மாநில அரசின் பாடத்திட்டத்தில் தரம் குறைவா?ஆளுநரின் பேச்சால் கொதிக்கும் கல்வியாளர்கள்!
தேசிய பாடத்திட்டத்தை ஒப்பிடும்போது, தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தின் தரம் மோசமாக உள்ளது என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம் சாட்டி உள்ளார்.
“மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு, ரோபோட்டிக்ஸ் போன்றவற்றில் அறிவுத்திறன் குறைவாக உள்ளது. பள்ளி மாணவர்களுக்கும் நவீன தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த வேண்டும்” என அவர் மேலும் கூறி இருந்தார்.
ஆளுநரின் இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், கல்வித்தரம் குறித்து ஆய்வு செய்ய விரும்பினால், மாநில கல்வி திட்டத்தில் படித்த மாணவர்களிடம் ஆளுநர் பரிசோதித்து கொள்ளட்டும் என மாநில பாடத்திட்டம் குறித்து விமர்சித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதிலளித்துள்ளார். சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை விட தமிழக பாடத்திட்டம் சிறப்பாக உள்ளது எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.
இந்த நிலையில், ஆளுநரின் இந்த குற்றச்சாட்டு குறித்து பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபுவிடம் கேட்டோம்.
ஆளுநர் பதவியில் இருந்து கொண்டு ஒருவரால் இவ்வாறு பேசவே முடியாது. ஒரு குழந்தையிடம், ‘நீ சாப்பிடும் உணவு சரியில்லை’ எனக் கூறினால் அது எந்தளவுக்கு மனஉளைச்சலுக்கு ஆளாகுமோ அதைப் போன்ற காரியம் இது.
மாநிலப் பாடத்திட்டம் தரம் தாழ்ந்தது (State Board is very low) என்ற தனது கருத்தை ஆளுநர் ரவி, திரும்பப் பெற வேண்டும் அல்லது ஆளுநர் பொறுப்பில் இருந்து அவர் உடனடியாக விலக வேண்டும். ஆளுநர் ரவி பேசியுள்ள கருத்து, உண்மைக்கு புறம்பானது மட்டுமல்ல, மாணவர்களை மனஉளைச்சலுக்கு உள்ளாக்கும் செயல். பெற்றோருக்கு தாழ்வு மனப்பான்மையை உருவாக்குவதுடன், தனியார்களை ஊக்குவிக்கும் தந்திரமிக்க பேச்சு இது.
மாநிலப் பாடத்திட்டம் மிகவும் தரம் தாழ்ந்தது என்று எதன் அடிப்படையில் ஆளுநர் கூறுகிறார்? மாநிலப் பாடத்திட்டத்தை எந்த பாடத்திட்டத்துடன் ஒப்பாய்வு செய்தார்? எப்போது செய்தார்? எந்த வகையில் தரம் தாழ்ந்து இருப்பதாக கண்டறிந்தார்?
மாநிலத்தின் தலைவராக உள்ள ஆளுநர், அவ்வாறு ஆய்வுகள் மேற்கொண்டு இருந்தால், தான் ஆய்ந்தறிந்ததை மாநில அரசின் பள்ளிக்கல்வித் துறையிடம் தெரிவித்தாரா? ஒப்பீட்டு ஆய்வறிக்கையை மாநில அரசிடம் வழங்கி கருத்து கோரினாரா?
இவை எதையுமே ஆளுநர் செய்ததாக அவரே கூறவில்லை. தான் பார்த்தாக (I can see) கூறுவதற்கும், தான் ஆராய்ந்து அறிந்துக் கொண்டதாக கூறுவதற்கும் பெரும் வேறுபாடு உள்ளது. மாநிலப் பாடத்திட்டம் போட்டிகளுக்கு தகுதியானதாக இல்லை என்ற விமர்சனத்தை போகிறபோக்கில் பொத்தாம் பொதுவாக வைப்பது மாநிலப் பாடத்திட்டத்தைச் சிறுமைப்படுத்தும் நோக்கம் கொண்டது.
என்சிஇஆர்டி (NCERT) தயாரித்த இயற்பியல் பாடப் புத்தகம் அணு குறித்து 2017யில் ஒரு விதமாகவும் 2020க்கு பின்னர் வேறு விதமாகவும் உள்ளதாக தேசிய தேர்வு முகமை (NTA) உச்ச நீதிமன்றத்தில் நீட் முறைகேடுகள் தொடர்பான வழக்கில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் கூறியுள்ளது.
தேசியத் தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET) என்ற ஒரு சூழ்ச்சி வலையில் மாணவர்கள் சிக்கித் தவிக்கும் நிலையில், எத்தகையப் போட்டியையும் எதிர்கொள்ளும் உள்ளடக்கம் கொண்டதாக பாடநூல்கள் மாநில அரசால் தயாரிக்கப்பட்டுள்ள சூழலில், மாணவர்களிடையே ஆளுநர் நிகழ்த்தியுள்ள, எந்தவித அடிப்படை ஆய்வும் இல்லாத, அவதூறு பரப்பும் உரை கண்டனத்திற்குரியது.
தமிழ்நாடு அரசு பல்கலைக்கழகங்கள், அதன் ஏற்பில் இயங்கும் பல நூறு கல்லூரிகள், இவற்றில் பயிலும் பல லட்ச மாணவர்களில் பெரும் பகுதியினர் மாநிலப் பாடத்திட்டத்தில் பயின்றவர்கள். விண்வெளி ஆய்வில் கோலோச்சும் இஸ்ரோ விஞ்ஞானிகள் பலரும் மாநிலப் பாடத்திட்டத்தில், மாநில அரசுக் கல்லூரிகளில் பயின்றவர்கள்.
ஆளுநர் என்ற பதவியை வகிப்பதனால், பதவி வழிப் பொறுப்பாக தமிழ்நாடு மாநிலப் பல்கலைக்கழகங்களுக்கு வேந்தராக பொறுப்பு வகிக்கும் ரவி, பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை அனைத்து நிலையிலும் செயல்படும் தமிழ்நாடு மாநில ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை மிகவும் சிறுமைப்படுத்தும்விதமாக பேசியுள்ளார்.
குழந்தைப் பருவ மாணவர்களிடம் பாடத்திட்டம் குறித்த தவறான விமர்சனங்களை முன்வைத்ததின் விளைவாக, மாநிலப் பாடத்திட்டதில் பயிலும் மாணவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கி உள்ளார். மனரீதியாகவும், அதன் விளைவாக உடல் ரீதியாகவும் மாணவர்கள் பாதிப்படையும் வகையில் பேசப்பட்ட பேச்சு கண்டனத்திற்குரியது” என்றார் ஆவேசமாக!