமையாக நம்புகிறேன், நேசிக்கிறேன். அதனால் நான் தனித்து போட்டியிடுகிறேன்” எனத் திட்டவட்டமாக தெரிவித்தார்.
இதனால், இனிமேல் விஜய் – சீமான் கட்சிகள் இடையே கூட்டணி அமைய வாய்ப்பு இல்லை என்பது தெளிவாகி விட்டது.