இயக்குநர் வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள , ‘தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்’ (தி கோட்) திரைப்படம், நாளை வெளியாக உள்ளது. இந்த படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, யோகிபாபு, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்பட பலர் நடித்துள்ளனர். ‘தி கோட்’ படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார்.
ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். சமீபத்தில் ‘தி கோட்’ படத்தின் டிரைலர் மற்றும் 4 பாடல்கள் வெளியாகி கவனம் பெற்றன. இதில் டிஏஜிங் தொழில்நுட்பம் மூலம் விஜய் இளம் வயதில் தோன்றும் காட்சிகள் பெரியளவில் கவனத்தை ஈர்த்தன. இப்படம் தமிழ்நாடு மட்டுமல்லாது, கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் மும்பை உட்பட வட இந்தியாவின் சில நகரங்களிலும் வெளியாக உள்ளது. அதேபோல் ஓவர்சீஸ் ரைட்ஸ் மூலம் பல்வேறு உலக நாடுகளிலும் வெளியாகிறது.
நாளை இப்படம் வெளியாக உள்ள நிலையில், படத்தின் டிக்கெட் முன்பதிவு திரையரங்குகளில் தொடங்கியதையடுத்து ரசிகர்கள் ஆர்வத்துடன் டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில், ‘தி கோட்’ படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்தது. இது தொடர்பாக ரசிகர்களிடம் இருந்து வேண்டுகோளும் முன்வைக்கப்பட்டன.
காலை 9 மணி சிறப்பு காட்சிக்கு அனுமதி
இதனையடுத்து இப்படத்தின் தயாரித்துள்ள ஏ.ஜி.எஸ். நிறுவனத்தின் இயக்குநர் அர்ச்சனா கல்பாத்தி, ‘தி கோட்’ திரைப்படத்துக்கு சிறப்புக் காட்சி திரையிட அனுமதி கோரி தமிழக அரசுக்கு கடிதம் எழுதி இருந்தார். அவரது கடிதத்தை பரிசீலித்த தமிழக அரசு, வியாழன் காலை 9 மணி சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பான அனுமதி கடிதத்தில் ‘தி கோட்’ திரைப்படத்துக்கான காட்சிகள் நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளதால், அப்படம் திரையிடப்படும் தியேட்டர்களில் காவல்துறையின் ஒத்துழைப்போடு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழக அரசின் இந்த அனுமதி கடிதத்தை தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அர்ச்சனா கல்பாத்தி, தமிழக அரசுக்கும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
கொண்டாட்டத்துக்கு தயாராகும் ரசிகர்கள்
இந்த நிலையில், சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், ‘தி கோட்’ திரையிடப்படும் திரையரங்குகளில் விஜய் ரசிகர்கள் கொண்டாட்டத்துக்கு தயாராகி வருகின்றனர். படம் வெளியாகும் தியேட்டர்களில் காவல்துறையின் கெடுபிடிகளையும் மீறி கட் அவுட், மாலைகள், கொடி, தோரணங்கள் என ரசிகர்கள் மும்முரமான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், ‘தி கோட்’ திரையிடப்படும் திரையரங்குகள் திருவிழாக்கோலமாக காட்சி அளிக்கின்றன.