‘விடாமுயற்சி’: அஜித் படத்தின் 6 நாள் வசூல் நிலவரம் என்ன?

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்துள்ள ‘விடாமுயற்சி’ திரைப்படம் படம் கடந்த 6 ஆம் தேதி தமிழகம் உட்பட உலகம் முழுவதும் வெளியானது. இப்படத்தில் அஜித்துடன் த்ரிஷா, ரெஜினா கஸான்ட்ரா, அர்ஜூன், ஆரவ், நிகில் நாயர், ரம்யா சுப்ரமணியன் எனப் பலரும் நடித்துள்ளனர். ஓம்பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தின் கதை 1997 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்கத் திரைப்படமான ‘பிரேக்டவுன்’ (Breakdown) என்ற படத்தின் கதையை அடிப்படையாகக் கொண்டு ஆக்சன் த்ரில்லராக எடுக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டது. இதனால் ‘விடா முயற்சி’ திரைப்படத்துக்கு அவரது ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாது இதர சினிமா ரசிகர்கள் மத்தியிலும் எதிர்பார்ப்புகள் அதிகரித்து காணப்பட்டது.
இந்த நிலையில், இப்படத்துக்கான முதல் நாள் முன்பதிவு நல்ல ஒப்பனிங்குடன் காணப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் 4.1 லட்சத்திற்கும் அதிகமான டிக்கெட்டுகள் விற்பனையாகி, கிட்டத்தட்ட 7.58 கோடி வசூலித்ததாகவும், இந்திய அளவில் ரூ.27 கோடியை வசூலித்ததாகவும் பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. , ஆனால், தொடர்ந்து வந்த நாட்களில் வசூல் நிதானமான அளவிலேயே காணப்பட்டது.
இரண்டாவது நாளில் ரூ.10.25 கோடி, மூன்றாவது நாளில் ரூ.13.50 கோடி, நான்காவது நாளில் ரூ.12.50 கோடி அளவிலும் வசூல் ஈட்டப்பட்ட நிலையில், இந்திய அளவில் முதல் 4 நாட்களில் கிட்டத்தட்ட ரூ.65 கோடியை ஈட்டியது. அதன்பின், ஐந்தாவது நாளான திங்கட்கிழமை வசூல் 3.20 கோடியாகக் குறைந்தது. முதல் நாளின் 27 கோடி வசூலுடன் ஒப்பிடும்போது இது 88 சதவீதம் சரிவு ஆகும். இந்த நிலையில் ஆறாவது நாளில், அதாவது செவ்வாய்க்கிழமை ரூ.3.35 கோடி அளவில் மட்டும் இந்தியாவில் வசூல் செய்தது. தமிழகத்தில் மட்டும் இதுவரை ரூ.69.80 கோடி அளவில் இப்படம் வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அதேவேளையில், ஒட்டுமொத்தமாக உலக அளவில் முதல் 6 நாட்களில் ரூ.118. 84 கோடி வசூலை எட்டியுள்ளதாகவும், இதில் இதில் இந்தியாவில் இருந்து 82.36 கோடி மொத்த வசூலும், வெளிநாடுகளில் இருந்து 36.48 கோடி மொத்த வசூலும் அடங்கும்.
பட்ஜெட்டை தாண்டுமா வசூல்?
இந்த நிலையில், இந்தப் படம் 185 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த செலவோடு ஒப்பிடும்போது, இந்தப் படம் இதுவரை 69.80 கோடி மட்டுமே வசூலித்துள்ளது. அதாவது இதுவரை மொத்த பட்ஜெட்டில் 37.72% மட்டுமே வசூலாகியுள்ளது. இந்த வார இறுதியையும் தாண்டினால் தான் படத்தின் வசூல் பட்ஜெட்டையாவது நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.