Amazing Tamilnadu – Tamil News Updates

யுஜிசி விதியில் திருத்தம்: தலைவர்கள் சொல்லும் பாதிப்புகள் என்ன?

யுஜிசி எனப்படும் பல்கலைக்கழக மானியக் குழு, பல்கலைக்கழகங்களுக்கான துணைவேந்தர்களை நியமிப்பது தொடர்பான புதிய விதிகளை வெளியிட்டுள்ளது. பல்கலை துணைவேந்தரை நியமிப்பதற்கான தேடுதல் குழுவில் மாநில அரசு பரிந்துரை செய்யும் பிரதிநிதி இடம்பெற மாட்டார். ஆளுநரே முடிவு செய்வார் என புதிய விதியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழகத்தில் இருந்து கடும் எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலினைத் தொடர்ந்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் சண்முகம், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி உள்பட பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி

பல்கலைக் கழகங்களுக்கு நிதி மானியம் உதவி – பரிந்துரை செய்யும் அதிகாரம் கொண்ட ஆணையம் (University Grants Commission) ஏகபோகமாக பல்கலைக் கழகத் துணைவேந்தர்களையே நாங்கள் ஆணையிடும்படிதான் பல்கலைக் கழகங்கள் தேர்வு செய்யவேண்டும் என்று திடீரென்று விதிமுறைகளை வரைவு (Draft) மூலம் மாற்ற முயற்சிக்கிறார்கள்.

இது நடந்தால், மாநில உரிமைகளை மட்டும் பறிக்கவில்லை; பல்கலைக் கழகங்களின் தன்னாட்சி (Autonomy) என்ற தனித்தன்மை – சுதந்திரத்தையும் முற்றாகப் பறித்துவிடும் ஜனநாயக விரோதமாகும்.

அதற்கு மேலும் ஒரு பச்சை அக்கிரமம், பல்கலைக் கழகத் துணைவேந்தர்களாகும் தகுதி இனி கல்வியாளர்களுக்கு மட்டுமே அல்ல! வெளியில் இருந்து எந்தத் துறையிலும் வணிகம் போன்ற எதிலிருந்தும் எவரும் வரலாம் என்பதன் உள்நோக்கம், ஆர்.எஸ்.எஸ்.காரர்களையே, (முறைப்படி பல்கலைக் கழக போதனை அனுபவமே தேவையில்லை) தாங்கள் விரும்பும் எவரையும் கொண்டுவந்து பல்கலைக் கழகங்களை ஆர்.எஸ்.எஸ். காவி ‘கார்ப்பரேட் அமைப்புகளாக’ ஆக்கிடவே இப்படி கல்வியாளர்கள் ஏற்காத ஒன்றை ஏற்படுத்திட அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பாமக நிறுவனர் ராமதாஸ்

மாநில அரசுகள், பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றின் தன்னாட்சியைப் பறிக்கும் வகையில், பல்கலைக்கழக மானியக் குழு இல்லாத அதிகாரங்களையெல்லாம் எடுத்துக் கொள்வது கண்டிக்கத்தக்கது.

துணைவேந்தர் நியமன விதிகளை விட, பேராசிரியர்கள் மற்றும் துணைவேந்தர்கள் நியமனத்தில் மானியக் குழு வகுத்துள்ள விதிகளை பின்பற்ற மறுக்கும் கல்வி நிறுவனங்களுக்கான தண்டனைகள் தான் மிகக் கொடியவை. விதிகளை பின்பற்றாத பல்கலைக்கழகங்களின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும், பட்டம் வழங்கும் உரிமை பறிக்கப்படும், மானியக்குழுவின் திட்டங்களில் பங்கேற்க தடை விதிக்கப்படும், திறந்த நிலை மற்றும் தொலைத்தொடர்பு முறையிலும், ஆன்லைன் வாயிலாகவும் பட்டப்படிப்புகளை நடத்துவதற்கு தடை விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை அப்பட்டமான அதிகார அத்துமீறல் ஆகும்.

பல்கலைக்கழகங்களுக்கு மானியக் குழு வழங்கும் நிதி கடந்த சில ஆண்டுகளில் மிகக் கடுமையாக குறைக்கப்பட்டு விட்டது. பல்கலைக் கழகங்களின் வளர்ச்சிக்கு எந்த வகையிலும் பங்களிக்காத மானியக் குழு, அவற்றின் அன்றாட செயல்பாடுகளில் தலையிடுவதற்கு எந்த உரிமையும் இல்லை. மானியக்குழு அதன் அத்துமீறலை கைவிட வேண்டும்.

விசிக தலைவர் திருமாவளவன்

“பல்கலைக்கழக மானிய குழு (UGC) இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள், பேராசிரியர்கள் நியமனம், பட்டப் படிப்புகள் உள்ளிட்டவை குறித்து புதிய விதிகளை வெளியிட்டு இருக்கிறது. இந்த விதிகள் மாநில உரிமைகளைப் பறிப்பவையாகவும் மனுவின் கோட்பாட்டை நடைமுறைப்படுத்துபவையாகவும் உள்ளன. இவற்றை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.

துணைவேந்தர்கள், பேராசிரியர்கள் முதலானவர்களை நியமனம் செய்வதற்குத் தற்போதுள்ள கல்வித் தகுதிகளைத் தளர்த்தியதன் மூலம், முறையான கல்வித் தகுதி இல்லாதவர்களையும் நியமனம் செய்வதற்கு புதிய விதிகள் வழிவகுக்கின்றன. நிர்வாகத் திறன், தலைமைத்துவம் ஆகியவற்றுக்குப் புதிய விதிகள் முன்னுரிமை அளிக்கின்றன. இதன் மூலம் ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட சங்கப் பரிவார அமைப்புகளைச் சார்ந்தவர்களைக் கல்வி நிறுவனங்களின் தலைமைப் பொறுப்புக்குக் கொண்டு வருவதற்கு ஒன்றிய பாஜக அரசு திட்டமிடுவது தெரிகிறது.

ஏற்கனவே “லேட்டரல் என்ட்ரி” என்ற பெயரில் ஒன்றிய அரசில் அதிகாரம் மிக்க செயலாளர் பதவிகளில் ஆர்.எஸ்.எஸ் காரர்களைப் பின்வாசல் வழியாக பாஜக அரசு நியமனம் செய்துள்ளது. இப்போது உயர் கல்வியை முழுமையாக சனாதனமயமாக்குவதற்கு பாஜக அரசு முயற்சிக்கிறது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம்

பல்கலைக்கழக மானிய குழுவின் வரைவு விதிமுறைகள் மாநில உரிமைகளை பறித்து அதிகார குவிப்பிற்கு வழி வகுப்பதோடு, கார்ப்பரேட் மயத்திற்கும் வழி வகுப்பதாகும். ஏற்கனவே எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் துணைவேந்தர்களை தன்னிச்சையாக நியமிக்கும் போக்குகளை ஆளுநர்கள் கடைப்பிடித்து வரும் வேளையில் பல்கலைக்கழக மானியக் குழுவின் வரைவு விதிமுறைகள் அத்தகைய அராஜக போக்கிற்கு ஆளுநர்களுக்கு சட்டரீதியான அதிகாரம் அளிக்கிறது.

இந்த வரைவு விதிமுறைகள் மத்திய சட்டத்தில் உருவாக்கப்பட்ட நிறுவனங்களுக்கு மட்டுமின்றி மாநிலச் சட்டங்களால் உருவாக்கப்பட்ட நிறுவனங்களுக்கும் அவற்றின் உறுப்பு நிறுவனங்களுக்கும் பொருந்தும் என்று கூறப்பட்டிருப்பது கூட்டாட்சி தத்துவத்தின் மீது தொடுக்கப்பட்டுள்ள கடுமையான தாக்குதலாகும்.

மேலும் நேரடியாக கல்விப்புலம் சாராத தொழில், பொது நிர்வாகம், பொதுத்துறை நிறுவனங்களில் உயர் பொறுப்புகளை வகித்தவர்களும் துணைவேந்தர்களாக நியமிக்கப்படலாம் என்ற வரைவு விதிமுறையில் உள்ள அம்சமும் அபாயகரமானதாகும். உயர் கல்வி நிலையங்களில் ஆர்.எஸ்.எஸ் பின்புலத்துடன் கூடிய நபர்களை நியமிப்பதற்கும், சித்தாந்த ரீதியான ஊடுருவல்களை செய்வதற்குமான நடவடிக்கையாகும் இது. வணிகமயம் – மதவெறி மயம் – அதிகாரக் குவிப்பு ஆகிய இலக்குகளை நோக்கிய பல்கலைக்கழக மானியக் குழுவின் வரைவு பரிந்துரைகளை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) வலியுறுத்துகிறது” என கூறப்பட்டுள்ளது.

தமிழக சட்டசபையில் தனித் தீர்மானம்

இந்த நிலையில், யுஜிசியின் புதிய விதிகளுக்கு எதிராக தமிழக சட்டசபையில் இன்று தனித் தீர்மானம் கொண்டு வந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.அப்போது பேசிய அவர், “எல்லா முறைகேடும் நடக்கும் NO.1 தேர்வு நீட்” என ஆவேசமாக குறிப்பிட்டார்.

Exit mobile version