Amazing Tamilnadu – Tamil News Updates

UPI பரிவர்த்தனை வரம்பு ரூ.5 லட்சமாக உயர்வு… முழு விவரம்!

ன்றைய இந்தியாவில் யுபிஐ பரிவர்த்தனை ( Unified Payments Interface -UPI) என்பது சர்வ சாதாரண ஒன்றாக ஆகிவிட்டது. யுபிஐ என்பது பல வங்கிக் கணக்குகளை ஒரே மொபைல் பயன்பாட்டில் இணைக்கும்அமைப்பாகும்.

அந்த வகையில் கடைகளில் பொருட்கள் வாங்க கையில் பணம் எடுத்துச் செல்வது, யாருக்கேனும் பணம் அனுப்ப வங்கி அல்லது தபால் அலுவலகங்களுக்குச் செல்வது என்பதெல்லாம் பழங்கதையாகி வருகின்றன. நகரங்களில் மட்டுமல்லாது கிராமங்களில் கூட மக்கள் கையில் இருக்கும் மொபைல் போனிலேயே யுபிஐ பரிவர்த்தனை மூலம் தேவையான பணத்தைச் செலுத்தி விடுகின்றனர்.

கூகுள் பே, பே டிஎம் உள்ளிட்டயுபிஐ செயலி மூலம் ஒருவருடைய வங்கிக் கணக்கிலிருந்து மற்றொருவர் அல்லது நிறுவனங்களின் வங்கிக் கணக்குக்கு எளிதாக பணம் அனுப்ப முடியும். எனினும் ஒரு முறை பரிவர்த்தனை உச்சவரம்பு ரூ.1 லட்சமாக இருந்தது. பங்குச் சந்தை முதலீடு, காப்பீட்டு பிரீமியம் உள்ளிட்ட சிலவற்றுக்கு இந்த வரம்பு ரூ.2 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், யுபிஐ செயல்பாட்டை நிர்வகிக்கும் என்பிசிஐ ( National Payments Corporation of India -NPCI ) கடந்த ஆகஸ்ட் 24 அன்று வெளியிட்ட சுற்றறிக்கையில், “யுபிஐ மக்களின் விருப்பமான பணப் பரிவர்த்தனை முறையாக உருவெடுத்துள்ளது. எனவே, சில குறிப்பிட்ட பிரிவுகளுக்கான ஒரு முறை பரிவர்த்தனை உச்சவரம்பை உயர்த்த வேண்டி உள்ளது.

எனவே, வரி செலுத்துதல், மருத்துவமனை, கல்வி நிறுவனங்களுக்கான கட்டணம், புதிய பங்கு வெளியீடு (ஐபிஓ) மற்றும் ரிசர்வ் வங்கி தொடர்புடைய ரீடெய்ல் நேரடி முதலீட்டு திட்டங்களில் முதலீடு செய்தல் ஆகியவற்றுக்கான ஒரு முறை பணப் பரிவர்த்தனை உச்சவரம்பு செப்டம்பர் 16 ( நேற்று) முதல் ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட உள்ளது. எனவே, வங்கிகள், யுபிஐ செயலிகள், பணப்பரிவர்த்தனை சேவை வழங்குவோர் இதற்கான உள்கட்டமைப்பு வசதிகளை செப்டம்பர் 15-ம் தேதிக்குள் மேம்படுத்திக் கொள்ள வேண்டும்” என அறிவுறுத்தி இருந்தது.

அதன்படி, இந்த உச்சவரம்பு மாற்றம் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. வரி செலுத்துதல், பங்குச் சந்தை முதலீடு உள்ளிட்டவற்றுக்கான யுபிஐ பணப்பரிவர்த்தனை உச்சவரம்பு ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இனி மேற்குறிப்பிட்ட சேவைகளுக்கு ஒரே முறையில் ரூ.5 லட்சம் வரை யுபிஐ செயலி மூலம் பணம் செலுத்த முடியும். எனினும், இந்த உச்சவரம்பை தங்கள் வங்கிகளும் யுபிஐ செயலிகளும் அதிகரித்துள்ளனவா என்பதை பொதுமக்கள் முன்கூட்டியே சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.

இந்த மாற்றத்துக்கு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version