தமிழகத்தில் மேம்படுத்தப்படுத்தப்படும் 77 ரயில் நிலையங்கள்!

கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதியன்று நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த 2025-26 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில், தமிழ்நாட்டுக்குப் பெரிய அளவில் நிதி ஒதுக்கீடோ அல்லது திட்டங்களோ இல்லை என்று திமுக, அதிமுக உட்பட தமிழகத்தின் பெரும்பாலான கட்சிகள் குற்றம் சாட்டி இருந்தன.
இதனிடையே கடந்த காலங்களைப் போன்று ரயில்வேக்கு என்று தனியாக பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது நிறுத்தப்பட்டுவிட்டது. இதனால், தமிழகம் உட்பட ஒவ்வொரு மாநிலத்துக்கும் ரயில்வே திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி எவ்வளவு என்பது குறித்து உடனடியாக தெரியாமல் இருந்தது.
இந்த நிலையில், தமிழக ரயில்வே திட்டங்களுக்காகவும், ரயில் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காகவும் 6,626 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு ( கடந்த பட்ஜெட்டில் ரூ. 6,362 கோடி) செய்யப்பட்டுள்ளதாக மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தற்போது தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் ரயில்வே திட்டங்கள் குறித்த தகவல்களைப் பகிர்ந்த அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ” தமிழகத்தில் கடந்த 2014-ல் இருந்து 1,303 கி.மீ. தொலைவுக்கு பாதை அமைக்கப்பட்டுள்ளது. 2014-ம் ஆண்டு முதல் இதுவரை 2,242 கி.மீ. தொலைவு ரயில் பாதைகள் மின்மயமாக்கப்பட்டுள்ளன. மேலும், 22 ரயில் பாதை திட்டங்கள் ரூ.33,467 கோடியில் நடைபெறுகின்றன” எனத் தெரிவித்தார்.
சர்வதேச தரத்தில் எழும்பூர் ரயில் நிலையம்
இதுதவிர, எழும்பூர், மதுரை, ராமேசுவரம் உட்பட 5 ரயில் நிலையங்களை ரூ.1,896 கோடியில் சர்வதேச தரத்தில் மேம்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. இதுதவிர, அம்ரித் பாரத் திட்டத்தின்கீழ், 77 ரயில் நிலையங்கள் ரூ.2,948 கோடியில் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் 8 வந்தே பாரத் ரயில் கள் தற்போது இயக்கப்படுகின்றன. கூடுதல் ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. வரும் 4 முதல் 5 ஆண்டுகளில் புதிய தண்டவாளங்கள் அமைக்கப்படும்.

தற்போது தமிழ்நாட்டில் 22 இடங்களில் புதிய தண்டவாளங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. அதாவது 2,587 கி.மீ தொலைவில் ரூ.33,346 கோடி மதிப்பீட்டில் தண்டவாளங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. அதேபோல் 77 ரயில் நிலையங்கள் அம்ரித் திட்டத்தின் கீழ் ரூ.2,948 கோடியில் அமைக்கப்பட்டு வருகிறது. கவாச் தொழில்நுட்பம் 1,460 இடங்களில் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதில் 601 இடங்களில் அமைக்க டெண்டர் விடப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. கடந்த 10 வருடங்களில் 715 ரயில் சுரங்கப்பாதைகள், மேம்பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ரயில் பயணிகளுக்காக கடந்த 10 வருடங்களில் 98 மின்தூக்கிகள், 53 எஸ்கலேட்டர், 415 இடங்களில் வைஃபை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், 8 வந்தே பாரத் ரயில்கள் தமிழ்நாட்டில் உள்ள 19 மாவட்டங்களையும் 20 நிறுத்தங்களையும் இணைக்கிறது.
மேம்படுத்தப்படுத்தப்படும் 77 ரயில் நிலையங்கள்
அம்பாசமுத்திரம், அம்பத்தூர், அரக்கோணம், அரியலூர், ஆவடி, பொம்முடி, செங்கல்பட்டு, சென்னை கடற்கரை, எழும்பூர், சென்னை பார்க், சிதம்பரம், சின்ன சேலம், குரோம்பேட்டை, கோவை, கோவை வடக்கு, குன்னூர், தர்மபுரி, திண்டுக்கல், சென்னை சென்ட்ரல், கூடுவாஞ்சேரி, கிண்டி, கும்மிடிப்பூண்டி, ஒசூர், ஜோலார்பேட்டை, கன்னியாகுமரி, காரைக்குடி, கரூர், காட்பாடி, கோவில்பட்டி, கள்ளித்துறை, கும்பகோணம், லால்குடி, மதுரை, மாம்பலம், மணப்பாறை, மன்னார்குடி,

மயிலாடுதுறை, மேட்டுப்பாளையம், மொரப்பூர், நாகர்கோவில், நாமக்கல், பழனி, பரமக்குடி, பெரம்பூர், போதனூர், பொள்ளாச்சி, போளூர், புதுக்கோட்டை, ராஜபாளையம், ராமநாதபுரம், ராமேஸ்வரம், சேலம், சாமல்பட்டி, சோழவந்தான், ஸ்ரீரங்கம், ஸ்ரீவில்லிப்புத்தூர், பரங்கிமலை, தாம்பரம், தென்காசி, தஞ்சாவூர், திருச்செந்தூர், நெல்லை, திருப்பத்திரிபுலியூர், திருப்பத்தூர், திரிசூலம், திருத்தணி, திருவள்ளூர், திருவண்ணாமலை, தூத்துகுடி, ஊட்டி, வேலூர், விழுப்புரம், விருதுநகர், விருதாச்சலம் ஆகிய ரயில் நிலையங்கள் அம்ரித் திட்டத்தின் கீழ் ரூ.2,948 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படவுள்ளதாகவும் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.