முதல்வர் ஸ்டாலின் Vs ஆளுநர் ரவி: மீண்டும் வெடித்த மோதல்… திரி கொளுத்திய தலையங்கம்!

தமிழக ஆளுநராக ஆர்.என். ரவி பதவியேற்றதிலிருந்தே அவருக்கும் தமிழக அரசுக்கும் இடையே மோதல் போக்கு அதிகரித்து வருகிறது. பொது நிகழ்ச்சிகளில் அரசை விமர்சித்து ஆளுநர் ரவி தெரிவிக்கும் கருத்துகளுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் அவ்வப்போது பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழகத்தின் பல்வேறு பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் பதவி காலியாக உள்ள நிலையில், துணைவேந்தர் நியமன திருத்த சட்ட மசோதா உள்ளிட்ட தமிழக சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட பல மசோதாக்களுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காமல் உள்ளார். இதற்கு எதிராக தமிழக அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு, கடந்த வாரம் நான்கு நாட்கள் விசாரிக்கப்பட்டது.
அப்போது மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் காலம்தாழ்த்தி வருவது தொடர்பாக நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்திருந்ததோடு, அது தொடர்பாக பல்வேறு கேள்விகளையும் எழுப்பினர்.
முதல்வர் பகிர்ந்த தலையங்கம்
ஆளுநர் ரவிக்கு எதிராக நீதிபதிகள் தெரிவித்த அந்த கருத்துகளைக் கொண்டு, பிரபல ஆங்கில ஏடான ‘இந்து’ நாளிதழில் தலையங்கம் வெளியாகி இருந்தது. அதனை தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘தமிழக ஆளுநரின் அரசியலமைப்புக்கு முரணான அத்துமீறல்களையும், பாஜக தலைமையிலான ஒன்றிய அரசின் இழிவான ஒப்புதலையும் இன்று தனியார் நாளிதழில் சரியாகவே வலியுறுத்தியுள்ளது. கடுமையான வார்த்தைகளால் எழுதப்பட்ட தலையங்கம், ஆளுநர் சட்டமன்றத்தை தன்னிச்சையாக குறைமதிப்பிற்கு உட்படுத்தியதை உள்ளடக்கியது மற்றும் பதவியில் தொடர அவருக்கு தார்மீக அதிகாரம் இல்லை என்பதை மீண்டும் வலியுறுத்துகிறது.

இந்தியா முழுவதும் உள்ள முன்னணி செய்தித்தாள்கள் மற்றும் அரசியலமைப்பு நிபுணர்கள், மீண்டும் மீண்டும் கண்டனம் செய்வதிலிருந்து மாநிலத்தின் பெயரளவிலான தலைவரான ஆளுநரோ அல்லது அவரது செயல்களை தொடர்ந்து பாதுகாத்து வளர்க்கும் டெல்லியில் உள்ள அவரது பாஜக எஜமானர்களோ எதையும் கற்றுக்கொள்ளவில்லை என்பது திகைப்பூட்டும் வகையில் உள்ளது” எனத் தெரிவித்திருந்தார்.
ஆளுநர் மாளிகையின் ஆவேசம்
இந்த நிலையில், உச்ச நீதிமன்றம் தனக்கு எதிராக தெரிவித்த கருத்துகளால் ஏற்கெனவே அப்செட்டில் இருந்த ஆளுநர் ரவிக்கு, அதன் அடிப்படையில் தனக்கு எதிராக எழுதப்பட்ட தலையங்கத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பகிர்ந்தது மேலும் கோபத்தை ஏற்படுத்தியதாக தெரிகிறது. இதனையடுத்து ஆளுநர் மாளிகையிலிருந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சாடி நேற்றிரவு அறிக்கை வெளியிடப்பட்டது.
இதுதொடர்பாக, தமிழக ஆளுநர் மாளிகையின் அதிகாரபூர்வ எக்ஸ் வலைதள பதிவில், ” உச்ச நீதிமன்றத்தின் முன்பாக உள்ள ஓர் வழக்கின் விசாரணைக்கு புறம்பான ஒரு விஷயத்தில், ஒரு நாளிதழ் வெளிவந்த கட்டுரையை கொண்டு, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனது சமூக ஊடக பக்கத்தின் மூலம் ஆளுநருக்கு எதிராக தமிழ்நாட்டு மக்களைத் தவறாக வழிநடத்த முயற்சிப்பது மிகவும் துரதிருஷ்டவசமானது.

அரசியலமைப்பில் உயரிய பதவியை வகிக்கும் ஒரு முதலமைச்சர், நீதிமன்ற விசாரணைக்கு புறம்பாக அமையக்கூடிய விஷயத்தில் தனது அரசியலமைப்புப் பொறுப்பை அப்பட்டமாக மதிக்காமல், மிகவும் தரம் தாழ்ந்து முற்றிலும் பாதி உண்மைகள் மற்றும் பாரபட்சம் நிறைந்த ஒரு நாளிதழின் கருத்துக்களை தனது விரக்தியை வெளிப்படுத்துவதற்கான ஒரு ஊன்றுகோலாக, தனது முழுமையான நிர்வாகத் தோல்வியை மறைக்கவும், தனது அரசியல் பாதுகாப்பின்மையை மறைக்கவும் பயன்படுத்தியிருப்பது பரிதாபத்துக்குரியது. தமிழ்நாட்டு மக்கள் அவர் நினைப்பதை விட மிகவும் புத்திசாலிகள்” என்று கூறப்பட்டிருந்தது.
இந்த நிலையில், ஆளுநர் மாளிகை அறிக்கை வெளியான அதே எக்ஸ் வலைதள பக்கத்தின் கீழேயே ஆளுநருக்குப் பதிலடி கொடுக்கும் விதமான கருத்துகளை திமுக ஆதரவாளர்கள் பகிர்ந்து வருகின்றனர். ” தமிழக அரசை விமர்சித்து ஆங்கில ஏடுகளில் பக்கம் பக்கமாக பேட்டி கொடுக்கும் போது முதல்வருக்கும் இப்படி தானே கோபம் வந்திருக்கும். அப்போது இனித்தது… இப்போது கசக்கிறதா? ” என்ற ரீதியில் மேலும் பல்வேறு விமர்சனங்களை அவர்கள் முன்வைத்து வருகின்றனர்.