ஏப்ரல் 1 முதல் புதிய விதிமுறைகள்: கூகுள் பே, போன்பே பயனர்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை…

பொதுமக்களுக்கு தற்போது கூகுள் பே, போன் பே மற்றும் பேடிஎம் (Google Pay, PhonePe,Paytm) போன்ற டிஜிட்டல் பேமென்ட் முறை மூலம் பண பரிமாற்றம் செய்வது மிகவும் எளிமையானதாக உள்ளது.
அந்த வகையில், இத்தகைய டிஜிட்டல் பேமென்ட்களை பயன்படுத்துவோர், தங்களது வங்கி கணக்குக்காக கொடுக்கப்பட்ட மொபைல் எண்களில் ஏதும் மாற்றம் செய்திருந்தால், அதை உடனடியாக வங்கி மற்றும் யுபிஐ ஆப்பில் புதுப்பிக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.
இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) வருகிற ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் இது தொடர்பான புதிய விதிகளை அமல்படுத்த உள்ளது. இதன்படி, பயன்பாட்டில் இல்லாத மொபைல் எண்களை யுபிஐ பயனாளர்கள் தங்களது வங்கி கணக்கிலிருந்து நீக்க வேண்டும். பரிவர்த்தனை பாதுகாப்பையும் வசதியையும் உறுதி செய்யும் விதமாக புதிய மொபைல் எண்ணை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்.
அவ்வாறு புதிய எண் புதுப்பிக்கப்படாவிட்டால், யுபிஐ மூலம் பணம் பெறுவதில் சிக்கல் ஏற்படலாம். அத்துடன் வாடிக்கையாளர்கள் தங்களது புதிய மொபைல் பதிவு எண்ணை புதுப்பிக்காவிட்டால், தவறான எண்களுக்கு பணம் செல்லும் அபாயமும் உள்ளது என NPCI எச்சரித்துள்ளது.
பயனர்கள் செய்ய வேண்டியவை
உடனடி புதுப்பிப்பு: மொபைல் எண்ணை மாற்றியிருந்தால், வங்கி மற்றும் யுபிஐ ஆப்பில் (Google Pay, PhonePe போன்றவை) புதிய எண்ணை பதிவு செய்யுங்கள்.
அறிவிப்புகளை கவனியுங்கள்: யுபிஐ ஆப்கள் எண் மாற்றத்திற்கு உங்கள் சம்மதத்தை கேட்கும் (‘ஆப்ட்-இன்’ விருப்பம்). உறுதி செய்யாமல் மாற்றங்கள் நடக்காது.
வங்கியை தொடர்பு கொள்ளுங்கள்: பழைய எண் க்ளோஸ் செய்யப்பட்டிருந்தால், வங்கிக்கு தெரிவித்து கணக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்தவும். புதிய எண் புதுப்பிக்கப்படாவிட்டால், பரிவர்த்தனைகள் தடைபடலாம்.
தாமதம் வேண்டாம்…மார்ச் 31 ஆம் தேதி வரை தான் கால அவகாசம்!