பொதுமக்கள் சொத்துகளை வாங்கும்போது அதன் மதிப்பில், 7 சதவீதம் முத்திரை தீர்வை, 2 சதவீதம் பதிவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த மதிப்பு அடிப்படையில், முத்திரை தாள்களைப் பயன்படுத்த வேண்டும் அல்லது ‘இ – ஸ்டாம்பிங்’ முறையில் உரிய தொகையை செலுத்த வேண்டும்.
ஆனால் தமிழ்நாட்டில் பொதுவாக வீட்டை வாடகைக்கு விடுபவர்கள் அல்லது நிலத்தை குத்தகைக்கு விடுபவர்கள் அதற்காக செய்துகொள்ளும் ஒப்பந்தங்களைப் பதிவு செய்வதில்லை. உதாரணமாக, வீட்டை வாடகைக்கு விடுவோர், 11 மாதம் என்ற காலவரையறையில் ஒப்பந்தம் மேற்கொள்கின்றனர். இந்த ஒப்பந்தம் பெரும்பாலும் 20 ரூபாய் முத்திரைத் தாளை பயன்படுத்தியே எழுதப்படுகிறது. ஆண்டுதோறும் இந்த ஒப்பந்தங்களை அவர்கள் புதுப்பித்துக் கொள்கிறார்கள்.
இந்த நிலையில், வாடகை ஒப்பந்தம் உள்ளிட்ட பணிகளுக்கு, 20 ரூபாய், 50 ரூபாய் போன்ற குறைந்த மதிப்பிலான பத்திரங்களை பயன்படுத்துவதை நிறுத்த, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதனையடுத்து வீடு, கடை வாடகை உள்ளிட்ட சாதாரண ஒப்பந்த ஆவணங்களுக்கு, 200 ரூபாய் மதிப்புள்ள முத்திரை தாள்களை பயன்படுத்த, பதிவுத் துறை அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து பேசிய தமிழக பதிவுத் துறை அதிகாரி ஒருவர், “சாதாரண ஒப்பந்தங்களுக்காக பயன்படுத்தப்படும், 20 ரூபாய், 50 ரூபாய் முத்திரை தாள்கள் கிடைப்பதில்லை என புகார் கூறப்படுகிறது.
அதனால், குத்தகை ஒப்பந்தம், பிரமாண பத்திரம் போன்ற ஆவணங்களுக்கான முத்திரை தீர்வை, 20 ரூபாயில் இருந்து, 200 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் அடிப்படையிலேயே பொதுமக்கள் இந்த ஒப்பந்தங்களுக்கான முத்திரைத் தாள்களை பயன்படுத்த வேண்டும்.
பதிவு செய்யாமல் வைத்துக் கொள்வதாக இருந்தாலும், இந்த மதிப்பு முத்திரைத் தாள்களையே பயன்படுத்த வேண்டும். 200 ரூபாய் முத்திரைத் தாள் பயன்பாடு குறித்து, பொது மக்களுக்கு சார் – பதிவாளர் வாயிலாக அறிவுறுத்தல்கள் வழங்கி வருகிறோம்” எனத் தெரிவித்தார்.