தமிழ்நாட்டிற்கான மேலும் 2 புதிய ரயில்கள் சேவையை காணொளிக்காட்சி மூலமாக பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று நடைபெற்ற இதற்கான விழாவில், சென்னை எழும்பூர் – நாகர்கோவில், மதுரை – பெங்களூர் இடையேயான ரயில் சேவை தொடங்கப்பட்டது.
எந்தெந்த நாட்கள்?
சென்னை எழும்பூர் – நாகர்கோவில் இடையேயான வந்தே பாரத் ரயில் சேவை, வாரத்தில் புதன்கிழமை தவிர 6 நாட்கள் இயக்கப்படும். இந்த ரயில் எழும்பூரில் இருந்து அதிகாலை 5 மணிக்கு புறப்பட்டு, நாகர்கோவிலை அன்று மதியம் 1.50 மணிக்கு சென்றடையும்.
அதேபோல், மறுமார்க்கமாக, இந்த ரயில் நாகர்கோவிலில் இருந்து பிற்பகல் 2.20 மணிக்கு புறப்பட்டு, அன்றைய தினம் இரவு 11 மணிக்கு எழும்பூர் ரயில் நிலையத்தை வந்தடையும். இந்த ரயில் தாம்பரம், விழுப்புரம், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், மதுரை, கோவில்பட்டி, திருநெல்வேலி ஆகிய நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயிலில் 16 பெட்டிகள் சேர்க்கப்பட உள்ளன. 1248 பேர் இந்த ரயிலில் பயணிக்க முடியும்.
அதேபோன்று மதுரை – பெங்களூரு கண்டோன்மென்ட் இடையேயான வந்தே பாரத் ரயில் சேவை (20671-20672) வாரத்தில் செவ்வாய்க்கிழமை தவிர 6 நாட்கள் இயக்கப்படும். இந்த ரயில், மதுரையில் இருந்து அதிகாலை 5.15 மணிக்கு புறப்பட்டு, அன்றைய தினம் மதியம் 1 மணிக்கு பெங்களூரு கண்டோன்மென்ட்டை பகுதியை சென்றடையும்.
மறுமார்க்கமாக, இந்த ரயில் பெங்களூரு கண்டோன்மென்ட்-ல் இருந்து மதியம் 1.30 மணிக்கு புறப்பட்டு, அன்றைய தினம் இரவு 9.45 மணிக்கு மதுரையைச் சென்றடையும். இந்த ரயில் மதுரை, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, கரூர், நாமக்கல், சேலம், கிருஷ்ணராஜபுரம் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயிலில் 8 பெட்டிகள் இணைக்கப்பட உள்ளன.
கட்டணம் எவ்வளவு?
சென்னை எழும்பூர் – நாகர்கோவில் வந்தே பாரத் ரயிலில் சாதாரண இருக்கைகள் பெட்டியில் ( Chair Car) சென்னையிலிருந்து தாம்பரத்திற்கு ரூ.380, விழுப்புரத்திற்கு ரூ.545, திருச்சிக்கு ரூ. 955, திண்டுக்கல்லுக்கு ரூ.1105, மதுரைக்கு ரூ.1200, கோவில்பட்டிக்கு ரூ.1350, திருநெல்வேலிக்கு ரூ.1665, நாகர்கோவிலுக்கு ரூ.1760 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
உயர் வகுப்பு இருக்கைகளுக்கு சென்னையிலிருந்து தாம்பரத்திற்கு ரூ.705, விழுப்புரத்திற்கு ரூ.1055, திருச்சிக்கு ரூ.1790, திண்டுக்கல்லுக்கு ரூ.2110, மதுரைக்கு ரூ.2295, கோவில்பட்டிக்கு ரூ.2620, திருநெல்வேலிக்கு ரூ.3055, நாகர்கோவிலுக்கு ரூ.3240 கட்டணமாக நிற்ணயிக்கப்பட்டுள்ளது. உணவுக்கான கட்டணமும் சேர்த்து நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், பெங்களூர் ரயிலில் மதுரையிலிருந்து திண்டுக்கல்லுக்கு ரூ.440, திருச்சிக்கு ரூ.555, கரூருக்கு ரூ.795, நாமக்கல்லிற்கு ரூ.845, சேலத்திற்கு ரூ. 935, கிருஷ்ணராஜபுரத்திற்கு ரூ.1555, பெங்களூரு கண்டோன்மெண்ட்டிற்கு ரூ.1575 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதே ரயிலில் உயர்வகுப்பு இருக்கைகளுக்கு (எக்ஸ்கியூட்டிவ் கோச்- இ.சி.,) மதுரையிலிருந்து திண்டுக்கல்லுக்கு ரூ.825, திருச்சிக்கு ரூ.1075, கரூருக்கு ரூ.1480, நாமக்கல்லிற்கு ரூ.1575, சேலத்திற்கு ரூ.1760, கிருஷ்ணராஜபுரத்திற்கு ரூ.2835, பெங்களூரு கண்டோன்மெண்ட்டிற்கு ரூ.2865 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.