தவெக பொதுக்குழு: விஜய் பேச்சுக்கு திமுக, அதிமுக, பாஜக ‘ரியாக்சன்’ என்ன?

சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் பிரதமர் மோடியை நேரடியாக குறிப்பிட்டு விமர்சித்தார்.
“மன்னராட்சி முதல்வர் அவர்களே, முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே, பெயரை மட்டும் வீராப்பாக சொன்னால் பத்தாது. செயலிலும் ஆட்சியிலும் காட்டுங்கள்” என்று நேரடியாக ஸ்டாலினை தாக்கினார்.
அதேபோன்று பாஜகவை விமர்சிக்க பயப்படவில்லை என்று தெளிவுபடுத்திய விஜய், “ஒரே நாடு ஒரே தேர்தல் என நீங்கள் ஸ்டார்ட் செய்யும்போதே புரிஞ்சிடுச்சு பிரதமர் சார். திரு மோடி அவர்களே, தமிழ்நாட்டில் இருந்து ஜிஎஸ்டி வாங்கிக் கொள்கிறீர்கள். ஆனால் நிதி கொடுக்க மறுக்கிறீர்கள். படிக்கிற குழந்தைகளுக்கு நிதி தர மாட்டேன் என்கிறீர்களா? தமிழ்நாட்டை கொஞ்சம் கவனமாக கையாளுங்க சார்” என்று மோடியை பெயர் குறிப்பிட்டு விமர்சித்தார்.
அத்துடன்,” அடுத்தாண்டு மக்கள் இதுவரை சந்திக்காத தேர்தலை சந்திப்பார்கள். 2026 சட்டமன்ற தேர்தலில் இரண்டே கட்சிகள் இடையே மட்டும் தான் போட்டி. ஒன்று தவெக மற்றொன்று திமுக ” என்றும் கூறி இருந்தார். அவர், அதிமுகவை குறிப்பிடாமல் விட்டது தமிழக அரசியல் களத்தில் திமுகவை எதிர்க்கும் இடத்தில் இருந்து அதிமுகவை அகற்றிவிட்டு, அந்த இடத்தில் தவெக-வைக் கொண்டு வந்து நிறுத்தும் உத்தியாகவே பார்க்கப்பட்டது.
அதிமுக பதிலடி

இந்நிலையில் விஜய்யின் இந்த பேச்சுக்கு அதிமுக தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர் செம்மலை பதிலடி கொடுத்துள்ளார். ” திமுகவுக்கும் தவெகவுக்கும் இடையே போட்டி என்பது விஜய்யின் பேராசை” என அவர் கூறியுள்ளார். அதேபோன்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தனது கட்சித் தொண்டர்களை ஊக்கப்படுத்த விஜய் அப்படி பேசி உள்ளார். ஆனால், உண்மையான களம் என்பது உண்மையான களம் அதிமுகவுக்கும் திமுகவுக்கும் இடையேதான்” என்று பேசினார்.
திமுக ரியாக்சன்

திமுக ஆட்சியில் மக்கள் பல நன்மைகளைப் பெற்று வருவதை திசை திருப்பவே விஜய் இவ்வாறு பேசியிருப்பதாக திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.
“திமுக ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். பல நன்மைகளைப் பெற்று வருகிறார்கள். இதை எப்படி கெடுப்பது, திசை திருப்புவது எனத் தெரியாமல் தவறான குற்றச்சாட்டுகளை சிலர் கூறி வருகின்றனர். பலரும் சொல்வதைப் போன்று விஜய்யும் அவ்வாறு பேசி உள்ளார்” என அவர் தெரிவித்துள்ளார்.
பாஜக தலைவர் அண்ணாமலை

பாஜக தலைவர் அண்ணாமலை, “மீடியா வெளிச்சத்திற்காக பிரதமர் குறித்து பேசுகிறார் விஜய். மைக் எடுத்து பேசி, கைகாட்டிவிட்டு போவதில்லை அரசியல்; களத்தில் வேலை செய்ய வேண்டும்.சக்திமிக்கவர்களை பேசினால் மைலேஜ் கிடைக்கும்; அதனால் பிரதமர் பற்றி விஜய் பேசுகிறார். தினமும் போராடுவது ஒரு அரசியல்; கட்சி தொடங்கி 3 முறை வெளியே வருவது ஒரு அரசியல். கட்சி தொடங்கி விஜய் எத்தனை முறை வெளியே வந்துள்ளார்? எத்தனை முறை மக்களை சந்தித்துள்ளார்? மைக் எடுத்து கைக்காட்டி விட்டு செல்வது மட்டும் அரசியல் அல்ல களத்தில் நின்று வேலை பார்ப்பது தான் அரசியல். யாருக்கு யார் எதிரி என்பதை வாக்காளர்கள்தான் முடிவு செய்கிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
விசிக பதிலடி
இதனிடையே தவெக பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் னதேர்தல் பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை எப்படி திமுகவில் கூட்டணி வைத்து அழித்தார்களோ, அதேபோல் தற்போது விசிகவை அழித்து வருகிறார்கள்” எனக் கூறி இருந்தார்.
ஆதவ் அர்ஜூனாவி இந்த பேச்சுக்கு பதிலடி கொடுத்துள்ள விசிக எம்.எல்.ஏ சிந்தனைச் செல்வன், “விசிகவுக்கு யாரும் பாடம் எடுக்கத் தேவையில்லை” என்று காட்டமாக கூறியுள்ளார்.