தமிழகத்தில் மின்கட்டண உயர்வு அமல் இல்லை… அரசு முடிவின் பின்னணி என்ன?

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் (TNERC) பரிந்துரையின்படி, ஜூலை மாதம் முதல் மின் கட்டணத்தை உயர்த்த தமிழ்நாடு மின்சார வாரியம் பரிசீலனை செய்வதாக இரு தினங்களுக்கு முன்னர் செய்தி வெளியானது.
தமிழகத்தில் 3.3 கோடிக்கும் மேற்பட்ட மின் இணைப்புகளை நிர்வகிக்கும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (TANGEDCO), தொடர்ந்து நிதி இழப்பை சந்தித்து வருவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்த கட்டண உயர்வு வீடுகள், வணிக நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு அமல்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டது.
கடந்த 2022-ல் மின் கட்டணம் 30 சதவீதத்துக்கு மேல் உயர்த்தப்பட்டது. மத்திய அரசின் உதய் மின் திட்டத்தின் கீழ், 2027 வரை ஆண்டுதோறும் ஜூலை மாதம் கட்டண உயர்வு அவசியம் என்பதால், 2023-ல் 2.18 சதவீதமும், 2024-ல் 4.83 சதவீதமும் கட்டணம் உயர்த்தப்பட்டது. இந்த ஆண்டு, ஏப்ரல் மாத பணவீக்க விகிதமான 3.16 சதவீதம் அல்லது 6 சதவீதம் ஆகியவற்றில் எது குறைவோ அது கட்டண உயர்வாக அமல்படுத்தப்பட வேண்டும் என்ற விதியின் அடிப்படையில், 3.16 சதவீத உயர்வு முன்மொழியப்பட்டுள்ளதாகவும், எனவே கட்டண உயர்வு 3.16 சதவீதம் இருக்கும் என்றும் செய்திகள் வெளியானது.
‘மின் கட்டணம் உயர்த்தப்படாது’
இந்த நிலையில், மின் கட்டணம் உயர்த்தப்பட மாட்டாது எனத் தமிழக போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சிவசங்கர் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வீட்டு மின் இணைப்புகளுக்கு எவ்வித மின் கட்டண உயர்வும் இல்லை. அனைத்து இலவச மின்சாரச் சலுகைகளும் தொடரும். கடந்த சில நாட்களாக செய்தி ஊடகங்களில் மின் கட்டண உயர்வு குறித்து அதிகாரபூர்வமற்ற தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. தற்சமயம் மின் கட்டண உயர்வு குறித்து எவ்வித ஆணையும், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தினால் வெளியிடப்படவில்லை.

எனினும் ஒழுங்குமுறை ஆணையம், மின்கட்டணம் தொடர்பான ஆணை வழங்கிடும்போது, அதனை நடைமுறைப்படுத்துகையில் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு எவ்வித மின் கட்டண உயர்வும் இருக்கக் கூடாது எனவும், தற்போது வழங்கப்படும் அனைத்து இலவச மின்சாரச் சலுகைகளும் தொடரவேண்டும் எனவும் முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்” என்று கூறியுள்ளார்.
கடைகள், வணிக நிறுவனங்களுக்கு அமலாகும்?
அதே சமயம் கடைகள், வணிக மற்றும் தொழில் நிறுவனங்களுக்கான கட்டண உயர்வு குறித்து அமைச்சர் அறிக்கையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை என்பதால், அவற்றுக்கான கட்டண உயர்வு அமல்படுத்தப்பட வாய்ப்பு உள்ளதாகவே தெரிகிறது.
பின்னணி என்ன?
மின் கட்டண உயர்த்தப்படலாம் என செய்தி வெளியானதும், எதிர்க்கட்சிகள் தரப்பில் மட்டுமல்லாது, இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சிகள் தரப்பில் கூட அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
மேலும், அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தலும் நடைபெற இருப்பதால், இப்போது மின் கட்டணத்தை உயர்த்தினால், பெண்களுக்கான இலவச பேருந்து பயணத் திட்டம், பெண்களுக்கு மாதம் ரூ. 1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் போன்றவற்றினால் திமுக-வுக்கு பெண்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கும் சாதகமான மனநிலையை பாதிக்கச் செய்துவிடும். இவற்றையெல்லாம் கருத்தில்கொண்டே மின் கட்டண உயர்வை அமல்படுத்துவதில்லை என அரசு தரப்பில் முடிவெடுக்கப்பட்டதாக தெரிகிறது.
அரசு வழங்கும் இலவச மின்சார சலுகைகள்
தமிழக அரசு, வீட்டு நுகர்வோருக்கு 100 யூனிட் வரை மிகக் குறைந்த கட்டணத்தை (ஒரு யூனிட் ரூ. 1.13) வழங்கி வருகிறது, இது இந்தியாவிலேயே மிகக் குறைவு. மேலும், 2 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாய மின் இணைப்புகளுக்கு இலவச மின்சாரமும், பவர் லூம் நெசவாளர்களுக்கு இரு மாதங்களுக்கு 1,000 யூனிட் இலவசமாகவும், கைத்தறி நெசவாளர்களுக்கு 300 யூனிட் இலவசமாகவும் வழங்கப்படுகிறது.

இதில், 90% வீட்டு மற்றும் விவசாய நுகர்வோருக்கு செல்கிறது. அதே சமயம், அறப்போர் இயக்கத்தின் அறிக்கையின்படி, 100 யூனிட் வரை மின் நுகர்வுக்கு தமிழகம் மிகக் குறைந்த கட்டணத்தை வசூலித்தாலும், 800 மற்றும் 1,000 யூனிட் நுகர்வுக்கு மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது உயர் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த நிலையில், 2025-26 ஆம் நிதியாண்டிற்கு, TNERC ரூ. 16,274.58 கோடி மானியம் வழங்க தமிழ்நாடு மின் விநியோகக் கழகத்திற்கு (TNPDCL) ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.