லேண்ட் லைன் போன் எண்ணில் வருகிறது புதிய மாற்றம்… காரணம் என்ன?

லேண்ட் லைன் போன்களுக்கான தொடர்பு எண்ணையும் மொபைல்போனுக்கு இருப்பதைப் போன்று 10 இலக்க எண்ணாக மாற்ற தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான ‘டிராய்’ ( The Telecom Regulatory Authority of India -TRAI) அரசுக்கு பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த இரண்டு தசாப்தங்களாக ஒரே மாதிரியாக இருக்கும் இந்தியாவின் தேசிய எண் அமைப்பில் (National Numbering System) இந்த முக்கியமான மாற்றத்தை மேற்கொள்ள ‘டிராய்’ முன்மொழிந்துள்ளது.
காரணம் என்ன?
லேண்ட் லைன் டெலிபோன்களில் தற்போது இருக்கும் STD CODE பயன்பாட்டை நிறுத்தும் நடவடிக்கையாகவே இந்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதிகரித்து வரும் மொபைல் போன்கள் மற்றும் இணைக்கப்பட்ட சாதனங்களின் எண்ணிக்கையை ஈடுகட்டவும், மிகவும் திறமையான மற்றும் நம்பகமான தொலைத்தொடர்பு அமைப்பை உறுதி செய்யும் நோக்கத்திலேயே ‘டிராய்’ இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
6 மாதங்கள் அவகாசம்
தற்போதைய SDCA- அடிப்படையிலான (STD எண் அடிப்படையிலான) எண் திட்டத்திலிருந்து LSA (உரிமம் பெற்ற சேவை பகுதி) அடிப்படையிலான 10-டிஜிட் CLOSED எண் திட்டத்திற்கு மாறும் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் இந்த பரிந்துரை பரிசீலனையில் உள்ளது.
இந்த முறை மூலம் லோக்கல் கால் உட்பட முதலில் ‘0’ என்ற எண், அடுத்து SDCA குறியீடு எண், மூன்றாவதாக சந்தாதாரர் எண் ஆகியவற்றை முறையே உள்ளீடு செய்து போன் செய்ய வேண்டும். ஒரு தொலைத்தொடர்பு வட்டம் அல்லது உரிமம் பெற்ற சேவைப் பகுதி (LSA) பொதுவாக மாநில அளவிலான பகுதி அல்லது பெரிய பெருநகரப் பகுதியைக் குறிக்கிறது. LSA – அடிப்படையிலான 10 டிஜிட் எண் முறை இடையூறு மற்றும் தாமதத்தை குறைத்து நீண்டகால சேவையை வழங்க உதவும் என்று தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்த 10 இலக்க எண் மாற்றத்தால் சந்தாதாரர்களுக்கு வழங்கப்படும் தற்போதைய தொலைபேசி எண்களில் எந்த மாற்றமும் இருக்காது. மேலும், இந்த திட்டத்தை செயல்படுத்த தொலைத்தொடர்பு ஆபரேட்டர்களுக்கு ஆறு மாதங்கள் வரை அவகாசம் அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

M2M சாதனங்களுக்கு 13 இலக்க எண்கள்
‘டிராய்’ முன்மொழிந்த மற்றொரு குறிப்பிடத்தக்க பரிந்துரை, Machine-to-Machine (M2M) தொடர்பு சாதனங்களுக்கு 13 இலக்க எண்களை அறிமுகப்படுத்தலாம் என்பது ஆகும். இந்த எண்கள் தற்போது 10 இலக்கங்களாக உள்ளன, ஆனால் புதிய அமைப்பு IoT (இன்டர்நெட் ஆஃப் திங்ஸ்), ஸ்மார்ட் மீட்டர்கள் மற்றும் தொழில்துறை ஆட்டோமேஷன் போன்ற துறைகளில் இணைக்கப்பட்ட சாதனங்களுக்கு மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் அளவிடக்கூடிய கட்டமைப்பை உறுதி செய்யும்.
மேலும் அவசர அழைப்புகளுக்கான எண்களும் இலவசமாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.