தலை சுற்ற வைக்கும் தக்காளி விலை… குறைவது எப்போது?
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் கடந்தவாரம் ஒரு கிலோ தக்காளி 35 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று 65 ரூபாய் முதல் 75 ரூபாய் வரை ரகத்திற்கு ஏற்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதுவே சில்லறை விற்பனை கடைகளில் கிலோ 80 முதல் 90 ரூபாய் வரை விற்கப்படுகிறது.
அதேபோன்று ஒரு கிலோ பெரிய வெங்காயம் 55 ரூபாய்க்கும், ஒரு கிலோ பீன்ஸ் 110 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 70 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தக்காளி விலை உயர்வுக்கு வரத்து குறைவே முக்கிய காரணமாக உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, நாமக்கல், திண்டுக்கல், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் தக்காளி சாகுபடி நடக்கிறது. இதுதவிர, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் வருகிறது. ஆனால், தற்போது விளைச்சல் பாதிப்பால் தக்காளி வரத்தும் குறைந்துள்ளது.
சென்னை கோயம்பேடு சந்தைக்கு நாள் ஒன்றுக்கு 100 முதல் 110 லாரிகளில் தக்காளி வரும் நிலையில், தற்போது 60 முதல் 75 லாரிகள் மட்டுமே வருவதாக கூறப்படுகிறது.
விலை உயர்வுக்கு இது ஒரு முக்கிய காரணம் என்ற போதிலும், புரட்டாசி மாதம் என்பதால் காய்கறிகளின் விற்பனை அதிகரித்துள்ளது. இதுவும் தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விலை உயர்வுக்கு ஒரு காரணம். அடுத்த வாரம் முதல் மற்ற காய்கறிகளின் வரத்து அதிகரிக்கலாம். ஆனால், சமீபத்தில் தான் மூன்றாவது பயிர் சாகுபடி தொடங்கியுள்ளதால் தக்காளி வரத்துக்கு கால அவகாசம் ஆகும் என கோயம்பேடு மொத்த வியாபாரிகள் சங்கத்தினர் கூறுகின்றனர்.
எனவே, தக்காளி விலை இயல்பு நிலைக்கு வர குறைந்தபட்சம் இரண்டு வாரங்கள் அல்லது அதற்கு மேல் ஆகும். கோயம்பேடு சந்தைக்கு அக்டோபர் நடுப்பகுதியில் இருந்து தக்காளி வரத்து சீராகும் வரை, தக்காளி விலை மொத்த சந்தையில் கிலோ ரூ.80 ஆகவும், சில்லறை கடைகளில் கிலோ ரூ.100 ஆகவும் இருக்கும் என்றும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.