ஆளுநருக்கு அறிவுறுத்திய உச்ச நீதிமன்றம்… முடிவுக்கு வருமா அரசுடனான மோதல்?

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம், பாரதிதாசன், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் இல்லாத நிலை காணப்படுகிறது.
துணைவேந்தர் தேடுதல் குழுவில் யுஜிசி பிரதிநிதி இடம்பெற வேண்டும் என ஆளுநர் ஆர்.என். ரவி வலியுறுத்துவதும், அதனை தமிழக அரசு ஏற்க மறுப்பதுமாக இருப்பதால் இப்பிரச்னையில் இழுபறி நீடித்துக்கொண்டே உள்ளது. மேலும், இந்த விவகாரத்தில் யுஜிசி கொண்டு வந்துள்ள புதிய விதியினால், தேடுதல் குழுவில் தமிழக அரசின் பிரதிநிதி இடம்பெற இயலாத நிலையும் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்காமல் இருப்பது பற்றியும், மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டு வருவது பற்றியும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு பல்வேறு வழக்குகளை தொடர்ந்திருந்தது. இதில் துணைவேந்தர் தேடுதல் குழுவில் யுஜிசி பிரதிநிதியையும் சேர்த்த ஆளுநரின் உத்தரவிற்கு எதிரான மனுவும் அடங்கும்.
பல்வேறு பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்காமல் இருப்பதாகவும், தமிழக அரசு நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டு வருவதாகவும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு பல்வேறு வழக்குகளை தொடர்ந்திருந்தது. இதில் துணைவேந்தர் தேடுதல் குழுவில் யுஜிசி பிரதிநிதியையும் சேர்த்த ஆளுநரின் உத்தரவிற்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டதும் அடங்கும்.
இந்த நிலையில், இந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பர்திவாலா, மகாதேவன் ஆகியோரடங்கிய அமர்வு முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.
ஆளுநருக்கு எதிரான அரசின் வாதம்
அப்போது, தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, “பல பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்கள் நியமிக்கப்படாததால் அங்கு பல பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. அரசியல் சாசனப்படி ஆளுநர் நடந்துகொள்வதில்லை ஆளுநர் தேவையா என்ற வாதங்கள் ஒருபக்கம் நடந்து கொண்டிருப்பதையும் இந்த நீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும்.
தண்டனை நிறுத்திவைத்த பின்னர் செந்தில்பாலாஜி அமைச்சராக பதவிவேற்ற சென்றால் பதவிப்பிரமாணம் செய்து வைக்க மறுக்கிறார். அரசியல்சாசனத்திற்கு கட்டுப்பட்ட ஆளுநர் அரசியல் சாசன விதிமுறைப்படி நடந்து கொள்வதில்லை. சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பினால் அந்த மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிப்பதில்லை.
அரசியல் சாசன விதிமுறை 200ன் படி ஆளுநர் செயல்பட உத்தரவிட வேண்டும். மசோதா மீது ஆளுநர் முடிவெடுக்காமல் கிடப்பில் போட முடியாது. எனவே சட்டப்பிரிவு 200 ன் படி செயல்பட நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். உயர் நீதிமன்றம் தொடர்பான மசோதாவை தவிர வேறு எந்த மசோதாவையும் இரண்டாவது முறையாக ஆளுநரால் ஜனாதிபதிக்கு அனுப்ப முடியாது. கடந்த 2023 ஆம் ஆண்டில், ” அரசியல் சாசனப்படி ஆளுநர் செயல்பட வேண்டும்” என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் மீண்டும் ஆளுநர் காலதாமதம் செய்கிறார். அரசியல் சாசனம் கால நிர்ணயம் செய்யவில்லை என்பதற்காக ஆளுநர் முடிவுகளை எடுக்காமல் இருக்க முடியாது.
எந்தக் காரணத்தையும் கூறாமல், மசோதாவை கிடப்பில் போட்டு வைப்பது சட்ட விரோதம் ஆகும். மேலும், கேசரி ஹந்த் வழக்கின் தீர்ப்பின்படி, சட்டமன்றத்தில் மறுபடியும் மசோதா இயற்றப்பட்டால் அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும், அதனை கிடப்பில் போடக்கூடாது” என்று வாதிட்டார்.
ஆளுநருக்கு சொல்லப்பட்ட அறிவுரை

அவரது வாதத்தின் போது குறுக்கிட்டும், வாதம் நிறைவடைந்த பின்னரும் பேசிய நீதிபதிகள், “ஆளுநர் – மாநில அரசு இடையேயான மோதல் விவகாரத்தால் மக்களும் மாநில அரசும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆளுநர் எந்த அடிப்படையில் முடிவுகளை எடுக்கிறார் என வருகிற 6 ஆம் தேதியன்று நடைபெறும் விசாரணையின் போது மத்திய அரசுக்கு தெரிவிக்க வேண்டும்” என உத்தரவிட்ட நீதிபதிகள்,
“ஆளுநர் அரசியல் சாசனப்படி பேச்சுவார்த்தை நடத்தி முடிவெடுக்க வேண்டும் என அறிவுறுத்தியதோடு, ஆளுநர் விவகாரம் தொடர்பான வழக்கில் ‘larger intrest’ என்ற அடிப்படையில் ( தனிநபர் அல்லது ஒரு குழுவுக்கான நன்மையைக் காட்டிலும் சமூகத்தின் பரந்துபட்ட நன்மையை அதிகமாக கருதி) முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவித்து, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வருகிற வியாழன்று ஒத்திவைத்தனர்.
உச்ச நீதிமன்றத்தின் இந்த கருத்து மூலம், மசோதாக்கள் மீது முடிவெடுப்பதில் ஆளுநருக்கு குறிப்பிட்ட காலக்கெடு நிர்ணயிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.