சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு நினைவு உயர் சிறப்பு மருத்துவமனையில் பணியாற்றும் பாலாஜி என்ற மருத்துவரை, இளைஞர் ஒருவர் சரமாரியாக கத்தியால் குத்திய சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தாக்குதலில் மருத்துவர் பாலாஜியின் தலை, கழுத்து, முதுகு, காதின் பின்பகுதி, நெற்றி உள்ளிட்ட 7 இடங்களில் காயம் ஏற்பட்டது. மருத்துவர் மீது தாக்குதல் நடத்திய இளைஞரை கைது செய்து, 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்தும், தங்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வலியுறுத்தியும், அரசு மருத்துவர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு மருத்துவர்கள் சங்கம், இந்திய மருத்துவர்கள் சங்கம் சார்பில் நேற்று முன்தினம் மாலை 6 மணி முதல் நேற்று மாலை 6 மணி வரை புறநோயாளிகள் சிகிச்சையை புறக்கணித்தனர். போராட்டத்தால், மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவக் கல்லூரிகளில் நேற்று ஒருநாள் புறநோயாளிகள் பாதிக்கப்பட்டனர். அதே சமயம் அவசர அறுவை சிகிச்சை போன்றவை பாதிக்கப்படவில்லை.
கட்டாயமாகும் அடையாள அட்டை
இந்த நிலையில், இந்த தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து அரசு மருத்துவமனை மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 36 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், 37 மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளிலும், 320 வட்டார அரசு மருத்துவமனைகளிலும் நோயாளிகளின் பார்வையாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படுவது படிப்படியாக நடை முறைப்படுத்தப்பட உள்ளது.
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 4 நிறங்களைக் கொண்ட கையில் கட்டிக்கொள்ளும் வகையில் அடையாள அட்டை அறிமுகப்படுத்தப்பட்டு நடைமுறையில் இருக்கிறது. காலை 9 மணிக்கு தொடங்கி 1 மணிக்குள்ளாகவே புறநோயாளிகள் சேவை முடிக்க வேண்டும். எனவே, இதுபோன்ற இடங்களில் மெட்டல் டிடெக்டர் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது என தமிழக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
முன்னதாக தாக்குதலில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும், மருத்துவர் பாலாஜியை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். தான் நலமுடன் இருப்பதாக, அப்போது அவர் கூறியுள்ளார். தனது தலைக்காயங்களுக்கு தையல் போட்டுள்ளதாகவும் நோய் எதிர்ப்பு மருந்துகள் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் ‘பேஸ் மேக்கர்’, சோதனை, இசிஜி எடுக்கப்பட்டுள்ளதாகவும் பாலாஜி மேலும் தெரிவித்துள்ளார்.