சுங்கச் சாவடிகளில் புதிய FASTag நடைமுறை அமல்… நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை என்ன?
தேசிய நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள சுங்கச் சாவடிகளில் சுங்கக் கட்டணம் செலுத்த, கடந்த 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் ‘ஃபாஸ்டேக்’ ( FASTag) என்ற முறை அறிமுகப்படுத்தப்பட்டு, கட்டாயமாக்கப்பட்டது.
ஃபாஸ்டேக் என்றால் என்ன?
ஃபாஸ்டேக் என்பது ரேடியோ அலைவரிசை அடையாள தொழில்நுட்பத்தின் தானியங்கி இயந்திரம் மூலம் இணைக்கப்பட்ட உங்களது பிரீபெய்ட் கணக்கு அல்லது சேமிப்பு/நடப்புக் கணக்கிலிருந்து சுங்க கட்டணத்தை தானாக வங்கிக் கணக்கிலிருந்து வசூலிக்கும் முறை ஆகும். இது வாகனத்தின் கண்ணாடியில் ஒட்டப்பட்டிருப்பதால், உங்கள் கணக்கிலிருந்து சுங்க கட்டணம் நேரடியாகப் பிடிக்கப்படும்.
இதனால், ஃபாஸ்டேக் ஸ்டிக்கா் ஒட்டிய வாகனங்கள் சுங்கச்சாவடிகளில் நீண்ட நேரம் காத்திராமல் பயணத்தைத் தொடர முடியும்.
இந்த சூழலில் என்.பி.சி.ஐ., எனப்படும் தேசிய பண பரிவர்த்தனை வாரியம், இது தொடர்பான சில புதிய நடைமுறைகளை அறிவித்தது. இன்று முதல் இந்த நடைமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.
செய்ய வேண்டியவை என்ன?
இதன்படி, பாஸ்டேக் பயன்படுத்துவோர் கேஒய்சி ( KYC) எனப்படும் தங்களுடைய சுயவிபரக் குறிப்புகளை தெரிவிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபரங்களை, ஃபாஸ்டேக் சேவை வழங்கும் நிறுவனங்கள் அக்டோபர் மாதம் 31 ஆம் தேதிக்குள் பெற வேண்டும். அப்படி பெறவில்லை என்றால், அந்த ஃபாஸ்டேக் செல்லாததாகிவிடும். மூன்று முதல் ஐந்து ஆண்டுகளுக்குள் ஃபாஸ்டேக்குகள் வாங்கியவர்கள் தங்கள் கேஒய்சி விவரங்களை அக்டோபர் 31 ஆம் தேதிக்குள் இணைக்க வேண்டும்.
அதற்கு மேற்பட்ட ஆண்டுகளுக்கு முன் ஃபாஸ்டேக் வாங்கியிருந்தால், அதாவது ஐந்து வருடங்களுக்கும் மேல் ஆகிவிட்டது என்றால், அந்த ஃபாஸ்டேக்குகளை
வரும் அக்டோபர் 31 ஆம் தேதிக்குள் முழுமையாக மாற்ற வேண்டும். மேலும் ஃபாஸ்டேக்குடன் வாகனத்தின் பதிவு எண் மற்றும் சேசிஸ் எண்ணுடன் இணைக்கப்பட்டு, ஃபாஸ்டேக்கை உரிமையாளரின் மொபைல் போன் எண்ணுடண் இணைத்திருப்பதை உறுதி செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெரிந்துகொள்ள வேண்டியவை
ஒருமுறை ஒரு வாகனத்துக்கு ஃபாஸ்டேக்கை ஒட்டிவிட்டால், அதை வேறு வாகனத்திற்கு மாற்ற முடியாது.
தேசிய மின்னணு சுங்க வசூல் அமைப்பில் (NETC) அங்கம் வகிக்கும் எந்த ஒரு வங்கியிடமிருந்தும் ஃபாஸ்டேக் பெறலாம்.
பிரீபெய்ட் கணக்குடன் இணைக்கப்பட்டிருந்தால், அது பயன்பாட்டின் அடிப்படையில் ரீசார்ஜ் செய்யப்பட வேண்டும்.
உங்கள் பிரீபெய்ட் / வங்கி கணக்கில் பண இருப்பு போதுமானதாக இல்லாவிட்டால், ஃபாஸ்டேக் தடுப்புப்பட்டியலில் சேர்க்கப்படும். சுங்கச்சாவடியில் பணம் செலுத்த வேண்டும்.