‘வாழை’: தொலைந்துபோன பால்ய கதையுடன் வரும் மாரி செல்வராஜ் … படத்தைப் பாராட்டிய மணிரத்னம்… கேள்வி எழுப்பிய பா. ரஞ்சித்!
‘பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’ மற்றும் ‘மாமன்னன்’ படங்களைத் தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ள படம் ‘வாழை’.
வருகிற 23 ஆம் தேதியன்று ரிலீஸாக உள்ள இப்படத்தில் கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி, பிரியங்கா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்துக்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
‘எனது கண்ணீர் தான் வாழை’
இந்த நிலையில், இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய இயக்குநர் மாரி செல்வராஜ், “என்னுடைய உச்சபட்ச கண்ணீர் என்றால் அது ‘வாழை’ தான். என்னதான் இவனுக்கு பிரச்னை என்று நினைப்பவர்களுக்கு நானே என்னை பற்றி சொல்கிறேன் என்று எடுத்தப் படம்தான் இது. என்னுடைய வலியை, என்னுடைய பரிதவிப்பை, என்னுடைய அழுகையை நான் என் இயக்குநர் ராமிடம் சொல்லும்போது, இதுதான் கலை என்று எனக்கு உணர்த்தியர் அவர். அவருக்கு இந்த படத்தை அர்ப்பணிக்கிறேன்” என்றார்.
‘ஆனந்த விகடன்’ வார இதழில் ‘சம்படி ஆட்டம்’ என்ற தலைப்பில் மாரி செல்வராஜ் எழுதி வரும் தொடரின் பெரும்பாலான அத்தியாயங்கள் அவரது பால்ய பருவத்தின் நினைவோட்டங்களாகவே எழுதப்பட்டுள்ளன. அதில் அவரது இளமைக்கால வறுமை, வலி, வேதனை, கொண்டாட்டங்கள் என அத்தனையையும் பதிவு செய்துள்ளார். இதை அடிப்படையாக வைத்துதான் ‘வாழை’ திரைப்படமும் உருவாகி உள்ளது.
பாராட்டிய மணிரத்னம்
இதனிடையே ‘வாழை’ படத்தை ஏற்கெனவே இயக்குநர்களுக்கான தனித்திரையிடலில் பார்த்துவிட்ட இயக்குநர் மணிரத்னம், இந்த நிகழ்ச்சியில் வீடியோ மூலம் பேசினார். அதில், ‘வாழை’ படத்தை வெகுவாக பாராட்டி உள்ளார்.” மாரி செல்வராஜ் ஒரு சிறந்த இயக்குநர். தமிழ் திரையுலகில் வலிமையான குரலாக விளங்குகிறார். மற்ற படங்களை போலவே இந்த படத்திலும் எல்லா துறைகளையும் சிறப்பாக கையாண்டுள்ளார். உங்களை நினைத்து எனக்கு பெருமையாக இருக்கிறது. ஒரு கிராம கதையில் எப்படி எல்லாரையும் இவ்வளவு நல்ல நடிக்க வைக்க முடியும், உங்களைப் பார்த்தால் எனக்கு பொறாமையா இருக்கிறது. இது ஒரு தனி திறமை. இந்த படத்திற்கு என்னுடைய வாழ்த்துகள்” என்று பேசியுள்ளார்.
கேள்வி எழுப்பிய பா. ரஞ்சித்
இந்த நிலையில், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய இயக்குநர் பா.ரஞ்சித், ” ‘பரியேறும் பெருமாள்’ படத்தை பாராட்டும் பலரும் ‘கர்ணன்’ பிடிக்கவில்லை என்றும், ‘மாமன்னன்’ படம் பிடிக்கவில்லை. ‘வாழை’ படம் நல்லா இருக்குன்னு சொல்கிறார்கள். அவர்களைப் பார்த்துக் கேட்கிறேன். அப்போ, ‘கர்ணன்’, ‘மாமன்னன்’ படங்கள் என்ன மொக்கைப் படங்களா? ‘அந்த இரண்டு படங்களிலும் ஹீரோ திருப்பி அடிக்கிறான். அதனால் பிடிக்கவில்லை’ என்று சொல்வதெல்லாம் ரொம்ப மோசம். இன்னும் எத்தனை வருஷத்துக்கு இப்படித்தான் படம் எடுக்கணும்னு எங்களுக்கு பாடம் சொல்லிக்கொடுத்துக்கிட்டே இருப்பீங்க. அந்த சூழல், அவனோட நிலைமை, அவனை அப்படி திருப்பி அடிக்கத் தூண்டும் சமூகம் என்பதை எல்லாம் புரிந்துக் கொள்ள மறுப்பது சரியில்லை.
வலிகளை சினிமாவில் காட்சிகளாக கடத்த வேண்டும் என நான் நினைக்கவே மாட்டேன். அதிலிருந்து மீண்டு வெற்றியை பெறுபவனையே கதையின் நாயகனாக வைத்து படங்களை எடுத்து வருகிறேன். ஆனால், மாரி செல்வராஜின் பார்வையே வேறு, தான் பட்ட வலிகளை அப்படியே திரையில் படமாக எடுத்துக் காட்டி, அனைவரையும் கேள்விக் கேட்டு உலுக்கிவிடுவான்.
மேலும், மாரி செல்வராஜ் அனைத்து இயக்குநர்களுக்கும் படத்தைப் போட்டுக் காட்டி அவர்களின் கருத்துகளை வாங்கியது எல்லாம் சூப்பர் மேட்டர். எனக்கு அந்தளவுக்கு தைரியம் இல்லை. எனக்கு ரொம்ப பிடித்த இயக்குநர் என்னோட படங்களைப் பார்ப்பார். ஆனால், அதுபற்றி பேச மாட்டார். அவருக்கே படத்தைப் போட்டுக் காட்டி, நல்ல ஒபினியன் வாங்கியது எல்லாம் தரமான சம்பவம்” எனப் பாராட்டினார்.