வேங்கை வயல் விவகாரம்: நடந்தது என்ன..? தமிழக அரசு சொல்லும் விளக்கம்!

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஒன்றியத்திற்கு உட்பட்டது வேங்கை வயல் கிராமம். கடந்த 2022 ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் 26 ஆம் தேதி, இக்கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் தண்ணீரில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவம் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதில் ஈடுபட்ட சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் போராட்டம் நடத்தின. மேலும், மனித உரிமை ஆணையம் உட்பட பல்வேறு தரப்பிலிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டது.

இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்திய நிலையில், அது குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த நிலையில், இந்த வழக்கை, 2023 ஆம் ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதி சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. ஆனால், நீண்ட நாட்களாகியும் இவ்வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை என, சென்னை உயர் நீதிமன்றம் அண்மையில் அதிருப்தி தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது சிபிசிஐடி சார்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதில் முரளி ராஜா, சுதர்சன், முத்துகிருஷ்ணன் ஆகிய 3 பேர் குற்றவாளிகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மூவரும் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

இந்த நிலையில், “இந்த வழக்கில் பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர்களே குற்றவாளிகள் என்று காவல்துறை கூறுவது அதிர்ச்சி அளிக்கிறது. இது ஏற்கத்தக்கதாக இல்லை. எனவே, சிபிசிஐடி சமர்ப்பித்திருக்கும் குற்றப் பத்திரிகையை விசாரணை நீதிமன்றம் ஏற்கக் கூடாது, சிபிஐ விசாரணை வேண்டும்” என திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி, இடதுசாரிகள் உள்ளிட்டவை வலியுறுத்தி உள்ளன. அதேபோன்று அதிமுக, பாஜக-வும் சிபிஐ விசாரணை கோரி உள்ளன.

இதனிடையே வேங்கை வயலை சுற்றி உள்ள சோதனை சாவடிகளில் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். விசிக-வினர், சிபிஐ விசாரணை வேண்டும் என போராட்டங்களில் ஈடுபடலாம் என்பதன் அடிப்படையில் போலீசார் குவிக்கப்பட்ட நிலையில் தடையை மீறி உள்ளே நுழைந்த விசிகவை சேர்ந்த இருவரை போலீசார் கைது செய்து தடுத்து நிறுத்தினர்.

தமிழக அரசு விளக்கம்

இந்த நிலையில், “வேங்கைவயல் சம்பவம் குறித்து தவறான தகவல்களைப் பரப்பிட வேண்டாம்!” என வேண்டுகோள் விடுத்து தமிழ்நாடு அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், “இந்த வழக்கின் விசாரணையின்போது, புகார்தாரர் மற்றும் அவரது உறவினர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட சாட்சிகள் விசாரிக்கப்பட்டதோடு, ஏராளமான ஆவணங்களும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. இதைத்தவிர, பல நபர்களின் அலைபேசி எண்கள் மற்றும் தொலைத்தொடர்பு தகவல்கள் பகுப்பாய்வு செய்யப்பட்டன. வேங்கைவயல், எறையூர் கிராம மக்களிடம் இதற்கான பல்வேறு காரணங்கள் குறித்தும் விரிவாக விசாரிக்கப்பட்டது. மேலும், அந்தக் கிராமத்தைச் சேர்ந்த சில நபர்களிடமிருந்து உயிரியல் மாதிரிகள் எடுக்கப்பட்டு, விரிவான டி.என்.ஏ பகுப்பாய்வும் செய்யப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணை மற்றும் பகுப்பாய்வுகளின் அடிப்படையில், பின்வரும் விவரங்கள் உறுதி செய்யப்பட்டன:

சம்பவம் நடப்பதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு, 02.10.2022 அன்று வேங்கைவயலில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பராமரிப்பு குறித்து எழுப்பியதற்காக முத்துக்காடு ஊராட்சித் தலைவர் பத்மா என்பவரின் கணவர் முத்தையா என்பவர் கிராமசபைக் கூட்டத்தின் போது, தமிழ்நாடு காவல் துறை ஆயுதப்படைப் பிரிவில் பணியாற்றும் காவலர் முரளிராஜாவின் தந்தை ஜீவானந்தம் ஜீவானந்தம் என்பவரை அவமானப்படுத்தும் விதமாகத் திட்டியுள்ளார்.

இச்சம்பவத்திற்கு பழிவாங்கும் வகையில் முரளிராஜாவால் இச்செயல் திட்டமிட்டுச் செயல்படுத்தப்பட்டது என்பது காவல் துறையின் விசாரணையின் மூலம் ஆதாரப்பூர்வமாக புலனாகியுள்ளது. மேலும், இச்சம்பவத்தில் முரளிராஜா, சுதர்ஷன், முத்தையா, ஆர்.முத்துகிருஷ்ணன் மற்றும் பலரின் கைப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டு, தமிழ்நாடு தடயவியல் பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்ட போது, அவற்றில் இந்தச் சம்பவம் தொடர்பான பல புகைப்படங்களும், உரையாடல்களும் அழிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இந்தத் தகவல்கள் அனைத்தும் தொழில்நுட்ப உதவியோடு மீட்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டதில், இச்சம்பவத்தில் அவர்களுக்குள்ள தொடர்பு உறுதி செய்யப்பட்டு, 20.01.2025 அன்று நீதிமன்றத்தில் சிபிசிஐடி சார்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.எனவே, இதுதொடர்பாக தவறான தகவல்களை யாரும் பரப்பிட வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Our emergency movie review offers fast, honest insights to help you choose your next film. 최신 온라인 슬롯. © 2023 24 axo news.