மீண்டும் முடங்கிய யுபிஐ சேவை…கேள்விக்குறியாகும் டிஜிட்டல் பொருளாதாரம்… குறைபாடுகள் எங்கே?

டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளுக்கு, மக்கள் பெரிதும் பயன்படுத்தும் யுபிஐ எனப்படும் ஒருங்கிணைந்த மின்னணு பரிமாற்ற ( Unified Payments Interface – UPI) சேவைகள் நாடு முழுவதும் சனிக்கிழமையன்று முடங்கியது. இதனால் கோடிக்கணக்கான பயனர்கள் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியாமல் தவித்தனர்.
கூகுள் பே, பேடிஎம், போன் பே போன்ற முன்னணி கட்டண செயலிகள் மூலம் கட்டணங்கள் செலுத்த முடியாதததால், வாடிக்கையாளர்களும், வியாபாரிகளும் பெரும் அவதிக்கு உள்ளாகினர். இந்த முடக்கத்தினால் ஹெச்டிஎஃப்சி வங்கி, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, பேங்க் ஆஃப் பரோடா மற்றும் கோடாக் மகேந்திரா வங்கிகள் உட்பட பல நிதி நிறுவனங்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டன.
கேள்விக்குள்ளான டிஜிட்டல் பொருளாதாரம்
இது கடந்த ஒரு மாதத்தில் நடந்த மூன்றாவது பெரிய முடக்கமாகும். இந்த முடக்கம் இந்தியாவின் டிஜிட்டல் பணப்பரிமாற்ற உள்கட்டமைப்பின் நம்பகத்தன்மை குறித்து மக்களிடையே கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது. அத்துடன் அதனை உடனடியாக மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் உணர்த்தி உள்ளது.
மேலும் இந்த நிகழ்வு, யு.பி.ஐ.யின் பலவீனங்களை வெளிப்படுத்தி இருப்பதோடு, இந்தியாவின் பணமில்லா பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான அவசர நடவடிக்கைகளின் தேவையையும் உணர்த்தியுள்ளது.
யு.பி.ஐ., தேசிய பணப்பரிமாற்றக் கழகத்தால் ( National Payments Corporation of India -NPCI ) நிர்வகிக்கப்படுகிறது. இது, இந்தியாவின் டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் முதுகெலும்பாக உள்ளது. கடந்த மார்ச் மாதம் 20 லட்சம் கோடி ரூபாய் அளவிலான 13 பில்லியன் பரிவர்த்தனைகள் பதிவாகியுள்ளன. சிறு வணிகர்கள் முதல் பெரு நிறுவனங்கள் வரைக்கு, யு.பி.ஐ. இன்றியமையாததாக உள்ளது. ஆனால், இன்றைய முடக்கம், பல மணி நேரம் பொருளாதாரத்தின் பெரும் பகுதியை முடக்கியது. டவுன்டிடெக்டர் அறிக்கையின்படி, சனிக்கிழமை மதியத்திற்குள் 2,100 புகார்கள் பதிவாகின, 80% பயனர்களால் பணப்பரிமாற்றம் செய்யமுடியவில்லை. மளிகை, எரிபொருள், மருத்துவ அவசர தேவைகள் உள்ளிட்ட அத்தியாவசிய பரிவர்த்தனைகள் தடைபட்டன.

என்.பி.சி.ஐ. இந்தக் கோளாறை தொழில்நுட்பப் பிரச்னைகள்” என்று அறிவித்தாலும், விரிவான காரணங்கள் தெரிவிக்கப்படவில்லை. சர்வர் தோல்வி மற்றும் பிணையத்தில் பரவிய பிரச்னைகள், மாற்று அமைப்புகளின் பற்றாக்குறை போன்றவையே நீண்ட முடக்கத்திற்கு காரணமாக சொல்லப்படுகிறது.
எதிர்கால தீர்வைச் சொல்லாத NPCI
“பிரச்னைகளைத் தீர்க்கிறோம், பயனர்களுக்கு ஏற்பட்ட அசௌகரியத்திற்கு வருந்துகிறோம்” என்ற அளவில் மட்டுமே என்.பி.சி.ஐ.யின் அறிக்கையில் கூறப்பட்டிருந்ததே தவிர, தீர்வு அல்லது எதிர்காலத் தடுப்பு நடவடிக்கைகளைப் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
“இதில் மிகவும் கவலை அளிக்கும் அம்சம், மாற்று வழிமுறைகள் இல்லாமை தான். கிரெடிட் கார்டு அமைப்புகளில் மாற்று பாதைகள் (POS-to-host fallback) இருக்கும். ஆனால் யு.பி.ஐ.யில் இதுபோன்ற மாற்று வழி இல்லை. முதன்மை சர்வர் முடங்கும்போது, பரிவர்த்தனைகளைத் தொடர மாற்று கட்டமைப்பு ஏன் இல்லை? பயனர்களுக்கு முடக்கம் குறித்த உடனடி எச்சரிக்கைகள் ஏன் வழங்கப்படவில்லை? இத்தகைய குறைபாடுகள், அமைப்பின் வடிவமைப்பில் காணப்படும் பெரும் மேற்பார்வைக் குறைபாட்டை வெளிப்படுத்துகின்றன” என்கிறார்கள் இத்துறை சார்ந்த வல்லுநர்கள்.
உடனடி தேவை என்ன?
மேலும், “ரிசர்வ் வங்கி (ஆர்.பி.ஐ.) மற்றும் என்.பி.சி.ஐ. ஆகியவையும் கேள்விக்கு உட்படுத்தப்பட வேண்டும். யு.பி.ஐ.யின் வளர்ச்சி பாராட்டத்தக்கது என்றாலும், அமைப்பின் நம்பகத்தன்மை மற்றும் முடக்கங்களின் போது பொது தகவல் தொடர்பு ஆகியவற்றில் ஒழுங்குமுறை கவனம் பின்தங்கியுள்ளது. யு.பி.ஐ. உள்நாட்டிலும், சர்வதேச அளவிலும் டிஜிட்டல் உள்கட்டமைப்புக்கான மாதிரியாக முன்னிறுத்தப்படும்போது, இத்தகைய பாதிப்புகளைத் தடுக்க கடுமையான வழிகாட்டுதல்கள் அவசியம்” என்றும் அவர்கள் வலியுறுத்துகிறார்கள்.

இந்த முடக்கம் ஒரு தொழில்நுட்பக் கோளாறாக மட்டும் கருதப்படக் கூடாது. இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற ஃபின்டெக் தளத்தின் அமைப்பு பலவீனங்களை வெளிப்படுத்திய ஒரு சோதனையாகவே இதனைக் கருத வேண்டும். வலுவான மாற்று அமைப்புகள், தோல்விகளின் போது தெளிவான தகவல் தொடர்பு, பல்வகைப்பட்ட சுவிட்ச் கட்டமைப்பு மற்றும் வலுவான ஒழுங்குமுறை மேற்பார்வை ஆகியவை இனி மிக அவசியமானவை.
அந்த வகையில், இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரம் மற்றொரு முடக்கத்தைத் தாங்காது. ஒரு பில்லியன் மக்களின் நம்பிக்கை, இந்த விரிசல்களை எவ்வளவு விரைவாக சரிசெய்கிறோம் என்பதைப் பொறுத்தே உள்ளது!