‘விடாமுயற்சி’ ரிலீஸ் : அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்… முதல் நாள் முன்பதிவிலேயே வசூல் சாதனை!

மகிழ்திருமேனியின் இயக்கத்தில் அஜித் நடித்திருக்கும் படம் ‘விடாமுயற்சி’ திரைப்படம் வியாழக்கிழமை வெளியாவதையொட்டி, கொண்டாட்டத்துக்கு தயாராகி வருகிறார்கள் அவரது ரசிகர்கள்.
கடைசியாக 2023 ஆம் ஆண்டில் தான் அஜித்தின் ‘துணிவு’ படம் வெளியானது. ஏறக்குறைய இரண்டு வருட இடைவெளிக்கு பிறகு வெளியாகும் அஜித் படமென்பதால் ‘விடாமுயற்சி’ படத்துக்கு அவரது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ள நிலையில், ‘விடாமுயற்சி’ வெளியாகும் திரையரங்குகள் இன்றே களைகட்டத் தொடங்கிவிட்டன.
இப்படத்தில் அஜித்துடன் த்ரிஷா, ரெஜினா கஸான்ட்ரா, அர்ஜூன், ஆரவ், நிகில் நாயர், ரம்யா சுப்ரமணியன் என பலரும் நடித்துள்ளனர். ஓம்பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார்.
‘விடாமுயற்சி’ பொங்கல் பண்டிகையின்போதே வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் திடீரென ரிலீஸை தள்ளி வைப்பதாக அப்படத்தை தயாரித்த ‘லைகா’ நிறுவனம் அறிவித்தது. இதனால், அஜித்தின் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தார்கள்.
இந்த நிலையில், ஒருவழியாக ‘விடா முயற்சி’ திரைப்படம் நாளை வியாழன்று தமிழகம் மட்டுமல்லாது உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் வெளியாகிறது. தமிழ்நாட்டில் நாளை காலை 9 மணி சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது. தயாரிப்பு நிறுவனத்தின் கோரிக்கையை ஏற்று நாளை ஒரு நாள் மட்டும் காலை 9 மணிக்கு தொடங்கி இரவு 2 மணி வரை 5 காட்சிகள் திரையிட, அதாவது கூடுதலாக ஒரு காட்சி திரையிட்டு கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கதை என்ன?

இந்த படத்தின் கதை 1997 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்கத் திரைப்படமான ‘பிரேக்டவுன்’ (Breakdown) என்ற படத்தின் கதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. காணாமல் போன தனது மனைவி கயலைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ள அர்ஜூனைச் சுற்றி கதை சுழல்கிறது. அஜர்பைஜானில் ஒரு மோசமான குழுவால் பிடிக்கப்பட்ட கயலைத் தேடும் மர்மமான பயணத்துடன், ஆக்சன் த்ரில்லராக இப்படம் உருவாகி உள்ளது.
இதனால் ‘விடா முயற்சி’ திரைப்படத்துக்கு அவரது ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாது இதர சினிமா ரசிகர்கள் மத்தியிலும் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. சில மாவட்டங்களில் நட்பு பாராட்டும் விதமாக விஜய் ரசிகர்களே ‘விடா முயற்சி’ வெற்றி பெற வாழ்த்தி கட் அவுட்கள் வைத்துள்ளனர்.
முதல் நாளிலேயே முன்பதிவு வசூல் அபாரம்
இப்படியான காரணங்களால் தியேட்டர்களில் டிக்கெட் புக்கிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. முதல் நாள் முன்பதிவு வசூலில் ‘விடா முயற்சி’ ஒரு அற்புதமான சாதனையைப் படைத்துள்ளதாகவும், தமிழ்நாடு முழுவதும் 4.1 லட்சத்திற்கும் அதிகமான டிக்கெட்டுகள் விற்பனையாகி, கிட்டத்தட்ட 7.58 கோடி வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

புதன்கிழமை மதியம் 1 மணி நிலவரப்படி, இந்தியா முழுவதும் 5,722 காட்சிகளுக்கு 4,74,600 டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளதாகவும், இதில் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.7.45 கோடி அளவுக்கு டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவுவும், அதைத் தொடர்ந்து கர்நாடகா ரூ.88.4 லட்சத்துடன் இரண்டாவது இடத்தில் உள்ளதாகவும்
தகவல்கள் தெரிவிக்கின்றன.
‘பட்ஜெட் ரூ. 200 கோடி’
இந்தப் படம் ரூ.200 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ளதாகவு, இதில் அஜித் குமாரின் சம்பளம் ரூ.110-120 கோடி என்றும் கூறப்படுகிறது. வெங்கட் பிரபு இயக்கத்தில் 2011 ஆம் ஆண்டு வெளியான ‘மங்காத்தா’ படத்திற்குப் பிறகு, 14 ஆண்டுகள் கழித்து அஜித்துடன் இணைந்து முதன்முறையாக இப்படத்தில் நடித்துள்ளார் நடிகர் அர்ஜுன் என்பது குறிப்பிடத்தக்கது.