திருச்சி, மதுரை டைடல் பூங்காவுக்கு அடிக்கல்… 10,000 பேருக்கு காத்திருக்கும் வேலைவாய்ப்பு!

திருச்சி மாவட்டம், பஞ்சப்பூர் பகுதியில் சுமார் 415 கோடி ரூபாய் செலவில் 93,000 சதுர அடியில் புதிய டைடல் பூங்கா அமைப்பதற்கான கட்டுமானப் பணிக்கு தமிழக அரசு அனுமதி அளித்தது.
தமிழக அரசின் டைடல் பார்க் நிறுவனம் சார்பில் சென்னையைத் தொடர்ந்து கோவை, சென்னை பட்டாபிராம் உள்ளிட்ட இடங்களில் டைடல் பார்க் அமைக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து திருச்சி மற்றும் மதுரை மாவட்டங்களில் டைடல் பார்க் அமைக்கும் நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரப்படுத்தியது.
திருச்சி டைடல் பூங்கா
அதன்படி, திருச்சி மாவட்டத்தில் திருச்சி- மதுரை நெடுஞ்சாலையில் பஞ்சப்பூர் பகுதியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்துக்கு அருகில் இந்த டைடல் பார்க் தரைதளத்துடன் கூடிய 6 தளங்களுடன் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. 57,000 சதுர அடி பரப்பளவில், சுமார் 415 கோடி ரூபாய் செலவில் இந்த டைடல் பூங்கா அமைக்கப்பட உள்ள இந்த டைடல் பார்க்கில் 740 கார் பார்க்கிங் மற்றும் 1500 இருசக்கர வாகன நிறுத்துமிடம் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
6,000 பேருக்கு வேலை
இந்த டைடல் பூங்கா பணிகளை சுமார் 18 மாதங்களுக்குள் முடிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பூங்கா கட்டிமுடிக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வரும்போது சுமார் 6,000 -க்கும் அதிகமானோருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை டைடல் பூங்காவில் 5,000 பேருக்கு வேலை

அதேபோன்று, மதுரையில் மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே மாநகராட்சிக்கு சொந்தமான 9.97 ஏக்கர் நிலத்தில் 40,000 சதுர அடி பரப்பளவில் ரூ.289 கோடியில் டைடல் பூங்கா அமைய உள்ளது. 5000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் தரை மற்றும் 12 தளங்களுடன் இந்த டைடல் பூங்கா அமைக்கப்பட உள்ளது.
பிப். 13 ல் முதல்வர் அடிக்கல்
இந்த இரண்டு டைடல் பூங்கா பணிகளுக்கும் சுற்றுச்சூழல் அனுமதி கோரி டைடல் பூங்கா நிறுவனம் விண்ணப்பித்து இருந்தது.அதனைப் பரிசீலனை செய்த தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் சுற்றுச்சூழல் அனுமதி வழங்கி உத்தரவிட்டது.
இந்த நிலையில், வரும் 13 ஆம் தேதி சென்னை தலைமை செயலகத்தில் காணொளி காட்சி வாயிலாக மதுரை, திருச்சியில் புதிய டைடல் பூங்காவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்.