யுஜிசி புதிய விதிகளுக்கு எதிர்ப்பு: சட்டசபை தீர்மானமும் முதல்வரின் ஆவேச பேச்சும்!

ல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிப்பது தொடர்பாக பல்கலைக்கழக மானியக் குழு (UGC) அறிவித்துள்ள புதிய விதிமுறைகளுக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இந்த நிலையில், சட்டசபையில் இன்று யுஜிசியின் புதிய விதிகளுக்கு எதிராக தனித் தீர்மானம் கொண்டு வந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

அப்போது பேசிய அவர், “எல்லோரும் படித்து, எல்லோரும் வேலைக்குப் போய், எல்லோரும் தலைநிமிர்வது பிடிக்காதவர்களால் தொடர்ச்சியாக கல்வித் துறையில் தடுப்பணைகள் கட்டப்படுகின்றன.

பள்ளிக் கல்வியைச் சிதைப்பதற்காகவே புதிய தேசிய கல்விக் கொள்கையைக் கொண்டு வந்து திணிக்கிறார்கள். அரசுப் பொதுத் தேர்வு என்ற பெயரால் வடிகட்டி, வடிகட்டி அனைவரையும் கல்வியைத் தொடர முடியாமல் செய்யப் போகிறார்கள். அதனைத் தமிழ்நாடு அரசு கடுமையாக எதிர்த்துக் கொண்டிருக்கிறது. நீட் தேர்வு மூலமாக மருத்துவக் கனவைச் சிதைக்கும் காரியத்தை பல ஆண்டுகளாகச் செய்து வருகிறார்கள். தங்கை அனிதா உள்ளிட்ட எத்தனையோ உயிர்களை நாம் இழந்தோம். ஆனால், ஆண்டுதோறும் ஆள்மாறாட்டம், வினாத்தாள் லீக், மதிப்பெண் குளறுபடி என்று எல்லா முறைகேடும் நடப்பதில் நம்பர் ஒன் தேர்வாக நீட் தேர்வு இருக்கிறது.

இதேபோல பல்கலைக்கழகங்களையும் சிதைக்கும் முயற்சியை ஒன்றிய அரசு தொடங்கிவிட்டது. துணைவேந்தரை தேர்வு செய்ய அமைக்கப்படும் தேர்வுக் குழுவை ஆளுநரே தீர்மானிப்பார் என்று யு.ஜி.சி. எனப்படும் பல்கலைக்கழக மானியக் குழு விதிமுறை வகுத்துள்ளது. துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை ஆளுநர் கையில் கொடுப்பது, பல்கலைக்கழகங்களைச் சிதைக்கும் காரியமாகத்தான் முடியும்.

மாநில அரசுகள் கட்டிய பல்கலைக்கழகங்கள்…

இவர்களாக ஒரு உத்தரவைப் போட்டுவிட்டு, இதனை அமல்படுத்தாத கல்வி நிறுவனங்கள் யு.ஜி.சி. திட்டங்களில் பங்கேற்க முடியாது என்று சொல்வது அநியாயம் அல்லவா? அதுவும், பட்டங்களை வழங்க முடியாது என்பது பகிரங்கமான மிரட்டல் அல்லவா? வேறு எதை அது எடுத்துக்காட்டுகிறது? மாநில அரசுகள் தங்கள் வளத்தில், பொருளாதார பலத்தில் கட்டிய பல்கலைக்கழகங்களை அபகரித்துக் கொள்கிற அக்கிரமமான முயற்சியாகவே இதனைக் கருத வேண்டி இருக்கிறது. இந்த விதிமுறை கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது; மாநில உரிமைகளில் தலையிடுவது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளைச் சிறுமைப்படுத்தும் செயல்!

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டுவர முயற்சி

ஒன்றிய கல்வித் துறை சார்பில் தமிழ்நாட்டில் I.I.T., I.I.M., Central university போன்ற ஒரேயொரு புதிய உயர்கல்வி நிறுவனத்தைக் கூட அமைக்காத ஒன்றிய அரசு; I.I.T. போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் பட்டியலினத்தவர், பிற்படுத்தப்பட்டோரது சட்டப்படியான ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தவறிய ஒன்றிய அரசு; மாநிலங்களின் கட்டுப்பாட்டில் உ‌‌‌ள்ள பல்கலைக்கழகங்களை தனது முழு கட்டுப்பாட்டில் கொண்டுவர முயற்சி செய்வது கெடுநோக்கம் கொண்டது; சுயநலமானது.

நிச்சயமாக மாணவர் நலனை மனதில் கொண்டோ, கல்வித்தரத்தை மேம்படுத்தவோ இந்த முயற்சி நடைபெறவில்லை. ஒரு தன்னாட்சி பெற்ற தனியார் கல்லூரியே பாடத்திட்டம் வகுத்துப் பட்டமும் வழங்கலாம் என்ற நிலையை ஏற்படுத்திவிட்டு, நூற்றாண்டு பெருமை கொண்ட கல்லூரிகளை அபகரிக்க எத்தனிப்பது அதிகார எதேச்சாதிகாரம்.

நீதிமன்றத்தை நாடுவோம்

தலைசிறந்த கல்வி நிறுவனங்களை நாட்டிலேயே அதிக அளவில் கொண்டிருக்கும் தமிழ்நாடு, நமது கல்வி நிறுவனங்களின் தன்னாட்சி பறிக்கப்படுவதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்காது; அப்படி இருக்கவும் முடியாது. கல்வியையும், மக்களையும் காக்க, எதிர்காலத் தலைமுறையைக் காக்க தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒட்டுமொத்தமாக ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியாக வேண்டும்.

இந்தத் தீர்மானத்தை ஏற்று ஒன்றிய அரசு மனம் மாறாவிட்டால் மக்கள் மன்றத்தையும் நீதிமன்றத்தையும் நாடுவோம்” என ஆவேசமாக தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

The ultimate luxury yacht charter vacation. hest blå tunge.