டங்ஸ்டன்’ சுரங்க திட்டம் ரத்து… அழிவிலிருந்து தப்பிய அரிட்டாபட்டி… அரசு அறிவிப்பின் பின்னணி!
மதுரை மாவட்டம், மேலூரை அடுத்த அரிட்டாபட்டி பிளாக்கில் 48 க்கும் மேற்பட்ட கிராமப்பகுதிகளில் பூமிக்கடியில் உள்ள டங்ஸ்டன் என்ற கனிமத்தை வெட்டி எடுப்பதற்கான சுரங்க அனுமதியை, கடந்த 2024 ஆம் ஆண்டு நவம்பர் 11 ஆம் தேதி “ஹிந்துஸ்தான் ஜிங்க்” நிறுவனத்திற்கு மத்திய அரசு தரப்பில் ஏலம் விடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
பயன்களும் பாதிப்புகளும்
பூமிக்கடியில் படிந்துள்ள பல்வேறு தாதுப் படிவங்களிலிருந்து பல கனிமப் பொருட்கள் வெட்டியெடுக்கப்படுகின்றன. அவ்வாறு தாதுப்படிவங்களிலிருந்து பிரித்து எடுக்கப்படும் வேதியல் கனிமங்களில் ஒன்றுதான் “டங்ஸ்டன்” என்ற கனிமமாகும். தங்கத்திற்கு அடுத்து அடர்த்தியானதாகவும், இரும்பை விட மூன்று மடங்கு அடர்த்தி கூடுதலாகவும் உள்ள ‘டங்ஸ்டன்’ கனிமம் 3400 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் தான் உருகும் நிலைக்கு வரும். எண்ணெய் சுத்திகரிப்பு துறையிலும், சுரங்கம் அமைப்பதற்கான பணிகளுக்கும் டங்ஸ்டன் கனிமம் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. ஒளிவிளக்குகள், மின்சார வாகன பேட்டரி தயாரிப்பிற்கு, ராணுவ தளவாடங்கள் தயாரிப்பிற்கு, ராக்கெட் பயன்பாட்டிற்கு, வெட்டுதல், துளையிடுதல் பணிகளுக்கு பயன்படுகிறது. மேலும் மருத்துவத்துறைகளில் அறுவைச் சிகிச்சை, எக்ஸ்ரே, ஸ்கேன் போன்ற கருவிகள் பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படுகிறது.
இந்த நிலையில், உலகில் பல நாடுகளில் அமைக்கப்பட்டுள்ள டங்ஸ்டன் சுரங்கத்தால் ஏற்படும் பாதிப்புகளால் உற்பத்தி குறைக்கப்பட்டுள்ளது. ஆப்பிரிக்காவில் டங்ஸ்டன் சுரங்கம் துவங்கிய இடங்கள் தடுக்கப்பட்டுள்ளது. டங்ஸ்டன் தாதுப்படிவங்களிலிருந்து பிரித்தெடுக்கப்படுவதால் அதிலிருந்து வெளியேற் றப்படும் கழிவுகள், சுரங்கத்திலிருந்து வெளியேற்றப் படும் கழிவுநீர் உட்பட சுற்றுச்சூழலுக்கு பெரும் பாதிப்பு களை உருவாக்குகிறது. காற்று மாசு ஏற்படுவது, பல்லு யிர் வாழ்வதற்கான சூழலை முற்றிலும் கெடுத்து விடும். திறந்தவெளிச் சுரங்கங்களிலிருந்து ஏற்படும் கதிர்வீச்சுக்கள் பல்வேறு புதிய நோய்களை உருவாக்குவதோடு சுரங்கம் அமைக்கப்படும் பகுதிகள் முழுவதும் வேளாண்மை கேள்விக்குறியாக்கப்பட்டு மக்கள் வாழ தகுதியற்ற பகுதியாக மாறும் அபாயம் ஏற்படும்.
அந்த வகையில், அரிட்டாபட்டி பிளாக் தமிழ்நாடு அரசு ஏற்கனவே, பல்லுயிர்ச் சூழல் மண்டலமாக அறிவித்துள்ள பகுதியாகும். மேலும் இப்பகுதி தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியுமாகும். 3500 ஆண்டுகளுக்கு உட்பட்ட தொல்லியல் பொருட்கள் நிறைந்துள்ள பகுதியாகும். இப்பகுதியில் சமணர் படுக்கைகள் உள்ளன. 8க்கும் மேற்பட்ட வரலாற்றுத் தளங்கள் உள்ள பகுதி மட்டுமல்ல, இந்த பகுதியில் உள்ள அழகர் மலை மற்றும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்கு பெரும் ஆபத்து ஏற்படும். நூற்றுக்கணக்கான குன்றுகள் அழிக்கப்படும். இப்பகுதியில் உள்ள கிராமங்களில் உள்ள 72 ஏரிகள், 3 தடுப்பணைகள், இயற்கை நீர் உற்றுகள் முற்றிலும் அழிக்கப்படும். அதோடு, வைகை ஒரு போக பாசனத்தில் உள்ள 1 லட்சத்து 6 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் முழுமையாக அழியும் நிலை ஏற்படும். ஒட்டு மொத்தத்தில் சொந்த கிராமங்களில் மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து அகதிகளாக மாறும் நிலை ஏற்படும்.
மதுரை மக்களின் எதிர்ப்பு
இந்த நிலையில் தான், டங்ஸ்டன் திட்டத்தால், பல்லுயிர்ப் பெருக்க பாரம்பரிய தலமான அரிட்டாபட்டி முழுமையாக அழியும் என அப்பகுதி கிராம மக்கள் மட்டுமல்லாது பல்வேறு அரசியல் கட்சிகள், விவசாய அமைப்புகள், சுற்றுச்சூழல் ஆர்வலர் அமைப்புகள் தரப்பில் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்றன.
கடந்த ஜனவரி 7ஆம் தேதி மேலூர் மற்றும் நரசிங்கம்பட்டி ஆகிய பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் தல்லாகுளம் தலைமை அஞ்சல் அலுவலகத்தை முற்றுகையிட பேரணியாக திரண்டு வந்து மதுரையை ஸ்தம்பிக்க வைத்தனர்.
முன்னதாக டிசம்பர் 9 ஆம் தேதி தமிழ்நாடு அரசு சிறப்பு சட்டமன்றத்தை கூட்டி அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் டங்ஸ்டன் கனிம சுரங்க திட்டத்திற்கு எதிராக தீர்மானம் இயற்றியது. ஆனால் அதற்கு பிறகு மத்திய அரசு, தமிழ்நாடு அரசால் ‘பல்லுயிர்ச் சூழல் மண்டலமாக’ அறிவிக்கப்பட்ட அரிட்டாபட்டிக்கு உட்பட்ட 500 ஏக்கரைத் தவிர்த்து, பிற இடங்களில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பது குறித்து ஆய்வு மேற்கொள்ள இந்திய புவியியல் ஆய்வு நிறுவனத்திற்கு பரிந்துரை செய்தது.
அமைச்சரை சந்தித்த விவசாயிகள்
இந்நிலையில் தமிழக பாஜக சார்பாக, மேலூர் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் அடங்கிய குழுவினர் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில், நேற்று டெல்லியில் மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் கிஷண் ரெட்டியை சந்தித்து, டங்ஸ்டன் கனிம சுரங்க ஏல அறிவிப்பை ரத்து செய்ய கோரிக்கை வைத்தனர். அமைச்சரிடம் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, டங்ஸ்டன் திட்டம் ரத்து செய்யப்படும் என தெரிவித்தார்.
ரத்து செய்வதாக அறிவித்த மத்திய அரசு
இந்த நிலையில், மதுரை டங்ஸ்டன் சுரங்க திட்டம் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு இன்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “விரிவான ஆலோசனைகளுக்குப் பிறகு, இந்தப் பகுதியில் பல்லுயிர் பாரம்பரிய தளத்தின் முக்கியத்துவத்தையும், பாரம்பரிய உரிமைகளைப் பாதுகாப்பதில், பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், இந்திய அரசின் உறுதிப்பாட்டையும் கருத்தில் கொண்டு, நாயக்கர்பட்டி டங்ஸ்டன் கனிமத் தொகுதியின் ஏலத்தை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் மகிழ்ச்சி
டங்ஸ்டன் சுரங்க ஏல ரத்து அறிவிப்பை அரிட்டாப்பட்டி மக்கள், பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். பல்வேறு அரசியல் கட்சிகளும் இதனை வரவேற்றுள்ளன.