தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், தனி உதவியாளர், கிளார்க் என பல பணிகளுக்காக 6,244 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வு அறிவிப்பு, கடந்த ஜனவரி 30 ஆம் தேதி வெளியானது.
ஆன்லைன் வழியாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு, ஜூன் 9 ஆம் தேதி அன்று தமிழ்நாடு முழுவதும் தேர்வு நடைபெற்றது.
இந்த தேர்வில் பங்கேற்க சுமார் 20 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், தமிழ்நாடு முழுவதும் 7,247 மையங்களில் 15.8 லட்சம் தேர்வர்கள் தேர்வு எழுதி இருந்தனர். தொடர்ந்து குரூப் 4 தேர்வில் கூடுதலாக 480 பணியிடங்கள் சேர்க்கப்பட்டு, காலியிடங்களின் எண்ணிக்கை 6724 ஆக உயர்த்தப்பட்டது. தொடர்ந்து மேலும் 2,208 இடங்கள் சேர்க்கப்பட்டு,காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரித்தது.
பின்னர் மீண்டும் கூடுதலாக 559 இடங்கள் சேர்க்கப்பட்டு, காலி பணியிடங்களின் எண்ணிக்கை 9,491ஆக உயர்த்தப்பட்டது. தொடர்ந்து தேர்வு முடிவுகள் கடந்த மாதம் 28 ஆம் தேதி வெளியானது.
இந்த நிலையில், தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான கணினி வழித்திரை சான்றிதழ் சரிபார்ப்புக்கு, மதிப்பெண்கள், ஒட்டுமொத்த தரவரிசை எண், இட ஒதுக்கீட்டு விதி, காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அடிப்படையில், தற்காலிகமாக அனுமதிக்கப்பட்டவர்களின் பட்டியல், தேர்வாணையத்தின் https://www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
கணினி வழித்திரை சான்றிதழ் சரிபார்ப்புக்கு தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட தேர்வர்கள், தங்களின் சான்றிதழ்களை நாளை சனிக்கிழமை முதல் வருகிற 21 ஆம் தேதி வரை தேர்வாணைய இணையதளத்தின் ஒருமுறை பதிவு பிரிவின் மூலம் பதிவேற்றம் செய்யலாம் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி) செயலாளர் கோபால சுந்தரராஜ் தெரிவித்துள்ளார்.