தமிழ்நாட்டின் வளர்ச்சி மற்றும் தமிழ்நாட்டு மக்களின் வளர்ச்சிக்காக தமிழ்நாடு அரசு, ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’, ‘இல்லம் தேடி கல்வி’, ‘மக்களைத் தேடி மருத்துவம்’, ‘நான் முதல்வன்’, ‘இன்னுயிர் காப்போம்-நம்மைக் காக்கும் 48’, ‘புதுமைப் பெண்’, ‘முதலமைச்சரின் காலை உணவு’, ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’, ‘கள ஆய்வில் முதலமைச்சர்’, ‘மக்களுடன் முதல்வர்’ போன்ற திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.
இந்த நிலையில், அரசின் அனைத்துத் திட்டங்களும் தங்குதடை இல்லாமல் மக்களுக்குப் போய்ச் சேர, ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ என்ற புதிய திட்டத்தை, கடந்த நவம்பர் மாதம் 23 ஆம் தேதியன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அந்தத் திட்டம் இன்று முதல் (31.01.2024) நடைமுறைக்கு வருகிறது
‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம், சென்னை மாவட்டம் நீங்கலாக மற்ற அனைத்து மாவட்டங்களிலும், குறிப்பிட்ட வட்டத்தில், ஒவ்வொரு மாதமும் நான்காவது புதன்கிழமை அன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும். முகாம் நடைபெறும் வட்டம் குறித்த தகவல், மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் முன்கூட்டியே பொதுமக்களுக்குத் தெரிவிக்கப்படும்.
இத்திட்டத்தின்படி, மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட அளவிலான இதர உயர் அலுவலர்கள், காலை 9.00 மணி முதல், மறுநாள் காலை 9.00 மணி வரை தேர்ந்தெடுக்கப்பட்ட வட்டத்தில் தங்கி, பல்வேறு அரசுத் துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் / சேவைகள் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து கள ஆய்வு மேற்கொள்வர்.
கள ஆய்வின் போது பெறப்படும் கருத்துகளின் அடிப்படையில், மாவட்ட ஆட்சியர்கள், உரிய தீர்வு காண்பர். மாவட்ட ஆட்சியர்கள் மக்களின் குறைகளைக் கேட்டறிந்து, மனுக்களைப் பெற்று உரிய நடவடிக்கை எடுப்பார்கள்.
இந்த முகாமைப் பொது மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்று முதலமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார். துறை அலுவலர்கள் பொது மக்களின் கோரிக்கைகளை கனிவோடு பரிசீலித்து, எவ்வித தாமதமும் இன்றி அவற்றை நிறைவேற்ற வேண்டுமென்று அறிவுறுத்தியுள்ளார்.