வைபவ் சூர்யவன்ஷி: இந்திய கிரிக்கெட்டின் அடுத்த சூப்பர் ஸ்டாரா?

வைபவ் சூர்யவன்ஷி… பீகாரின் தாஜ்பூர் கிராமத்திலிருந்து உருவாகி இருக்கும் இளம் கிரிக்கெட் புயல்! 14 வயதில் ஐபிஎல் 2025-இல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக அறிமுகமாகி, ஏப்ரல் 28 அன்று நடந்த குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான ஆட்டத்தில், 35 பந்துகளில் சதம் அடித்து கிரிக்கெட் உலகையே திகைக்க வைத்துள்ளான்.
டி20 கிரிக்கெட்டில் சதமடித்த மிக இளம் வயது வீரர் ஆன இந்தச் சிறுவன், ஒரு கிராமத்து கனவை இந்திய கிரிக்கெட்டின் எதிர்கால நம்பிக்கையாக மாற்றுவதாக சிலாகிக்கிறார்கள் கிரிக்கெட் விற்பன்னர்கள்.
வைபவ் இந்தியாவின் அடுத்த கிரிக்கெட் சூப்பர் ஸ்டாரா…?
கிராமத்து கனவின் வெற்றிக் கதை
வைபவின் தந்தை சஞ்சீவ், மகனின் கிரிக்கெட் ஆசைக்காக தனது வயல்களை விற்றிருக்கிறார். சாமஸ்திபூரில் 9 வயதில் பயிற்சியைத் தொடங்கிய வைபவ், 12 வயதில் வினு மங்கட் டிராஃபியில் (Vinoo Mankad Trophy) 5 போட்டிகளில் 400 ரன்கள் குவித்து அனைவரையும் மிரள வைத்தான். 12 வயது 284 நாட்களில் ரஞ்சி டிராஃபியில் அறிமுகமானவன், இந்தியாவின் மிக இளம் முதல்-தர வீரர் ஆனான்.
2024 அண்டர்-19 ஆசியக் கோப்பையில் 176 ரன்கள் (இரு அரைசதங்கள்) அடித்து, ராகுல் டிராவிட், விவிஎஸ் லக்ஷ்மண் ஆகியோரின் வழிகாட்டுதலில் மிளிர்ந்தான். ஐபிஎல் 2025-இல், 13 வயதில் 1.1 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தமாகி, யஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன் 166 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து, ராஜஸ்தான் ராயல்ஸின் 5 தோல்விகளை முடிவுக்கு கொண்டு வந்தான். அவனது 101 ரன்களில் 94 ரன்கள் பவுண்டரிகளாக (11 சிக்ஸர்கள்) இருந்துள்ளன.
எதிர்காலத்தின் ஆல்-ரவுண்டர்
வைபவின் இடது கை பேட்டிங், இடது கை சுழற்பந்து வீச்சு அவனை ஒரு ஆல்ரவுண்டராக்குகிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன், “வைபவின் திறமை அசாதாரணம்,” என்று பேட்டி ஒன்றில் கூறினார். பயிற்சியாளர் மனீஷ் ஓஜா, “இவன் இந்தியாவை ஆளப்போகிறான்,” எனப் பெருமிதத்துடன் கூறுகிறார். விக்ரம் ரத்தோர், ஒரு டிரையலில் வைபவ் ஒரு ஓவரில் மூன்று சிக்ஸர்கள் அடித்ததை மிகவும் சிலாகிப்புடன் குறிப்பிடுகிறார். ஆனால், விஜய் ஹசாரே டிராஃபியில் 4 ரன்கள், டக் போன்ற தோல்விகள், இளம் வயதில் நிலைத்தன்மை என்பது ஒரு சவாலான விஷயம் என்பதை உணர்த்துகின்றன.

ரசிகர்களின் நிஜ ஹீரோ
வைபவின் கதை, 2007 ல் வெளிவந்த Chain Kulii Ki Main Kulii குழந்தைகள் படத்தை நினைவூட்டுகிறது. அதாவது “வைபவ் திரைப்பட ஹீரோவை நிஜமாக்கி விட்டான்,” என்று சமூக வலைதளங்களில் சிலாகிக்கிறார்கள் கிரிக்கெட் ரசிகர்கள். ஆனால், “வைபவை ‘அடுத்த சச்சின்’ என்று அழைப்பது அழுத்தத்தை தரும், 14 வயதில் இத்தகைய புகழ் மன அழுத்தத்தை ஏற்படுத்தலாம்” என்றும் சில மூத்த கிரிக்கெட் வீரர்கள் எச்சரிக்கிறார்கள்.
வயது சர்ச்சை
வைபவின் சாதனைகள் சிலருக்கு ஆச்சர்யமாக இருந்தாலும், பாகிஸ்தான் வீரர் ஜுனைத் கான், அவனது 13 வயது உடல் திறன் குறித்து கேள்வி எழுப்பியது சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால், வைபவின் பிறப்பு (மார்ச் 27, 2011, Wikipedia) மற்றும் ரஞ்சி, அண்டர்-19 பதிவுகள் அவனது வயதை உறுதிப்படுத்துகின்றன. அவனது தந்தை, “வைபவின் திறமை உழைப்பால் வந்தது, வயது மோசடி இல்லை,” என்று தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
எதிர்கால கிரிக்கெட் சூப்பர் ஸ்டார்
மொத்தத்தில் வைபவின் சாதனைகள், இந்திய கிரிக்கெட்டுக்கு ஒரு புதிய அத்தியாயத்தை எழுதுகின்றன என்றே சொல்லலாம். டிராவிட், லக்ஷ்மண் ஆகியோரின் வழிகாட்டுதல், அவனை ஒரு உலகத்தர வீரராக உருவாக்கலாம். ராஜஸ்தான் ராயல்ஸின் இளம் திறமைகளை முதலீடு செய்யும் உத்தி, வைபவை மையமாக வைத்து பலனளிக்கிறது.

வைபவ், தாஜ்பூரின் கனவை மட்டுமல்ல, இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலத்தையும் சுமக்கிறான். சஞ்சு சாம்சன், யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோருடனான பயிற்சி, அவனது ஆட்டத்துக்கு மெருகூட்டுகிறது. ஆனால், இளம் வயதில் அழுத்தம், தோல்விகளை எதிர்கொள்ளும் மனப்பக்குவம் ஆகியவை சவாலான விஷயமே. இந்திய கிரிக்கெட் அமைப்பு, இத்தகைய திறமைகளை பாதுகாக்க வேண்டும்.
வைபவின் பயணம் இப்போதுதான் தொடங்கியிருக்கிறது, ஆனால், அவன் ஒரு கிரிக்கெட் சூப்பர் ஸ்டாராக மின்னுவது உறுதி!