அரசுப் பள்ளிகளில் அதிகரிக்கும் மாணவர் சேர்க்கை… பெற்றோர்கள் ஆர்வம்!

கடந்த சில ஆண்டுகளாக அரசுப் பள்ளிகளின் தரம் மற்றும் வசதிகளை மேம்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசு பல்வேறு தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இது தொடர்பாக மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு தொடர் அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறார். மேலும், மாணவர் சேர்க்கையை ஊக்குவிக்கும் சிறப்பு இயக்கங்கள் மற்றும் நலத்திட்டங்கள் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
2025 ஆம் ஆண்டு மார்ச் 1 முதல் தொடங்கிய சிறப்பு மாணவர் சேர்க்கை இயக்கம், மாநிலம் முழுவதும் உள்ள அரசு ஆரம்பப் பள்ளிகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மாநிலம் முழுவதும் சுமார் 1.17 லட்சம் மாணவர்கள் புதிதாக அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். இதில் முதல் வகுப்பில் மட்டும் 1.05 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இது பெற்றோர்களிடையே அரசுப் பள்ளிகள் மீதான ஆர்வமும் நம்பிக்கையும் அதிகரித்திருப்பதை எடுத்துக்காட்டுகிறது.
இது தொடர்பாக அன்பில் மகேஷ் தனது சமூக வலைதள பக்கத்தில், ” கடந்த ஒரு மாதத்தில் மாநிலம் முழுவதும் 1ஆம் வகுப்பிற்கு 105,286 மழலையர் உட்பட ஏனைய வகுப்புகளும் சேர்த்து மொத்தம் 117,310 மாணவச் செல்வங்கள் சேர்ந்துள்ளனர். கல்வியின் துணை கொண்டு உலகை வெல்ல நம் அரசுப் பள்ளிகளே தலைசிறந்த முறையில் அடித்தளமிடும்” என்று தெரிவித்துள்ளார்.
இந்த மாணவர் சேர்க்கை உயர்வுக்கு அரசு அறிமுகப்படுத்திய பல்வேறு திட்டங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ‘புதுமைப் பெண்’ மற்றும் ‘தமிழ்ப் புதல்வன் கல்வி உதவித்திட்டம்’ போன்ற திட்டங்கள் மாணவர்களுக்கு நிதி உதவி மற்றும் ஊக்கத்தொகை வழங்குகின்றன. மேலும், காலை உணவு திட்டம், மதிய உணவு திட்டம், நவீன ஆய்வகங்கள், ஸ்மார்ட் வகுப்பறைகள் மற்றும் ஆன்லைன் ஆளுமை மேம்பாட்டு வகுப்புகள் போன்ற வசதிகள் பெற்றோர்களை ஈர்த்துள்ளன.

இதன் விளைவாக, தனியார் பள்ளிகளை விட அரசுப் பள்ளிகளை தேர்ந்தெடுக்கும் பெற்றோர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கல்வித்துறையின் தரவுகளின்படி, தமிழ்நாட்டில் ஆரம்ப மற்றும் மேல்நிலை கல்வியில் மொத்த சேர்க்கை விகிதம் தேசிய சராசரியை விட அதிகம். 2025-26 கல்வியாண்டில், அரசுப் பள்ளிகளில் சேர்ந்த மாணவர்களில் பெரும்பாலானோர் அங்கன்வாடி மையங்களில் இருந்து மாறியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்காக, பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு சிறப்பு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தொழிற்கல்வி படிப்புகளில் 7.5% இட ஒதுக்கீடு வழங்கப்படுவது, உயர்கல்வியில் அவர்களின் பங்கேற்பை உறுதி செய்கிறது. இது பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்கு பெரும் வாய்ப்பை வழங்குகிறது. 2025-26 ஆம் ஆண்டில், சுமார் 3 லட்சம் மாணவர்கள் சேர வாய்ப்புள்ளதாக கல்வித்துறை மதிப்பிடுகிறது. இதில் 92% புதிய மாணவர்களாக இருப்பார்கள்.
இந்த மாணவர் சேர்க்கை உயர்வு, அரசுப் பள்ளிகள் மீதான நம்பிக்கையை அதிகரிக்க வைத்துள்ளது. பள்ளிகளை மேம்படுத்துவதற்கான அரசின் முயற்சிகள், ஆசிரியர்களின் பயிற்சி, மற்றும் புதுமையான கற்பித்தல் முறைகள் மாணவர்களிடையே ஆர்வத்தை தூண்டியுள்ளன. பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளுக்கு சிறந்த எதிர்காலத்தை உறுதி செய்யும் வகையில் அரசுப் பள்ளிகளை நம்பத் தொடங்கியுள்ளனர்.

மொத்தத்தில் 2025-26 ஆம் கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது, தமிழ்நாடு அரசின் கல்வி மேம்பாட்டு முயற்சிகளுக்கு கிடைத்த ஒரு வெற்றியாகவும், அனைவருக்கும் சமமான கல்வி வாய்ப்பை உறுதி செய்யும் நடவடிக்கையாகவும் அமைந்துள்ளது என்கிறார்கள் கல்வியாளர்கள்.