போட்டித் தேர்வுக்கான தட்டச்சு திறன்: தமிழக அரசின் புதிய முடிவு!
தமிழக அரசுத் துறைகளில் தற்போது எந்த ஒரு பணி இடங்களுக்கும் தட்டச்சு தெரிந்திருப்பது கட்டாயத் தேவையாக உள்ளது. அந்த வகையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் பல்வேறு போட்டித் தேர்வுகளில் அரசு கணினி சான்றிதழ் தேர்வு தேர்ச்சி கட்டாயம் (CERTIFICATE COURSE IN COMPUTER ON OFFICE AUTOMATION) ஆக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சமீபத்தில் உயர்கல்வித் துறை உயர் அதிகாரிகள் கலந்துகொண்ட மனிதவள மேலாண்மைத் துறையின் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, ஆபிஸ் ஆட்டோமேஷன் குறித்த கணினி சான்றிதழ் படிப்பில் புதிய பாடத்திட்டம் மற்றும் விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இது தொடர்பாக உயர்கல்வித் துறை செயலர் கே.கோபால் வெளியிட்டுள்ள அரசாணையில், கணினி மற்றும் அலுவலக ஆட்டோமேஷன் சான்றிதழ் படிப்பில் தட்டச்சு திறனை கட்டாயமாக சேர்க்கவும், இந்த படிப்பில் சேர தட்டச்சில் இளநிலை மற்றும் உயர் நிலை தேர்ச்சி கட்டாயம் தேவை என்ற முன் தகுதியை நீக்குவது என்றும் இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் (DOTE) வெளியிட்டுள்ள புதிய விதிமுறைகள் மற்றும் விதிகளின்படி, கணினி மற்றும் அலுவலக ஆட்டோமேஷன் டூல்ஸ் (computer and office automation tools) தாள்-I -க்கான எழுத்து தேர்வுக்குரிய கால அளவு ஒரு மணி நேரமாக இருக்கும். இதற்கான மதிப்பெண்கள் 50.
இதேபோல், தாள்-II க்கான தட்டச்சு மற்றும் வேக திறன் தேர்வு (speed skill test) நிமிடத்திற்கு 30 வார்த்தைகளாகவும், பத்து நிமிட கால அளவு கொண்டதாகவும் இருக்கும். இதற்கான மதிப்பெண்கள் 50. அதேபோல் போட்டித் தேர்வுகளின்படியான தமிழ் தட்டச்சு மற்றும் வேகத் திறன் தேர்வுக்கு, நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் – (தாள்-III) 50 மதிப்பெண்கள் என இருக்கும்.
அதேபோன்று கணினி மற்றும் ஆபிஸ் ஆட்டோமேஷனுக்கான தாள் IV, செய்முறை தேர்வுகளைக் கொண்டிருக்கும். இந்த தேர்வுக்கான கால அளவு 60 நிமிடங்களாக இருக்கும். மதிப்பெண்கள் 50 .
தாள் I முதல் தாள் III வரையிலான தேர்வுகள் டிஜிட்டல் மதிப்பீட்டு தொகுதிகள் கொண்ட இணையதள விண்ணப்பம் மூலம் நடத்தப்படும். தாள் IV க்கு onscreen முறையில் மதிப்பீடு செய்யப்படும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு தொழில்நுட்ப கல்வி இயக்ககம், ஆறு மாதத்திற்கு ஒரு முறை அரசு தட்டச்சு/சுருக்கெழுத்தர் – (பிப்ரவரி/ஆகஸ்ட் ) கணினி திறன் தேர்வை (ஜூன்/டிசம்பர்) நடத்தி சான்றிதழ் வழங்குகிறது.
எனவே அரசுப் பணிகளில் சேர போட்டித் தேர்வுக்கு தயாராகுபவர்கள், அருகில் உள்ள தட்டச்சுப் பயிலகங்களில் சேர்ந்து பயிற்சி பெற்று இத்தேர்வை எழுதலாம். இல்லையெனில், தனித்தேர்வராகவும் விண்ணப்பிக்கலாம்.
குரூப்-2 பணியிடங்கள் அதிகரிப்பு
இதனிடயே, துணை வணிக வரி அலுவலர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், நன்னடத்தை அலுவலர், சார் பதிவாளர், சிறப்பு உதவியாளர், தனிப்பிரிவு உதவியாளர், உதவி பிரிவு அலுவலர், வனவர், முழு நேர விடுதி காப்பாளர், முதுநிலை ஆய்வாளர், தணிக்கை ஆய்வாளர், கைத்தறி ஆய்வாளர், இளநிலை கண்காணிப்பாளர், பேரூராட்சி செயல் அலுவலர்கள், இளநிலை கண்காணிப்பாளர்,
பேரூராட்சி செயல் அலுவலர்கள், இளநிலை கூட்டுறவு தணிக்கையாளர், நேர்முக எழுத்தாளர் உள்ளிட்ட குரூப்-2 மற்றும் 2 ஏ பணியிடங்களுக்கு 2327 பேரை தேர்வு செய்வதற்குப் பதிலாக 2540 பேரை தேர்வு செய்ய டி.என்.பி.எஸ்.சி. முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பு இன்று அதன் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.