விரைவில் உள்ளாட்சித் தேர்தல்… என்ட்ரி ஆகும் விஜய் கட்சி… அரசியல் கட்சிகளின் வியூகம் என்ன?
தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் 25 மாநகராட்சிகள், 142 நகராட்சிகள், 561 பேரூராட்சிகள், 12,525 கிராம ஊராட்சிகளும், 388 ஊராட்சி ஒன்றியங்களும், 36 மாவட்ட ஊராட்சிகளும் இயங்கி வருகின்றன. இந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு மாநில தேர்தல் ஆணையம் மூலம் தேர்தல் நடத்தப்படுகிறது.
அந்த வகையில், உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவிக்காலம் வருகிற ஜனவரி 5 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. எனவே, இந்த 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான ஆயத்தப் பணியில் மாநில தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது.
தேர்தல் ஆணையம் சுற்றறிக்கை
இது தொடர்பாக, தமிழக மாநில தேர்தல் ஆணையத்தின் செயலாளர் கி.பாலசுப்பிர மணியம், மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், “ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு எதிர்வரும் சாதாரண, தற்செயல் தேர்தலை முன்னிட்டு, தேர்தல்களுக்கு தேவையான அனைத்து வகையான வாக்குப்பதிவு பொருட்களையும் தயார் நிலையில் வைத்திருப்பது அவசியமாகிறது.
இதில், வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்படும் வாக்கு பெட்டிகள் தயார் நிலையில் வைக்க வேண்டும். எனவே, ஊரக உள்ளாட்சி தேர்தல்களில் பயன்படுத்தப் படும் அனைத்து வகையான வாக்கு பெட்டி கள், தற்போதைய தரம் மற்றும் நிலையை, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவி யாளர் (வளர்ச்சி) நேரடியாக ஆய்வு செய்து, அவற்றின் தன்மையை ஆராய வேண்டும். அதாவது, வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தும் வகையில் நல்ல நிலையில் உள்ளவை, சிறிதளவு பழுதடைந்து, அதை சரி செய்வதன் மூலம் வாக்குப்பதிவுக்கு மீண்டும் பயன்படுத்தக்கூடிய நிலையில் உள்ளவை, முழுவதும் பழுதடைந்து பயன்படுத்த இயலாத நிலையில் உள்ளது என வகை பிரித்து வைத்துக் கொள்ள வேண்டும்” என வலியுறுத்தி உள்ளார்.
அரசியல் கட்சிகள் தீவிர ஆலோசனை
இந்த நிலையில், உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ள ஆளும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தயாராகி வருகின்றன. திமுக-வைப் பொறுத்தவரை 2021 சட்டசபை மற்றும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் பெற்ற வெற்றி வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலிலும் தொடர வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது. கடந்த உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக ஆளும் கட்சியாக இருந்த நிலையில், திமுக கூட்டணி அப்போது 55 சதவீத வாக்குகளைப் பெற்று அதிக இடங்களைக் கைப்பற்றியது. ஆனால், இந்த முறை ஆளும் கட்சியாக இருப்பதாலும், முக்கிய எதிர்க்கட்சியான பலவீனமாக இருப்பதாலும், அதிக இடங்களை, அதாவது கிட்டத்தட்ட 90 சதவீதத்துக்கும் மேலான இடங்களைக் கைப்பற்ற வேண்டும் என திமுக தலைமை கருதுகிறது.
திமுக-வின் வியூகம்
இது தொடர்பாக கட்சித் தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின், மாவட்டச் செயலாளர்களுக்கு மிக கண்டிப்பான உததரவை பிறப்பித்துள்ளதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் உள்ளூர் நிலவரங்களைப் பொறுத்து திமுக கூட்டணிக்குள் மேலும் புதிய கட்சிகளைச் சேர்த்துக்கொள்ளவும் அவர் கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தி உள்ளதாகவும், அந்த வகையில் புதிய தமிழகம் கட்சி கூட்டணிக்குள் வர வாய்ப்பு இருப்பதாகவும் அவ்வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.
திமுக கூட்டணி கட்சிகளைப் பொறுத்தவரை, கடந்த முறையைவிட அதிக இடங்களில் போட்டியிட வேண்டும். அதற்கேற்ற வகையில் திமுக-விடம் அதிக இடங்களைக் கேட்டுப்பெற வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளன.
என்ட்ரி ஆகும் விஜய் கட்சி
பாஜக, தேமுதிக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் நாடாளுமன்ற தேர்தலில் எந்த நிலையை மேற்கொண்டனவோ அந்த நிலையையே உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்வதிலும் கடைப்பிடிக்க வேண்டும் எனக் கருதுகின்றன. அதே சமயம் தமிழக அரசியல் களத்தில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் வரவு உற்று நோக்க வைத்துள்ளது.
வரவிருக்கும் 2026 சட்டமன்ற தேர்தல்தான் தனது கட்சியின் இலக்கு என விஜய் முன்னரே அறிவித்துவிட்ட போதிலும், கட்சிக்கு கிடைத்துள்ள தேர்தல் கமிஷனின் அங்கீகாரம், விரைவில் நடைபெற உள்ள அக்கட்சியின் மாநாடு போன்றவை பரபரப்பை கிளப்பி உள்ளதால், உள்ளாட்சித் தேர்தலில் அக்கட்சியின் ஆதரவைப் பெற இந்த கட்சிகள் தீவிரம் காட்டும் எனக் கூறப்படுகிறது.
எடப்பாடியின் கணக்கு
அதே சமயம், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கடந்த நாடாளுமன்ற தேர்தல் தோல்வி பெரும் பின்னடைவாக அமைந்தது. இதனால், உள்ளாட்சித் தேர்தலிலும் அதிக இடங்களில் தோல்வி அடைய நேரிட்டால், அது தன்னுடைய கட்சித் தலைமை பதவிக்கு நெருக்கடியாக அமைந்துவிடும் என அவர் கருதுவதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக, அவர் 2026 சட்டசபை தேர்தல் வரை உள்ளாட்சித் தேர்தலை தள்ளிப்போடும் வகையில், ஏதாவது நீதிமன்றத்தில் வழக்குத் தொடர முடியுமா என கட்சியின் மூத்த வழக்கறிஞர்களிடம் கருத்துக் கேட்கப்பட்டு உள்ளதாகவும் அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.