மும்மொழி கொள்கைக்கு எதிரான தமிழக அரசின் நிலைப்பாடும், இது தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த சில தினங்களாக மத்திய அரசை நோக்கி எழுப்பும் கேள்விகளும் தேசிய அளவில் கவனத்தை ஈர்த்து வருகின்றன.
இதனையடுத்து, ” கூடுதலாக ஒரு மொழியைக் கற்றுக்கொண்டால் என்ன தவறு, சிறு வயதிலேயே குழந்தைகளுக்கு அதிக மொழிகளைக் கற்றுக்கொள்ளும் திறன் உள்ளதாக கூறப்படும் நிலையில், இன்னொரு மொழியை, அதாவது இந்தி மொழியைக் கூடுதலாக கற்றுக்கொள்ளலாமே..?” போன்ற கேள்விகளுடன் பிரபல தொலைக்காட்சி செய்தி தொகுப்பாளரான கரண் தபார், தமிழ்நாடு தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனுடன் The Wire ஆங்கில ஊடகத்துக்காக நேர் காணல் ஒன்றை நடத்தினார்.
அப்போது கேள்விகளுக்குப் பதில் அளித்த அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் ராஜன், “கல்வி மாநிலப் பட்டியலில் இருக்கிறது. அதனால் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசே கல்வியில் என்ன சேர்க்க வேண்டும் என்பதை முடிவு செய்ய முடியும். அரசியலமைப்பு சட்டமும் அதனையே தான் கூறுகிறது. தனிப்பட்ட ஒரு மாணவர் இந்தி உள்ளிட்ட யார் வேண்டுமானாலும் எந்த மொழியை வேண்டுமானாலும் தமிழ்நாட்டில் படிக்கலாம். அதற்கு எந்த கட்டுப்பாடும் கிடையாது. ஆனால் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசு இருமொழிக் கொள்கையை மட்டுமே பின்பற்றுவோம் என்பதில் உறுதியாக இருக்கிறோம். இதன் பின்னணியில் தமிழ் மொழியின் வளர்ச்சி, பாதுகாப்பு மற்றும் கலாச்சாரம் இருக்கிறது. அதனை கருத்தில் கொண்டுதான் முடிவு எடுக்க முடியும்.
உ.பி., பீகாரின் வளர்ச்சி என்ன..?
இந்தி மொழியை ஒருவர் ஏன் படிக்க வேண்டும். மும்மொழிக் கொள்கையால் உத்தரப்பிரதேசம், பீகார் உள்ளிட்ட வடமாநிலங்கள் என்ன வளர்ச்சியை அடைந்திருக்கின்றன. குறைந்தபட்சம் இரு மொழிக் கொள்கையையாவது அவர்கள் கடைபிடிக்கிறார்களா?. மும்மொழிக் கொள்கையை பின்பற்றி தமிழ்நாட்டின் கல்வியை விட சாதித்திருக்கிறோம் என ஒரே ஒரு எடுத்துக்காட்டை, ஒரு மாநிலத்தை எடுத்துக்காட்டாக கூறுங்கள். நாங்கள் அதன்பிறகு மும்மொழிக் கொள்கையை பற்றி சிந்திக்கிறோம். இரு மொழிக் கொள்கையை பின்பற்றும் தமிழ்நாடு கல்வி உள்ளிட்ட எல்லா துறைகளிலும் முன்னணியில் இருக்கும்போது, எங்கள் மீது ஏன் தேவையில்லாமல் மும்மொழிக் கொள்கையை திணிக்கிறீர்கள்.

AI பற்றிச் சொல்லிக்கொடுக்கலாமே..?
மூன்று மொழிகளுக்கு பதிலாக அறிவியல் துறையில் இப்போது வந்திருக்கும் புதிய தொழில்நுட்பங்கள் சார்ந்த படிப்புகளை அறிமுகம் செய்யுங்கள். செயற்கை நுண்ணறிவு ( AI) அபாரமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. அதனைப் பற்றி பள்ளிக் கல்வியில் சேர்க்கலாமே. இது தான் மாணவர்களின் வளர்ச்சியில் செலுத்தும் உண்மையான அக்கறையாக இருக்க முடியும். இதைத் தவிர்த்து எந்தவொரு முன் எடுத்துக்காட்டும் இல்லாமல், சிறப்பாக செயல்படும் தமிழ்நாட்டை மத்திய அரசு நிதி உள்ளிட்ட விவகாரங்களில் தொடர்ந்து வஞ்சிப்பது எந்த வகையில் நியாயம்?
இந்தி கற்றுத் தரும் பள்ளிகளை நாங்கள் அழிக்கவில்லை. ஆனால் தமிழ்நாடு அரசு தமிழ் மொழியை தான் கற்றுக் கொடுக்கும். கூடுதலாக ஆங்கிலம் மட்டும் தான் கற்பிக்கப்படும். ஆனால், மும்மொழி கொள்கையை ஏற்றுக் கொண்டால் தான் ரூ.2400 கோடி நிதி வழங்க முடியும் என ஒன்றிய அமைச்சர் கூறுவது லஞ்சம் கொடுத்தாதால் தான் தொழிலை நடத்த விடுவேன் என ரவுடி துப்பாக்கியை எடுத்து எனது நெற்றி பொட்டில் வைத்து மிரட்டி கேட்பது போல இருக்கிறது. நியாயப்படி நீங்கள் துப்பாக்கியை எடுத்து என் தலையில் வைத்து மிரட்டுபவரிடம் தான் பேச வேண்டும். என்னிடம் பேசக்கூடாது” எனக் காட்டமாக கூறினார்.
சமூக வலைதளங்களில் வைரல்
அவரது இந்த பதிலடி, சமூக ஊடகங்களில் ஏராளமானோரால் பகிரப்பட்டு டிரெண்டாகி தேசிய அளவில் பேசுபொருளானது. இதைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும், அந்த வீடியோவை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்து, “இருமொழிக் கொள்கை குறித்து அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெள்ளத் தெளிவாக விளக்கி உள்ளார். தமிழ்நாடு கல்வியில் சிறந்து விளங்கும் நிலையில், ஏகாதிபத்திய மனோபாவம் கொண்ட சிலரது வசதிக்காக தமிழ்நாட்டின் மீது மொழி திணிப்பு ஏன்” என்று கேள்வி எழுப்பி உள்ளார்.