விஜய்யை சீண்டிய அண்ணாமலை… தீவிரமாகும் பாஜக Vs தவெக மோதல்…பின்னணி என்ன?

2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் உள்ளபோதிலும் தமிழக அரசியல் களம் இப்போதே தகிதகிக்கத் தொடங்கி விட்டது. ஒரு பக்கம் 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக அரசியலை வழிநடத்திச் செல்லும் திமுகவும் அதிமுகவும் சட்டமன்றத்தில் மல்லுக்கட்டிக்கொண்டிருக்கின்றன என்றால், மறுபக்கம் தமிழக அரசியலில் புதிய சக்திகளாக உருவெடுத்துள்ள பாஜகவும் தமிழக வெற்றிக் கழகமும் மோதிக்கொள்ள ஆரம்பித்திருக்கின்றன.
இதில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, தவெக தலைவர் விஜய்யை சீண்டும் விதமாக “நடிகைகளின் இடுப்பை கிள்ளிக் கொண்டு அரசியல் செய்பவர்” எனத் தெரிவித்த கருத்து தான் இரு தரப்புக்குமான மோதலை தீவிரப்படுத்தி உள்ளது.
சமீபத்தில் டாஸ்மாக் நிறுவனத்தில் ரெய்டு நடத்திய அமலாக்கத்துறை, ரூ.1,000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறியதை அடுத்து, டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு பாஜக-வினர் போராட்டம் நடத்தினர். இந்த நிலையில், இந்த போராட்டம் குறித்து விமர்சித்த தமிழக வெற்றிக் கழகப் பொதுச் செயலாளர் என்.ஆனந்த், ” ஒன்றியம் மற்றும் மாநிலத்தை ஆளும் அரசுகள் வெளியில் தங்களை எதிரிகள் போன்று காட்டிக்கொண்டு புறவாசல் வழியாக மறைமுக கூட்டணி வைத்துக்கொண்டு மக்களை ஏமாற்றி வருகின்றனர்” என்று குற்றம் சாட்டி இருந்தார். மேலும், “நடவடிக்கை எடுக்கும் அதிகாரத்தை கையில் வைத்துள்ள பாஜக-வினர், முற்றுகைப் போராட்டத்தை நடத்தி அதன் வாயிலாக எதை வலியுறுத்த முயல்கின்றனர்?” என்றும் அவர் கேள்வி எழுப்பி இருந்தார்.
விஜய்யை சீண்டிய அண்ணாமலை

இந்த நிலையில், இதற்கு பதிலளிக்கும் விதமாக செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ” “தவெக-வை முதல்ல களத்துக்கு வரச் சொல்லுங்க. சும்மா ஸ்கூல் பசங்க மாதிரி உக்காந்துட்டுட்டு அரசியல் பண்ணிட்டு இருக்காங்க. சினிமா ஷூட்டிங்ல உக்காந்துட்டு பாட்டு பாடிட்டு, நடிகையோட இடுப்ப கிள்ளிட்டு அரசியல் பண்ணிட்டு இருக்காரு விஜய். நான் களத்திலிருந்து போராடிக் கொண்டு, பேசுறேன். விஜய் வீட்டில் இருந்து அரசியல் செய்கிறாரா? விஜய் WORK FROM HOME அரசியல்வாதியா?” எனச் சீண்டினார்.
இதனைத் தொடர்ந்து இரு கட்சியினருக்கும் இடையேயான மோதல் தீவிரமடைந்துள்ளது. சமூக வலைதளங்களில் இருதரப்பினரும் தீவிர வார்த்தை போரில் ஈடுபட்டு வருகின்றனர்.
பின்னணி என்ன?
சமூக வலைதளமான X-ல் இந்த மோதல் பற்றி எரிகிறது. “விஜய் திமுக-பாஜக கூட்டணியை அம்பலப்படுத்துவதால் அண்ணாமலை பதறுகிறார்” என்று ஒரு தவெக ஆதரவாளர் பதிவிட்டார். உடனே, “விஜய்யால் ஒரு பஞ்சாயத்து தேர்தலை கூட சமாளிக்க முடியாது” என்று பாஜக ஆதரவாளர் ஒருவர் பதிலடி கொடுத்தார். “இது அண்ணாமலையின் திட்டமிட்ட அரசியல். விஜய்யை இப்போதே களத்தில் இறக்கி அவரது பலத்தை எடைபோடுகிறார்” என்று ஒரு நடுநிலை பதிவர் ஒருவர் கருத்து தெரிவித்தார்.
இது குறித்து தமிழக பாஜக உள் வட்டாரங்களில் பேசினால், இந்த கருத்தை உறுதிப்படுத்தும் விதமாகவே அவர்களது கருத்தும் உள்ளது. “விஜய்யின் தவெக எங்களுக்கு பெரிய சவால் இல்லை என்றாலும், அவரது இளைஞர் ஆதரவு எங்களை சற்று கலக்கமடையச் செய்கிறது. அதனால்தான் அண்ணாமலை இப்படி சீண்டி, விஜய்யை களத்தில் இறக்கி அவரது உண்மையான பலத்தை சோதிக்க முற்படுகிறார்” எனக் கூறுகிறார் கமலாலய சீனியர் ஒருவர்.

மறுபுறம், தவெக தரப்பில் பேசினால், “விஜய் இப்போது பொறுமையாக இருக்கிறார். ஆனால், அண்ணாமலையின் சவாலுக்கு பதிலடியாக, 2025-ல் மாபெரும் மக்கள் இயக்கத்தை தொடங்க திட்டமிட்டிருக்கிறோம். இது பாஜகவுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கும்” என்கிறார்கள்.
2026 தேர்தலில் என்ன தாக்கம் ஏற்படும்?
இன்னொரு பக்கம், பாஜக – தவெக ஆகிய இரு தரப்புக்குமான இந்த மோதல் வெறும் நாடகம் தான். பாஜக-வின் ‘பி’ டீம் தான் விஜய். விஜய்க்கு மத்திய உள்துறை அமைச்சகம் ‘ஒய்’ (Y) பிரிவு பாதுகாப்பு அளித்துள்ளது. இது ஒன்றே போதும், விஜய் யாருக்காக களம் இறக்கப்பட்டுள்ளார் என்பதை தெரிந்துகொள்ள. சீமானை வைத்து திமுக-வை வீழ்த்த முயன்றார்கள். அது எடுபடவில்லை என்றதும் தற்போது விஜய்யைக் களத்தில் இறக்கி உள்ளனர்” என்கிறார் அறிவாலய சீனியர் தலைவர் ஒருவர்.
இந்த நிலையில், 2026 சட்டமன்றத் தேர்தலில் பாஜக – தவெக கட்சிகளினால் எத்தகைய தாக்கம் ஏற்படும் என்பது குறித்துப் பேசும் அரசியல் நோக்கர்கள், “விஜய்யின் தவெக, இளைஞர்களையும், அவரது ரசிகர்களையும் ஈர்க்க முயல்கிறது. ‘திமுகவும் பாஜகவும் மக்களை ஏமாற்றுகின்றன’ என்று விஜய் அறிவித்தது, அவ்விரு கட்சிகளுக்கும் சவாலாக அமைகிறது. இந்த ஆண்டு மாவட்ட வாரியாக பயணம் செய்து, திமுக-பாஜகவின் தோல்விகளை மக்களிடம் எடுத்துச் சொல்ல விஜய் திட்டமிட்டிருக்கிறார்.
மறுபுறம், அண்ணாமலை பாஜகவை தமிழ்நாட்டில் வலுப்படுத்த இப்படியான சர்ச்சைகளை பயன்படுத்துகிறார். பொதுமக்கள் கவனத்தை தங்கள் பக்கம் திருப்புவதற்கான ஒரு வாய்ப்பாக விஜய்யை சீண்டுகிறது பாஜக. இந்த மோதல், 2026 தேர்தலில் வாக்காளர்களை பிளவுபடுத்தி, புதிய கூட்டணிகளை உருவாக்க வித்திடலாம். ஆனால், அது எடுபடுமா என்பதை வாக்காளர்கள் எடுக்கப்போகும் முடிவைப் பொறுத்தே அமையும்.